
சென்னை: ஏப்ரல் 10, 20, 28, 30 மற்றும் மே 5, 13, 20 ஆகிய நாட்களில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், ஏப்ரல் 10, 20, 28, 30, மே 20 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அன்றைய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது
மே 5, 13 தேதிகளில் மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கும். அன்றைய தேதிகளில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த 7 நாட்களிலும் பெல்ஸ் சாலை தற்காலிகமாக, ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும். கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு, இந்த மாற்றம் அப்படியே தலை மாற்றி செயல்படுத்தப்படும்.
காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலைக்கு மாநகர பேருந்துகள், அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது. கெனால் சாலை, பாரதி சாலையில் இருந்து ஒருவழிப் பாதையாக இருக்கும் என்றும் வாலாஜா சாலையில் இருந்து வாகன அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அண்ணா சாலை வழியாக M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் மட்டுமே வாலாஜா சாலையில் செல்லலாம் என்றும், அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் பெல்ஸ் சாலை, பாரதி சாலை, கெனால் சாலையில் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
B, R எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக வாகன நிறுத்துமிடம் செல்லலாம்
போர் நினைவுச் சின்னம், காந்தி சிலை வழியாக காமராஜர் சாலையில் வரும் மாநகர பேருந்துகள் பாரதி சாலையில் அனுமதிக்கப்படும் என்றும், M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலையில் சென்று நிறுத்தலாம் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் PWD எதிரில், கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்த வேண்டும் என்றும், அனுமதி அட்டையில்லாத வாகனங்களை கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



