September 28, 2021, 1:48 pm
More

  ARTICLE - SECTIONS

  6ஆம் ஆண்டில் … உங்கள் ‘தமிழ் தினசரி’!

  dhinasari 6thyear copy - 1

  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் – பரிந்து
  தினசரியை பார்முழுதும் பார்த்துப் படிக்க
  நினதருளை நீயெனக்குத் தா.

  தமிழ் – தினசரி டாட் காம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்று ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்…

  கடந்த 2015ஆம் வருடம் தை மாத முதல் நாளில் – பொங்கல் திருநாளில் தினசரி டாட் காம் தொடங்கப் பட்டது.

  தமிழகத்தில் இருந்து நடத்தப்படும், ஒரு நிறுவனமல்லாத | கட்சிப் பின்னணி இல்லாத | அரசியல் கட்சிகள் சார்ந்து அளிக்கப்படும் நிதி உதவி எதுவுமில்லாத | அரசியல்வாதிகள் எவரது உதவியும் கட்டளையுமில்லாத | நிறுவனங்களின் பின்னணி நிதி உதவி எதுவுமில்லாத | செய்திகளின் தரமறிந்து சுவையறிந்து இயங்கிய பத்திரிகையாளரான தனிநபரால், ஒரு குழுவை அமைத்து இயங்கும் செய்தித் தளமாக 5 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட முயற்சி இது.

  இம் முயற்சி இந்தத் தைப் பொங்கல் திருநாளுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்து, ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

  இடையில் எத்தனையோ சோதனைகள், தடங்கல்கள். நிதிச் சோர்வு வாட்டிய போது முழுநேரமும் இந்தத் தளத்துக்காக செலவிடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு, இடையே இரண்டரை வருடங்கள் வேறு நிறுவனங்களில் இதழியல் பணிக்குச் சென்றுவிட்டு… மீண்டும் கடந்த இரு வருடங்களாக… முழு நேரமாகவே தமிழ் தினசரியை இயக்கி வருகிறேன்..!

  நாட்டுப் பற்று, தேசிய சிந்தனை, தெய்வத் தமிழின் வீச்சு, தமிழின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் கட்டுரைகள் என நம் முன்னோர் எப்படி இயங்கினார்களோ அவர்கள் வகுத்த தர்மத்தின் பாதையில் தற்கால அரசியல் சூழலுக்குத் தக்க தளத்தை இயக்கி வருகிறேன்.

  இன்றளவும், நாம் தொடங்கப்பட்ட போது கொண்டிருந்த அதே தர்ம சிந்தனையில் இருந்து விலகாமல், தளத்தை இயக்கி வருகிறோம். எந்தக் கட்சியினரும், அமைப்பினரும், இம்மியளவும் நமக்கு எதுவும் ஈந்ததில்லை என்று அடித்துச் சொல்வேன்! அப்படி அடிமைப்படும் எண்ணமும் நமக்கு இல்லை! நாம் யார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்! என்பது நம் தாரக மந்திரமாகத் திகழட்டும்!

  பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி… எப்படி சமாளிக்கிறாய் என்பதுதான்!
  தர்மதேவன் இதுவரை தொடர்ந்து ஏதோ … வழிநடத்தி வருகிறான் என்பேன்.

  இருப்பினும் தளத்தின் ஹிட்ஸ்க்காக, சினிமா தொடர்பான செய்திகள் பதிவேற்றுவோம். அது நம் தளத்தின் வாசகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை என்பதை அறிவேன்.

  எனவே இந்த வருடம் முதல் வெள்ளித்திரை செய்திகள் ( www.vellithirai.news ) தனித் தளமாக இயங்கும். அதன் குறிப்பிட்ட செய்திகள் தினசரி சினிமா பகுதியில் பதிவேற்றப் படும்.

  இந்த 5 வருட காலத்தில் நம் தளத்துக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி செய்திகளை, கட்டுரைகளை அனுப்பியும், தாமாகவே பதிவிட்டும், ஆதரவு அளித்துவரும் அந்த ஓரிருவர்க்கு, நம் தளத்தின் சார்பில் ஒரு நினைவுப் பரிசு அனுப்பி வைக்கப் படும்.

  இந்த வருடம் தினசரி பணியாளர் குழு விரிவாக்கப்படும்.

  நெல்லைச் சீமை, பொருநைத் தமிழ் என தமிழன்னையின் புதல்வனாய்ப் பிறந்து தமிழ் படித்து வளர்ந்தவன் என்பதால், தமிழன்னையை முன்னிறுத்தியே தளம் அமைந்தது. எனவே தான் முகப்பில் தமிழன்னை வீற்றிருக்கிறாள்.

  இந்த 6ம் வருடத் தொடக்கத்தில் இருந்து தமிழன்னையும் புதுப்பொலிவு பெற்றிருக்கிறாள். நம் தளத்துக்கென தனிச்சிறப்புடன் நம் நண்பர் ஓவியர் வேதா, அழகிய தமிழன்னையின் ஓவியத்தை வரைந்து கொடுத்து, இதையே பயன்படுத்துங்கள், இந்தப் புத்தாண்டில் எனக்கு வந்த முதல் ஓவியப் பணி உங்களுடையதுதான்! 2020 கனவுகள், இலக்குகளுடன் நல்விதமாய் அமையட்டும் என்றார். அவருக்கு நம் நன்றி!

  வழக்கம்போல் நம் செய்திகளை சமூகத்தளங்களில் பகிர்ந்து தமிழ் தினசரியின் வீச்சை உலகம் அறியும் படி செய்து உதவி வரும் நட்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி!

  [email protected]
  மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்புங்கள்.

  என்றும் உங்கள் அன்பன்
  செங்கோட்டை ஸ்ரீராம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-