
இயக்குநர் முருகதாஸ் கஜினி படத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறியுள்ளார் நயன்தாரா.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி கடுமையாக பேசி இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பேட்டியில் அவர், “கஜினி படக் கதையைக் கூறிய போது, படத்தின் இன்னொரு நாயகியான அசினுக்கு இணையாக எனது கேரக்டரும் இருக்கும் என இயக்குநர் முருகதாஸ் கூறினார்.
ஆனால் படம் ரிலீசான பிறகு அதில் எனது கேரக்டர் டம்மியாக்கப்பட்டிருந்தது பார்த்து நான் அதிர்ச்சியாகி விட்டேன்.அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டது எனக்குப் புரிந்தது.

அதில் இருந்து கதை கேட்பதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன். எனது 15 ஆண்டு திரை வாழ்க்கையில் நான் மறக்க நினைக்கும் படம் கஜினி தான்’ என நயன்தாரா கூறியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு வெளியான கஜினி படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் இரண்டாவது நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.
தற்போது நயன்தாரா, முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாரா இப்படி முருகதாஸை தாக்கி பேட்டி அளித்திருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.