வைகோ அவர்களே,
இதுவரை தற்கொலை செய்தவர்களைத் தியாகிகளாக்கி, படத்திற்கோ, சிலைக்கோ மாலை போட்டு, உரத்த குரலில் பேசி, வீர வணக்கம் என்று பம்மாத்து செய்வது உங்களுக்கு அரசியல் வியாபாரம். உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஒரு தொண்டன், தானும் பெரிய தியாகத்தை செய்ய வேண்டும் என்கிற பாணியில் உசுப்பிவிடும் பேச்சு அது என்று நீங்கள் தெரிந்தே தான் செய்தீர்கள்.
தொண்டர்கள் தானே தீக்குளிக் கிறார்கள், தலைவர்கள் வீட்டில் யாராவது தீக்குளிக்கிறார்களா என்கிற கேள்வி இருந்தது, நல்லவேளை, என் குடும்பத்தில் ஒருவர் தீக்குளித்து விட்டார் என்று சொல்கிறீர்கள். அந்த “நல்லவேளை” என்கிற வார்த்தை என்னை ஆச்சரியப் படுத்தவில்லை, அரசியல்தானே முக்கியம்.
குடும்பமே நொறுங்கிப் போய் இருக்கிறது என்கிறீர்கள் – அப்படித்தான் தீக்குளிக்கும் தொண்டனின் குடும்பமும் நொறுங்கிப் போகும் என்பது உங்களுக்குத் தெரியாதா? தெரியும், ஆனால் அதில் உங்களுக்குக் கிடைப்பது பொலிடிகல் மைலேஜ், அதனால் முதலைக் கண்ணீருடன் உங்கள் மேடைப் பேச்சை முடிப்பீர்கள்.
மீம் போடுபவர்கள் யோசித்துப் போட வேண்டும் என்கிறீர்களே, நீங்கள் யோசித்துதான் அரசியல் செய்கிறீர்களா? நீங்கள் செய்யும் அரசியலில் நாடு என்னவாகும் என யோசித்ததுண்டா? நீங்கள் செய்யும் அரசியலில் எத்தனை பேர் கொந்தளித்திருப்பர்கள் என நினைத்ததுண்டா? ராஜீவ் கொலையாளிகள் விடுதலை பற்றி பேசும் போது, ராஜீவுடன் இறந்தவர்களின் குடும்பம் உங்கள் பேச்சைக் கேட்டால் எவ்வளவு வயிறு எரியும் என்று யோசித்ததுண்டா? நீங்கள் எதைத்தான் யோசித்தீர்கள்?
இந்த நாட்டிற்கு உங்கள் அரசியலால் என்ன நன்மை என்று சொல்லுங்கள் பார்ப்போம்…
ஒரேயொரு நன்மையையாவது சொல்லுங்கள் பார்ப்போம்! அதுசரி, நாட்டின் நன்மை பற்றி உங்களிடம் பேசி என்ன பயன்! இந்த நாடே உங்களுக்கு வேண்டாம், தனித்தமிழ் சுடுகாடுதான் வேண்டும்.
“இந்தியானாக இருக்க வெட்கப் படுகிறேன்” என்று நாடாளுமன்றத்தில் பேசிய ஒரே எம்பி நீங்கள்தான். கள்ளத் தோணியில் வேறு நாட்டுக்குச் சென்று ஒரு சர்வதேச பயங்கரவாதியை ஆதரித்தவரும் நீங்கள்தான். உங்களிடம் நல்லரசியல் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
இனியாவது தமிழ்நாட்டைச் சுடுகாடாக மாற்றும் அரசியல் செய்யாமல் அமைதிப் பாதையில், நல்வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்லும் தலைவனைத் தேடிக்கொண்டே இருக்கிறேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லை என்ற ஒரு கசப்பான உண்மை முகத்தில் அறைகிறது!
இப்படிக்கு
தமிழக இந்தியன்
Karthik Srinivasan