
விருதுநகர் அருகே கோவில் திருவிழாவிற்கு சீரியல் லைட் அமைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி தம்பதி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் அருகே காரிசேரி மாரியம்மன் கோவிலில் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இதையடுத்து இன்று 45வது நாள் மண்டல பூஜைக்காக கிராமத்தில் மைக் செட் மற்றும் சீரியல் லைட் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.
மைக் செட் அமைக்கும் பணியில் அதே ஊரை சேர்ந்த திருப்பதி ஈடுபட்டிருந்தார். சீரியல் லைட் அமைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பி மீது சீரியல் லைட் வயர் உரசி அதிலிருந்து ஏற்பட்ட மின் கசிவினால் மைக்செட் உரிமையாளர் திருப்பதி(28) மீது மின்சாரம் பாய்ந்தது.
0இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லலிதா (25) திருப்பதியின் பாட்டி பாக்கியம்(65) உள்ளிட்ட 5 பேர் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் திருப்பதி, அவரது மனைவி லலிதா,மற்றும் பாக்கியம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் உயிரிழந்த தம்பதிக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் லலிதா தற்போது 7 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் திருப்பதியை காப்பாற்ற முயன்ற அவரது உடன் பிறந்த சகோதரர் தர்மர் 20, மற்றும் உறவினர் கவின்குமார் 17 ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இச்சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.