பொய்யர்களின் கூடாரமாய்… பொறுப்பும் பொதுநலனும் இல்லாத தமிழ் ஊடகங்கள்!

Published:

madurai battars
madurai battars

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயாருக்கு தொற்று என பதிவிட்ட, பதிவிட்டு கொண்டிருக்கின்ற அனைத்து தமிழ் ஊடகங்களும், தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று என்று பதிவிடாதது ஏன்?

ஒரு விவகாரத்தில் நேரடியாக தொடர்புடையவர்களின் அடையாளத்தை குறிப்பிட மறுத்த ஊடகங்கள், வேறு ஒரு விவகாரத்தில் தொடர்பில்லாத இடத்தை குறிப்பிடுவதன் உள்நோக்கம் என்ன?

அந்த 71 வயது பெண்மணி, ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கோளாறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூச்சு திணறலுக்காக அரசு பொது மருத்துவமனையில் நேற்றைய முன் தினம் அனுமதிக்கப்படுகிறார். நேற்று இறந்து விட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று எப்படி அவருக்கு பரவியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பல நாட்களாக உடல் நலமில்லாத நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அவர் செல்லாத நிலையில், கோவிலை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? பின்னணியில் யார் ? யார் தூண்டுதலால் இந்த செய்தி பரப்பப்பட்டது? இது தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை. இந்த பொய் செய்திகளின் உற்பத்தி கூடம் எது? முதலில், ஒரு ஊடகத்தில், மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு தொற்று என்றும், அவர் அமெரிக்கா சென்று வந்ததை மறைத்து விட்டார் என்றும் செய்தி பரப்பப்பட்டது. பின்னர் இது தவறான செய்தி என்று உறுதி செய்யப்பட்டது. ஆக, இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் செய்தி என்பது உறுதியாகிறது.

உண்மையில் அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்திருந்து அதன் பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தால், கோவிலுக்கு சென்றவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள இந்த அறிவிப்பு அவசியமே. அதே போல் அந்த பட்டருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் (இன்னும் அவரின் பரிசோதனை முடிவு வெளிவரவில்லை) கூட இந்த வாதத்தை ஏற்று கொள்ளலாம்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

ஆனால், மார்ச் 20 ம் தேதி முதலே கோவில்கள் மூடப்பட்டன என்ற நிலையில் அவருக்கு கோவிலுக்கு வந்தவர்களிடமிருந்தோ அல்லது கோவிலுக்கு சென்றவர்களுக்கு இவரிடமிருந்தோ கிருமி தொற்று பரவுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல், இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது என்றால் இது திட்டமிட்ட சதி என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க முடியாது.

ஆனால், இதை தான் நாம் தப்லீக் விவகாரத்தில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தோம். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 85 விழுக்காட்டிற்கும் மேலாக தொற்று பரவல் தப்லீக் மாநாட்டுக்கு சென்று வந்தவர்களால் தான் ஏற்பட்டது என்பது அதிகாரபூர்வமான செய்தி என்பதும் , தொடர்ந்து தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்களும், அவர்களின் தொடர்புகளும் மசூதிகளுக்கும், வேறு சில இடங்களுக்கும் சென்று வந்து கொண்டிருந்ததும், அரசுக்கு ஒத்துழைக்க மறுத்ததும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத நிகழ்வுகள்.

அதை சொல்வதற்கு தயங்கிய, அச்சப்பட்ட, மறைத்த ஊடகங்கள், தற்போது தொடர்பே இல்லாத மீனாட்சி அம்மன் கோவிலை தொடர்புபடுத்த வேண்டிய அவசியம் என்ன? மதரீதியான அடையாளம் கொடுக்க கூடாது என்ற விதண்டாவாதத்தை தப்லீக் விவகாரத்தில் வைத்தவர்கள், தற்போது சம்பந்தமே இல்லாத விவகாரத்தில் மத அடையாளத்தை கொண்டு வந்தது ஏன்?

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

இவ்வளவு நடந்தும் இன்று வரை பதிவிட்ட தவறான செய்திகளுக்கு எந்த ஊடகமும் வருத்தம் தெரிவிக்க கூட முன்வரவில்லை என்பது பரபரப்பான செய்திகளை வெளியிடுவதையே குறிக்கோளாக வைத்து கொண்டுள்ளன சில ஊடகங்கள் என்பதை உணர்த்துகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் இனி இது போன்று பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை தவிர்ப்பதே ஊடக தர்மம்.

  • நாராயணன் திருப்பதி (செய்தி தொடர்பாளர், பாஜக.,)

Related articles

Recent articles

spot_img