குற்றச்சாட்டு கூறப்படுவதாலேயே ஒருவர் ராஜினாமா செய்ய வேண்டுமா?
முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது நியாயமா?
சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய அரசியல் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இப்படிப் பதவி விலகியோர் பட்டியல் உள்ளது.
அரியலூர் ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பு ஏற்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்.
முந்த்ரா குற்றச்சாட்டு காரணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன் ராஜினாமா செய்தார்.
சுப்ரீம்கோர்ட் விசாரணை காரணமாக சுரங்கத்துறை அமைச்சர் மாளவியா,
நீர்மூழ்கிக்கப்பல் வாங்குவதில் புகார் கூறப்பட்டதால் வி.பி. சிங்,
பங்கு பரிவர்த்தனை குற்றச்சாட்டு காரணமாக அன்றைய நிதித்துறை இணை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் பதவி விலகி இருக்கிறார்கள்.
விமானவிபத்து காரணமாக மாதராவ் சிந்தியா,.
ஷா பானு வழக்கு தொடர்பாக ஆரிப் முகமதுகான்,
ஜெயின் ஹவாலா டயரி குறிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி,
சுப்ரீம்கோர்ட் கண்டித்ததால் ஆந்திர முதல்வர் சஞ்சீவரெட்டி,
பாலியல் புகார் காரணமாக கேரளப் போக்குவரத்து மந்திரி சசிதரன் ..இவ்வாறு பல உதாரணங்கள்!
வாஜ்பாய் காலத்தில் சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா காலத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்று தமிழக எடுத்துக்காட்டுகளும் இல்லாமல் இல்லை.
“ME TOO” ஹேஷ்டாக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்தம்.
இப்படியான சூழலில்-
“என் சம்பந்திக்கு நெடுஞ்சாலை ஒப்பந்தம் அளித்தால் என்ன தப்பு?” என்று முதல்வர் கேட்டது அரசியல் அகராதியில் இறுமாப்பாகவே கொள்ளப்படும்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் எந்த மத்திய அமைச்சர் மீது குற்றஞ்சாட்டப்பட்டாலும் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டாலும் தார்மிக அடிப்படையில் அவர்கள் விலக வேண்டும் என்று அதிகம் வலியுறுத்தியதே பா.ஜ.கதான்.
இந்த வாதத்தை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்பிப் பல அமைச்சர்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் முதல்வர் பதவி விலக வேண்டியது இல்லை என்ற நிலைப்பாட்டை பாரதிய ஜனதா எடுத்து இருப்பது விசித்திரம் தான்.
“தர்ம, அர்த்த, காம’’ என்பது வட மொழிச் சொற்றொடர்
அதே வரிசையில் வருவதே தமிழின் உயர் தத்துவங்களில் ஒன்றான ‘’அறம், பொருள், இன்பம்!’’
அறம் அழிந்து பொருளே முதன்மை என்று வந்தால் “அறம் பிழைத்தோர்க்கு அரசியல் கூற்றாகும்!” அல்லவா?
- பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்




