December 3, 2021, 4:28 pm
More

  பாமதி வாசஸ்பதி – பசியறியார்… கண் துஞ்சார்! ‘பாமதி’ என்று பெயர் வந்த சுவையான வரலாறு!

  pamathi - 1

  பாரத நாட்டுத் தத்துவத்தைப் பற்றி தீவிரமாக அறியத் துடிக்கும் யாராலும் ‘வாசஸ்பதி மிஸ்ரா’ வின் பெயரை எளிதாக மறக்க முடியாது.

  அத்வைத வேதாந்தத்தில் “பாமதி ஸ்கூல் ஆப் தாட்” என்பது வாசஸ்பதி மிஸ்ராவின் விளக்கத்தை ஒட்டியே தோன்றியது.

  இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளராகவும் தர்க்க சாஸ்திர நிபுணராகவும் போற்றப்படுகிறார் வாசஸ்பதி மிஸ்ரா. பாரத நாட்டுத் தத்துவ நூல்கள் அனைத்திற்கும் விளக்கம் எழுதி உள்ளார் அவர். ஆராய்ச்சியாளர்கள் வாசஸ்பதியை ஆதி சங்கரர், ராமானுஜரின் வரிசையில் வைத்து மதிக்கின்றனர்.

  வாசஸ்பதி, மிதிலா நகரில் பீகார் பகுதியில் பிறந்தார். அவரே தன் காலத்தை 898 என்று ‘நியாய சூசினி பந்தா’ என்ற தன் நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது எந்த காலண்டரைச் சேர்ந்தது என்று தெரியாததால் அவருடைய காலம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக பொதுவாக கருதப்படுகிறது.

  வாசஸ்பதி பல கிரந்தங்களை எழுதி உள்ளார். அவற்றுள் மிகப் புகழ் பெற்றது ‘பாமதி’ என்ற நூல். வியாச பகவான் இயற்றிய பிரம்ம (வேதாந்த) சூத்திரத்திற்கு ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதி உள்ளார். அந்த பாஷ்யத்திற்கு வாசஸ்பதி எழுதிய விளக்கமே ‘பாமதி’. வேதாந்தம் என்பது பாரத நாட்டு தத்துவத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்று. மற்றவை: நியாயம் (கௌதமர்), வைசேஷிகம் (கனாடு), மீமாம்சம் (ஜைமினி), சாங்கியம் (கபிலர்), யோகம் (பதஞ்சலி).

  வாசஸ்பதி மிஸ்ரா எழுதிய பிரம்ம சூத்திர விளக்கத்திற்கு ‘பாமதி’ என்ற பெயர் ஏற்பட்ட வரலாறு மிதிலா நகரின் நாட்டுப் புற பாடல்களில் மிகச் சுவையாகக் காணப்படுகிறது.

  தன் குருநாதரின் கட்டளைக்கு இணங்கி வாசஸ்பதி, பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் எழுத முன் வந்தார். குருநாதர் தன் மகளான பாமதியை வாசஸ்பதிக்கு மணமுடித்து வைத்து சிறிது காலத்திலேயே பிரம்ம பதமடைந்து விட்டார்.

  எழுத்து வேலையைத் தொடங்கிய வாசஸ்பதியை அப்பணி முழுமையாக ஆக்கிரமித்து விட்டது. காலம் சென்றதே தெரிய வில்லை. நாட்கள், மாதங்களாக, வருடங்களாக உருண்டன.
  ஒரு நாள்…..

  ஆதித்யன் மேற்கு திசையில் இறங்கி மறைந்தான். திசை எங்கும் இருள் சூழ்ந்தது. வாசஸ்பதி ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். பரவி வரும் இருள் அவருடைய எழுத்து வேலையைத் தடை செய்ய வில்லை.

  சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுதி வரும் பணி அது. தொடர்ந்து எழுதி வரும் மகா க்ரந்தம் முடிவை நெருங்கி விட்டதாக வாசச்பதிக்குத் தோன்றியது.

