முன்னாள் ஹீரோயின் நடிகை விஜயசாந்தியின் சம்பளத்தைக் கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழில், கல்லுக்குள் ஈரம், நெற்றிக்கண், தடயம், ராஜஸ்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ். உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் விஜயசாந்தி.
தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருந்த இவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.
பின்னர் அரசியலில் ஈடுபட்ட அவர், சினிமாவை ஒதுக்கி வைத்தார். 13 வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர், மீண்டும் நடிக்க வந்தார். மகேஷ் பாபு நடித்துள்ள சரிலேரு நீக்கவேரு என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். அவர் மீண்டும் நடிக்க வந்தது அவரது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். பிரகாஷ்ராஜ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். ஜனவரி 11 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி ஹிட்டானது. இதையடுத்து படத்தின் ஹீரோ மகேஷ்பாபு, அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.
மகேஷ்பாபு படத்தில் நடிக்க நடிகை விஜயசாந்திக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’13 வருடங்களுக்கு பிறகு நடிக்க வருவதால் தனக்கு ரூ.5 கோடி சம்பளம் வேண்டும் என்று நடிகை விஜயசாந்தி கேட்டுள்ளார். அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும் ஹீரோவும் விரும்பினர்.
இதனால் வேறு வழியில்லாமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அனில் சுங்காரா, நடிகை விஜயசாந்தியிடம் சம்பள விஷயம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால், அவர் சம்பளத்தைக் குறைக்க மறுத்துவிட்டாராம். இறுதியில் ரூ.4 கோடிக்கு சம்மதித்தார். அந்த தொகையை அவருக்கு கொடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கூறப்படுகிறது.