
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மலையாளத் திரையுலகில் பிரபலம் ஆனவரான நடிகர் திலீப்பும், அவரது மனைவி மஞ்சு வாரியாரும் பிரிவதற்கு நடிகை பாவனாதான் காரணம் என்று கூறப்பட்டது. அந்தக் காரணத்தால்தான், நடிகை பாவனாவை அவர் கடத்தி துன்புறுத்த ஏற்பாடு செய்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திலீப் மறுத்து வந்தார்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்சர் சுனில் திலீப்புக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் பாவனாவைக் கடத்த சொன்னது திலீப்தான் என்ற ரீதியில் எழுதி, திலீப்பிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். ஆனால் இதனை மறுத்த திலீப், பல்சர் சுனில் தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்தார். மேலும், பாவனா கடத்தல் விவகாரத்தில் எந்தவித சம்பந்தமும் தனக்கு இல்லை என்றும், இது தொடர்பான எந்த விசாரணைக்கும், சோதனைக்கும் தான் தயாராக இருப்பதாகவும் திலீப் தனது பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.
அவர் எழுதியிருப்பது: பாவனா கடத்தல் விவகாரத்துக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக எனக்கு ஆதரவாக உள்ள அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலையாளத் திரைப்பட உலகில் எனக்குள்ள மரியாதையைக் கெடுக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். என் மீது ரசிகர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கவும், விரைவில் வெளியாக உள்ள ராமலீலா திரைப்படத்தை வெளிவராமல் தடுக்கவும் நடைபெற்று வரும் கூட்டு சதி என்றே இதை நான் பார்க்கிறேன்.
கடத்தல் விவகாரத்தில் என்னைத் தொடர்புபடுத்தி எழுந்துள்ள சர்ச்சையால் கடந்த சில மாதங்களாக நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் நான் தயாராகவே உள்ளேன் என்று பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
இதனிடையே அவரது கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