  இன்றைக்கு எப்படியுமிதனை முடித்து விட வேண்டும் என்ற ஒரே தீவிர சிந்தனையுடன் சூழ்ந்து வரும் இருளையும் பொருட்படுத்தாமல் எழுதிக் கொண்டே இருந்தார். வேலையை முடிக்கும் தீவிர எண்ணத்தால் மாலை சந்தியா வந்தனத்தைக் கூட மறந்தாற்போலிருந்தார். உணவு உண்பது பற்றி வேறே கூறத் தேவை இல்லை.

  இதை எல்லாம் கவனித்து வந்த பாமதி தன் கணவரின் எழுத்து வேலை இப்போதே முடிந்து விடாது என்பதை உணர்ந்து உள்ளேயிருந்து இலுப்ப எண்ணெய் விளக்கை எடுத்து வந்து ஏற்றி, கணவரின் அருகில் முக்காலியின் மேல் வைத்தாள்.

  காலையில் காட்டிலிருந்து தான் சேகரித்து எடுத்து வந்த பழங்களில் நன்கு பழுத்தவைகளாகத் தேர்ந்தெடுத்து சுத்தப்படுத்தி ஒரு இலையில் வைத்து அதே முக்காலியின் மேல் ஒரு பக்கமாக வைத்தாள். தன் கணவருக்கு பசி எடுக்கையில் ஒரு வேளை அப்பழங்கள் அவர் கண்ணில் பட்டு அவர் உண்ண வேண்டும் என்பது அவளுடைய விருப்பம்.

  வாசஸ்பதி இதொன்றையும் கவனிக்க வில்லை. ஒரே கவனமாக எழுதிக்கொண்டே இருந்தார். மாலை இருள் சிறிது சிறிதாக காரிருளாக மாறியது. தினமும் இவ்வேளைக்கு வாசஸ்பதி எழுந்திருந்து சாயம் சந்தியா வந்தனம், பூஜை முடித்து பழங்கள் உண்டு ஓய்வெடுப்பது வழக்கம். ஆனால் இன்றோ சந்தியா வந்தனம் கூடச் செய்ய வில்லை. பூஜையைப் பற்றிய சிந்தனையே இல்லை. உணவைப் பற்றி என்ன சொல்ல?

  இரவு மிகவும் நேரமாகி விட்டது. விளக்கில் எண்ணெய் குறைந்து விட்டது. திரியில் கரி படிந்து ஒளி மங்கத் தொடங்கியது. அதில் இருக்கும் எண்ணெய்க்கு அவ்விளக்கு இன்னும் ஒரு நான்கைந்து நிமிடங்கள் எரிந்தாலே அதிகம்.

  அதன் பிறகு அது அணைந்து விடலாம். தன் கணவரின் எழுத்துப் பணி தடைப்பட்டு விடலாம்; அந்த எண்ணம் தோன்றியதும் பாமதியின் உடல் குலுங்கியது. உடனே சுவாமி அறையிலிருந்து எண்ணெயை எடுத்து வந்து விளக்கில் நிறைய ஊற்றி, திரியில் படிந்த கரியை விலக்கி விளக்கைப் பிரகாசமாக எரிய விட்டாள். வெளிச்சம் திடீரென்று பிரகாசமானதால் வாசஸ்பதியின் கவனம் கலைந்தது.

  விளக்கின் பக்கம் பார்வையைச் செலுத்தினார். அங்கு ஒரு பெண்ணின் உருவம் அவருக்குத் தென்பட்டது. விளக்கின் ஒளியை சரி செய்து விட்டு தலையைக் குனிந்தபடி வீட்டிற்குள் செல்லும் ஒரு மாதுவைக் கண்டார்.

  “யாரிவள்? விளக்கைப் பிரகாசப்படுத்திய இவள் யார்?” இக்கேள்வி அவர் தலையைக் குடைய ஆரம்பித்தது.

  உள்ளே சென்று கொண்டிருந்த பெண்ணை உத்தேசித்து, “தேவி! நீ யார்?” என்று வினா எழுப்பினார்.

