இந்த படத்தை எல்லாரு ரசிக்கலாம்… ரஜினி முருகன் பட இயக்குநர் பேட்டி!

டிசம்பர் 4ம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினி முருகன் படம் பற்றி இயக்குனர் பொன்ராம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,
 
தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு வணக்கம்,

“வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்” வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் வெளிவரயிருக்கும் படம் “ரஜினி முருகன்” இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் நகைச்சுவை திரைப்படமாக இருக்கும்.

என்னுடையா “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தில் வேலைக்கு செல்லாமல் இருப்பதை கொள்கையாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞர்களின் வாழ்வியலை நகைச்சுவையாக கொடுத்திருந்தேன். ஆனால் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் எந்த விதமான சங்கமும் இடம் பெறாமல் சற்று புதுமையாக வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் வாழும் இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்வியலை காட்சியமைத்து இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் டீ கடை வைத்தாவது பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் பேரன் சிவகார்த்திகேயன், அவருக்கு தாத்தாவாக ராஜ்கிரண் இருவருக்கும் இடையில் நடக்கும் வாழ்வியலை சுவாரசியத்துடன் நகைச்சுவையாக கொடுத்திருக்கிறோம்.

திரைப்படத்தின் பெயர் “ரஜினி முருகன்” எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பையும், விளம்பரத்தையும் ஏற்படுத்தியது. மதுரை மீனாட்சி திரையரங்கில் படபிடிப்பு நடத்தினேன் படத்தில் ரஜினி சார் படம் வெளிவருவது போல் காட்சியமைப்பு நாங்கள் எந்த வித அறிவிப்பும் கொடுக்கவில்லை ஆனால் அந்த பகுதியில் உள்ள ரஜினி ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து ரஜினி திரைப்படம் வெளிவந்தால் எந்த மாதிரியான சூழல் அமையுமோ அதை ஏற்படுத்தி தந்தனர் அதுமட்டும் இன்றி ரஜினி சார் பெயர் வைத்திருக்கிறீர்கள் படம் வெற்றியடையும் என வாழ்த்தி சென்றனர் அந்த தருணம் படப்பிடிப்பில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

படத்தின் கதை எல்லா குடும்பத்திலும் பிரச்சனைகள் வரும் அவ்வாறு வரும் பிரச்சனைகளுக்கான காரணம் சின்னதாகவும் இருக்கும் அல்லது பெரிதாகவும் இருக்கும் அவ்வாறு சிவகார்த்திகேயனின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை அழகாகவும், எளிமையாகவும், நகைச்சுவை உணர்வுடன் கலந்து கொடுத்திருக்கிறோம். இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணமாகவும் குடும்பத்துடன் வந்து ரசிக்கும் விதமாகவும் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்றார் இயக்குநர் பொன்ராம்.