
“காவிரிப் பிரச்னைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவோம்”என்கிறார் இயக்குநர் அமீர்!
“இந்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம்”என்கிறார் திருமுருகன் காந்தி!
காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் இரண்டும் அகில இந்தியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவை. இந்திய ஒற்றுமைக்கு உலை வைக்கும் இப்படிப்பட்ட பேச்சுகளை இந்தக் கட்சிகளின் தலைவர்கள் – அகில இந்தியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள்- இதுவரை கண்டித்துள்ளார்களா?
அமீர் போன்றவர்கள் ஏதோ சாதாரண வழிப்போக்கர்கள் இல்லை – திரைத்துறையில் பிரபல இயக்குநர்! ‘அவர் அப்படிப் பேசினாரா? தெரியாதே? எங்கள் கவனத்துக்கு வந்தால் நிச்சயம் கண்டிப்போம்’- என்ற வழக்கமான அரசியல் சால்ஜாப்பு எல்லாம் உதவாது! அவர் பேசியது ஏதோ உள் அரங்கில் நடந்த கூட்டத்தில் அல்ல! பகிரங்கமாக, டிவி காமிராக்களுக்கு முன்பாக! அதுவும் பல சமூக ஊடகங்களில் பரவியது மட்டுமல்ல, பகிரங்க டிவி செய்தியாகவே வந்து மாநிலம் முழுவதும் பரவி இருக்கிறது!

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் – அகில இந்தியக் கட்சிகள்- இந்த விவகாரத்தில் மழுப்பல், மௌனம் ஏதுமின்றி மிக வெளிப்படையாக தங்கள் கருத்தைக் கூற வேண்டும்.
அமீர் போன்றவர்களின், திருமுருகன் காந்தி போன்றவர்களின் வெளிப்படையான இந்திய இறையாண்மை எதிர்ப்பு, ஆயுதம் ஏந்திய போர் போன்ற பிரச்சாரத்தைக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் கண்டிக்கிறீர்களா? மௌனம் சாதிக்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், BJP போன்றவை கொள்கைகளில் கடுமையாக மாறுபட்டாலும் ‘அகில இந்தியக் கட்சி’ என்ற அடையாள (மாவது) உள்ளவை! அவற்றுக்கு இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் கடமையும் பொறுப்பும் உண்டு. அதே பொறுப்பு மாநிலக் கட்சிகளுக்கும் உண்டு – என்றாலும் தேசியக் கட்சிகளுக்குக் கூடுதல் பொறுப்பு உண்டு.
இன்று ‘மோடிக்கு சங்கடம் உண்டாகட்டும்’ என்று உள்ளூர ஆனந்தக் களிப்போடு, அமீர் போன்றவர்களின் ஆயுதப் போராட்டம், திருமுருகன் காந்தி போன்றவர்களின் ‘இந்திய அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?’- என்பது போன்ற பேச்சுகளை அனுமதித்து மகிழ்ந்து கொண்டிருந்தால், அதற்கு தேசியக் கட்சிகள் எதிர் காலத்தில் கொடுக்கப் போகும் விலை மிகக் கொடூரமாக இருக்கும்!
மாநில காங்கிரஸ் தலைமை – பீட்டர் அல்ஃபோன்ஸ் போன்ற சிறந்த பேச்சாளர்கள்- இதுவரை ஏன் இப்படிப்பட்ட பிரிவினைவாத, வன்முறைப் போராட்டப் பேச்சுகளைக் கண்டிக்கவில்லை என்பது தெரியவில்லை!
கண்மூடித்தனமான மோடி துவேஷம் – மோடியைத் திட்டுபவர் யாராயினும், அவர்களின் பேச்சு எவ்வளவு பிரிவினை விஷம் தோய்ந்து இருந்தாலும் அவற்றைக் கண்டிக்காமல் மௌனம் காப்போம் – முடிந்தால் உள்ளூர ரசிப்போம், மோடி ஆட்சி ஒழிந்தால் போதும், அதற்காக யாருடன் வேண்டுமானாலும் இணக்கம் காண்போம் என்று காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் முடிவெடுத்தால் அதற்கு இந்த தேசம் தரப் போகும் விலை மிகக் கொடூரமாக இருக்கும்!
‘பிரிவினைவாதத்துக்கு காமராஜ் பிறந்த மண்ணில், வ உ சி பிறந்த மண்ணில், இன்னும் தேச சுதந்திரத்துக்கு உயிர்விட்ட, கொடிகாத்த திருப்பூர் குமரன் பிறந்த மண்ணில், இன்னும் எண்ணற்ற தியாகிகள் தேச விடுதலைக்காக சிறைசென்ற இந்தத் தமிழ் மண்ணில் பிரிவினைவாதத்துக்கு இடமில்லை’- என்று சொல்லக் கூடவா திராணியற்றுப் போய்விட்டது காங்கிரஸ்! ‘அறிவாலய’ காண்டீன் சோறு அந்த அளவுக்கா இவர்களை உணர்வற்றுப் போக வைத்து விட்டது?!
இடது சாரிகளுக்கு ஒரு கேள்வி: இதே சீனாவின் ஒரு ‘PROVINCE’ ல் ஏதோ ஒரு ‘ரெபல்’ தலைவர், ஏதோ ஒரு பிரச்னையில் ‘ஆயுதப் போராட்டம் நடத்துவோம்’ என்றால் சீன அரசு அவரை விட்டு வைக்குமா?



