அதிஷ்டம் இருந்தா மட்டும் வெற்றி கிடைக்காது… சொல்கிறார் ஜெயம் ரவி!

24ஆம் தேதி வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவிக்கும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜெயம் ரவி ஒரு குத்து சண்டை வீரராக, வட சென்னையின் பிரபலமான குத்து சண்டை பரம்பரையின் வாரிசாக வந்து அசத்தி இருக்கிறார்.

2015 ஆம் ஆண்டில் ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இப்போது பூலோகம் மூலம் இந்த வருடத்தை ஜெயத்துடன் நிறைவு செய்கிறார்.

இதுகுறித்து ஜெயம் ரவி கூறும்போது, ‘தொடர் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் மட்டும் வருவதல்ல. ஒருங்கிணைந்த உழைப்பும் திட்டமிடுதலும், பெரியவர்கள் ஆசியும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். வெற்றியோ தோல்வியோ அது என் கவனத்தை சிதறிடபதில்லை. என் கடமையில் மட்டுமே கருத்தாக இருக்கிறேன். இன்று பூலோகம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

படப்பிடிப்பின் போதே நாங்கள் இந்தப் படம் வெற்றி பெரும் என்றுக் கணித்தோம். படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதில் எங்களுக்கு பெருமையே. ஒரு குத்து சண்டை வீரராகவே தெரிய வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். கடினமான பயிற்சியும் மேற்கொண்டேன். அந்த தீவிரத்தை திரையில் பிரதிபலிக்க வைத்த பெருமை இயக்குனர் கல்யாணுக்கு மட்டுமே சேரும்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானவர் ஜனா சார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நான் பேசும் வசனங்களுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் அவருக்கு பெருமை சேர்க்கும். அவரது வசனங்கள் சமுதாயத்தின் மேல் உள்ள அவரது அக்கறையையும் காட்டுகிறது. அவரது வசனங்கள் பூலோகம் பாத்திர படைப்புக்கு மேலும் வலு சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் சதீஷ் என்னுடன் ஏற்கனவே பேராண்மை படத்தில் பணியாற்றியவர். பூலோகம் திரைப் படத்தில் அவரது அசாத்திய பணி ஹாலி வூட் நுட்பக் கலைஞர்களுக்கு இணையானது என்றால் மிகை ஆகாது.

இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்தப் படத்தின் மிக பெரிய பலம் எனலாம். வட சென்னையின் வாழ்வியலை இசை மூலம் சேர்த்த விதத்தில் இந்த வெற்றிக்கு அவரும் பெரிய காரணம் ஆவார். மாஸ் படங்கள் என்றால் ஸ்ரீகாந்த் தேவா என்றுக் கூறும் வகையில் அவர் நிச்சயம் ஜொலிப்பார்.

இந்த நேரத்தில் ‘பூலோகம்’ தயாரித்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் சாருக்கும் நான் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். ஒரு மாஸ் ஹீரோவாக என்னை திரைப்பட வர்த்தகத்தில் காட்டுவதில் ‘பூலோகம்’ படத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது.

ஊடக நண்பர்கள் எனக்கு அளித்த ஆதரவு சொல்லில் அடங்காது. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாவற்றுக்கும் மேலே, எனக்கு உறுதுணையாக இருந்து என்றும் ஆதரவு தரும்என் ரசிகர்களுக்கும் கோடான கோடி நன்றி என்று கூறினார் உற்சாக புன்னகையோடு ஜெயம் ரவி.