ஒரு திரைப்படம் நன்றாக ஓடி வசூலாகிவிட்டால் அதே போன்ற படங்கள் எடுப்பது நம்மூர் இயக்குனர்களின் வழக்கம் என்பது தெரிந்ததே. அந்தவகையில் ஆபாசத்தின் உச்சகட்டமாக கடந்த ஆண்டு வெளிவந்த ஹரஹர மகாதேவகி திரைப்படம் வெற்றி பெற்றதால் அதே இயக்குனர், அதே நடிகர், அதே தயாரிப்பாளரின் கைவண்ணத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து. ஷகிலா படங்களுக்கு இணையான இந்த படத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த படம் குறித்து பாரதிராஜா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்று சொன்னார்கள். சமீபகாலமாக, சில தரம்கெட்ட திரைப்படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியம், இதிகாசம், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள், இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள், இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்துபோய்க் கிடக்கின்றன. கொண்டாடிய வேண்டிய திரைப்படங்கள், இன்று கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறை காயாக சொல்லப்பட்ட விஷயங்களை, இன்று இலைபோட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத்துறை.
இது ஒருபக்கம் இருக்கட்டும்… மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்சார் போர்டு என்ன செய்து கொண்டிருக்கிறது? சரியான விஷயங்களுக்குக் கூட கத்திரி போட்ட நீங்கள், சமீப காலமாக ஆபாசப் படங்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? எவ்வளவோ காலங்களாய் அடங்கிக் கிடந்த தமிழ் இனம், தற்போது பிரச்சினைகளைக் கண்டு வீறுகொண்டு நிமிர்ந்து நிற்க முயற்சி செய்யும்போது, எங்களை பலவீனப்படுத்த நீங்கள் செய்யும் சூழ்ச்சியோ என்றுகூட சந்தேகப்படுகிறேன்.
ஆபாசத் திரைப்படங்களைப் படைக்கும் படைப்பாளர்களே… நீங்கள் எடுக்கும் திரைப்படங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? சற்று சிந்திப்பீர். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கு திரை ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்.
திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது எழுதப்பட்ட வாழ்க்கை என்பதை உணருங்கள். மத்திய தணிக்கைக்குழு அதிகாரிகளே… இரண்டாம் தரமான படைப்புகளை மறு பரிசீலனை செய்யுங்கள். இல்லையென்றால், சென்சாரையே சென்சார் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்”
இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.