மும்பையில் உள்ள தாராவி என்ற சேரிப்பகுதியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து அந்த பகுதி மக்களுக்கு கடவுள் போல் இருந்து வருபவர் காலா என்ற ரஜினி. 4 மகன்கள், மருமகள்கள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை நயவஞ்சமாக காலி செய்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற முடிவு செய்து அதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார். ஆனால் ரஜினி, நானா படேகரின் முயற்சியை முறியடித்து சம்பத்தை அடித்து விரட்டுகிறார்.
இதனால், அவமானம் அடைந்த சம்பத், ரஜினியை தீர்த்து கட்ட நினைக்கிறார். இந்த நிலையில் ரஜினியின் முன்னாள் காதலி ஹீமா குரேசி வெளிநாட்டில் இருந்து தான் பிறந்த ஊரான தாராவிக்கு வருகிறார். இவரும் குடிசைகளை அழித்து அடிக்கு குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதனால் இவருடைய முயற்சியையும் ரஜினி எதிர்க்கின்றார். கடைசியில், தாராவியை அழிக்க நினைக்கும் நானா படேகரையும், ஹீமா குரேசியையும் ரஜினி சமாளித்து தாராவியை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் மீதிக்கதை
காலா கேரக்டரில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் பாசமாகவும், போராளியாகவும் நடித்துள்ளார். குடும்பத்தினருடன் அன்புடன் இருக்கும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ரஜினி, மனைவி ஈஸ்வரிராவ்வுடனான ரொமன்ஸ், முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேசியுடனாவுடன் ஒருவித ஈர்ப்பு கலந்த ரொமன்ஸ் என நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். நானா படேகரை எதிர்க்கும் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை பார்க்க முடிந்தாலும், இந்த காட்சிகள் இன்னும் மாஸ் ஆக இருந்திருக்கலாம். ரஜினியின் நடன காட்சிகளில் இளமை துள்ளுவது போல், புரட்சி வசனம் பேசும்போது தீப்பொறி பறக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.
ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் வெகுளித்தனமான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி உள்ளார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைப்பதோடு கைதட்டலையும் பெறுகிறது.. அதுபோல், முன்னாள் காதலியாக வரும் ஹீமோ குரேசி, முதலில் மென்மையான நடிப்பையும், ரஜினியை பகைத்துக் கொள்ளும்போது அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தாலும் இவருடைய கேரக்டரில் அழுத்தம் இல்லை.
ரஞ்சித் செய்த சரியான விஷயம் இந்த படத்தின் கேரக்டர்களுக்கு ஏற்ற நடிகர், நடிகைகளை மிகச்சரியாக தேர்வு செய்தது. தவறான விஷயம் தனது சொந்த புரட்சி கருத்துக்களை படத்தில் கொஞ்சம் அதிகமாக திணித்தது. குறிப்பாக இரண்டாம் பாகம் முழுவதும் போராட்டம் தான் என்பதால் படம் ஒரு கட்டத்திற்கு மேல் போரடிக்கின்றது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையில் மாஸ் காண்பித்திருக்கிறார். முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்
மொத்தத்தில் ரஜினியின் மாஸ் காட்சி இல்லாத ஒரு புரட்சி படம்