  அவள் அமைதியாக “சுவாமி! நான் தங்கள் மனைவி. என் பெயர் பாமதி” என்று பதிலளித்தாள்.

  “பாமதியா? என் மனைவியா? நமக்கு திருமணம் எப்போது நடந்தது?”

  “முப்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன.”

  “அப்படியா? இத்தனை நாள் எங்கே இருந்தாய்? உனக்கு உணவு உடை…? வீட்டை எவ்வாறு நடத்தினாய்?”

  “அண்டை அயலில் உள்ள பெண்களுக்கு சித்திரம் வரைய கற்றுக் கொடுத்து, அவர்கள் தரும் தனமோ, பொருளோ கொண்டு சிக்கனமாக வீட்டை நிர்வகித்து வருகிறேன்”

  “தேவி…! பாமதி! உண்மையில் இதெல்லாம் எனக்கு வியப்பை அளிக்கிறது. உன் நடத்தை உன் பெயருக்குத் தகுந்ததாகவே விளங்குகிறது. உன் அறிவுக் கூர்மையால் வீட்டை நன்கு நடத்தி வருகிறாய். அதனால்தான் என்னால் எழுத்து வேலையை முடிக்க முடிந்தது. உன் உதவி இல்லாவிடில் என்னால் எழுதி இருக்கவே இயலாது. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீ ஆதி சங்கரர் எழுதிய பாஷ்யத்திற்கு நான் எழுதியுள்ள இந்த விஸ்தாரமான வியாக்யானத்திற்கு ‘பாமதி’ என்ற உன் பெயரையே வைத்து, இந்நூலை உனக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்று கூறிய வாசஸ்பதி மிஸ்ரா நூலைத் தன் மனைவியின் கைகளில் கொடுத்தார்.

  பாமதி தினமும் போடும ரங்கோலியை கவனித்து பார்ப்பதன் மூலம் அதில் தோன்றும் ஜாமெட்ரிக் உருவங்களை வைத்து அவரால் பல சூத்திரங்களுக்கு விளக்க மளிக்க முடிந்தது.

  வாசஸ்பதி, ‘ஸ்மிருதிக்கு’ எழுதிய சிறப்பான விளக்கத்தால் ‘ஸ்மார்த்த வாசஸ்பதி’ என்று கற்றறிந்தவர்களால் புகழப்படுகிறார்.

  அவர் எழுதிய நூல்கள்: ஆசார சிந்தாமணி, தன நிர்ணயா, த்வைத சிந்தாமணி, பிபட சிந்தாமணி, சுத்தி சிந்தாமணி, வ்யவஹார சிந்தாமணி போன்றவை.

  ஹிந்து சட்டங்கள், விவாத சிந்தாமணி போன்ற நூல்களில் மரபு வழிச் சொத்துரிமை, கடன் கொடுக்கல் வாங்கல் , கூட்டுத் தொழிலில் லாபப் பங்கீடு, கால்நடை உரிமை, அன்பளிப்பை திரும்பப் பெறும் முறை (Gift resumption), எல்லை தகராறைத் தீர்ப்பது போன்ற பல சட்ட நுணுக்கங்களைப் பற்றி கச்சிதமாக விளக்கமளித்துளார்.

  ‘பித்ரு பக்தி தரங்கிணி’ என்ற கவிதை நூலையும், ‘ஸஹஸ்ர ராதிகா ரானா’ என்ற தத்துவ நூலையும் எழுதி உள்ளார்.

  வாச்சஸ்பதிக்கு ‘சர்வ தந்திர ஸ்வதந்த்ரா’ என்ற விருது உள்ளது. ஏனெனில், நியாயத்தைப் பற்றி எழுதுகையில் தானொரு நியாய வாதியை போலும், வேதாந்தத்தைப் பற்றி எழுதுகையில் ஒரு வேதாந்தியைப் போலும் எழுத அவரால் முடிந்தது.

  ” பசியறியார் ; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார்…” என்றெல்லாம் படித்துள்ளோமே! அதற்கு ஒரு உதாரணம்.. வாசஸ்பதி மிஸ்ரா.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,104FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-