
ஒரு சொல்…அரசியல் நாகரிகம். கண்ணியமும் கட்டுப்பாடும் அரசியல் களத்தில் தேவையானதாகும்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
அரசியலை சரியாக வாசிக்காமலும், புரிதல் இல்லாமலும் தமிழகத்திற்கு திமுக என்ன செய்தது? வைகோவின் ஸ்டெர்லைட் பயணத்தை தடை செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட்கள் என்ன செய்தார்கள் என தேவையில்லாமல் பேசி வம்பிழுக்கிறார் குமரி அனந்தனுடைய மகள், எச். ராஜா போன்றவர்கள். இவர்கள் பொது தளத்தில் பேசுகின்றோம் என்பதை மனதில் நிலை நிறுத்தி பொறுப்புடன் பேச வேண்டும்.
குமரி அனந்தன் அவர்கள் சாத்தூரில் டுடோரியல் காலேஜ் ஒன்றில் வாத்தியாராக பணிபுரிந்த போதே நன்கு அறிவேன் . அப்போது,இப்படி ஒரு மகள் பிறக்கவே இல்லை.
நாம் விமர்சிக்கும் ஆளுமைகளுடைய வயது, அனுபவம், களப்பணிகள் என அறிந்து அவர்களைப் பற்றி ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கலாம். தவறு எதுவும் இல்லை. இதுவே ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும். ஒருவர் தொடர்ந்து பொறுப்பின்றி மானாங்கானியாக பேசி வந்தாலும் அவரிடம் மானவாரியாக மைக்கை நீட்டும் பழக்கத்தை ஊடகங்களும் நிறுத்திக் கொள்ளவில்லை.
ஊடகங்கள் தங்களது ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ள இவர்களிடம் ஒலிவாங்கியை இவர்களிடம் தாராளமாக நீட்டுவதால் கருத்து கந்தசாமிகளும் கண்டபடி பேசுகின்றார்கள். ஊடகத்தின் வழியே மக்களிடம் பேசுகின்றோம், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம் தகுதியை அடுத்தவர்கள் மத்தியில் உயர்த்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ செய்யும் என புரிந்து பொறுப்பாக பேசுவதும் இல்லை.
ஸ்தாபன காங்கிரசில் நான் இருந்தபோது காமராசர் மறைவுக்குப் பின்னால் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்கள் பழ.நெடுமாறன், திண்டிவனம் இராமமூர்த்தி போன்றோர் இந்திரா காந்தி தலைமையில் இருந்த ஆளும் காங்கிரசில் இணைய விரும்பினர். அப்போது பா. ராமச்சந்திரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், மொரர்ஜி அமைச்சரவையில் ஜனதா ஆட்சியில் மத்திய மின்துறை அமைச்சராகவும் இருந்தார்.
குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்ற மற்ற பொதுச் செயலாளர்கள் எல்லாம் பா.ராவுடன் சேர்ந்து இணைப்பு கூடாது என்று கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது குமரி அனந்தன் இந்திராகாந்தியை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் எங்கும் நாகரிகமற்ற முறையில் இந்திரா காந்தியை குமரி அனந்தன் பேசவில்லை. ஆனாலும் தரமான வார்த்தைகளோடும், கண்ணியமான முறையிலும் இந்திரா காந்தியை விமர்சித்தவர் குமரி அனந்தன. அப்படியான நிலைப்பாட்டால் தான் இன்றும் அவர் மாற்றுக் கட்சியினரால் கூட மதிக்கப்படுகிறார்.
அரசியலில் #தகுதியேதடை, பணபலம், வாய்சவடால், சாதிபலம் , புஜபலம் கொண்டோர்கள் எல்லாம் அரசியல்கட்சி தலைவர்கள் என்றால் ஊடகங்களும் அதை கண்டுகொள்வதில்லை. ஊடக ஒளியில் தன் ஒலியை மட்டுமே அழுத்தமாக பதிவு செய்கின்றார்களே தவிர ஆழமான அர்தமான கருத்தை விதைக்கமாட்டார்கள்.
நமக்கு எதிர்முனையில் அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்கள் யார்? நீண்டகாலமாக அரசியலில் பயணிப்பவர்கள் இருக்கின்றார்கள். குறிப்பாக தலைவர் கலைஞர் அவர்கள் 80ஆண்டுகள், அண்ணாச்சி வைகோ 50 ஆண்டுகளுக்கு மேலாக, செயல் தலைவர் ஸ்டாலின் 50 ஆண்டு காலம், சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, பழ. நெடுமாறன் போன்றோர்களெல்லாம் 60 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருக்கின்றார்கள்.
அவர்களின் அனுபவம் கூட உங்களின் வயதை விட பெரியது என்பதை அறிந்து பேசினால் தானே அது தங்களின் தரத்தை உயர்த்திக் காட்டும்?
வெறுமனே குரல் உயர்த்தி பேசினால் அது உங்களை சிறுமைபடுத்தும் என அறிய வேண்டும். அறியாமையில் இருப்பது பிழையல்ல ஆனால் அறியாமையில் இருக்கின்றோம் என அறியாமலேயே இருப்பது ஆபத்தானது.
ஜனா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழகத்தில் 1960களில் ஜனசங்கத்தை வழி நடத்தியவர். கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முதலில் வழக்கு தொடுத்தவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி. கண்ணியமாக பேசக் கூடியவர்.
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மாற்றுச் சிந்தனையாளர். ஆனால் சிறந்த பார்லிமெண்டேரியன். #வாஜ்பாய், #அத்வானி, #முரளிமனோகர்ஜோஷி, #நானாஜிதேஷ்முக், #சுந்தர்சிங் பண்டாரி போன்ற பா.ஜ.க தலைவர்களை உருவாக்கியவர்.
காஷ்மீர் பிரச்சனையில் மாற்றுக் கருத்தினால் 1950-ல் நேரு-லியாகத் உடன்படிக்கையை எதிர்த்து, மந்திரி சபையில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறி 1951ஆம் ஆண்டில் ஜன சங்கத்தை உருவாக்கினார். நேருவுக்கு அபிமானமான நண்பராக இருந்த உபத்யாயாவே பண்டித நேருவை விமர்சித்துண்டு. அதே போல ராம் மனோகர் லோகியாவையும் உபத்யாயா விமர்சித்துண்டு. அவரது பேச்சுகளில் வெப்பம் இருக்கும், கடுமை இருக்கும். ஆனால் நாகரிகமும், நியாயயங்களும் உபத்யாயா பேச்சுகளில் வெளிப்படும்.
வாஜ்பாய் போன்றோர்களின் வரலாறுகளை வாசித்து அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியதை கற்றுக் கொண்டு பேசுவது நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்; இல்லை இப்படித்தான் பேசுவேன் என்றால் அது எதிர்காலத்தை மட்டுமல்ல நிகழ்காலத்திலேயே உங்கள் பெயரைக் கெடுத்துவிடும்.
உங்கள் இயக்கத்தின் முன்னணி நிறுவனத் தலைவர்களாக இருந்தவர்களின் போக்கை அறிந்து அதன்படி நடக்க வேண்டும். இல்லாவிடில் வரலாறும் உங்களை மன்னிக்காது.
#பாஜக #தீனதயாள்உபாத்தியாயா #ஜனாகிருஷ்ணமூர்த்தி #தமிழக_அரசியல் #கண்ணிய_பேச்சு #அரசியல்_நாகரிகம்
#Bjp #TN_Politics #KSRadhakrishnanPostings #KSRpostings
கருத்து: கே.எஸ். இராதாகிருஷ்ணன்
(திமுக., செய்தி தொடர்பாளர்)



