
வாசகர்கள் அனைவருக்கும் நம் தமிழ் தினசரி தளத்தின் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்…
தீபாவளி பண்டிகை காலம் காலமாக நம் நாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது… பாரத மண்ணில் தோன்றிய அனைத்து பாரதீய சமயங்களிலும், அந்த அந்த சமயங்களில் கூறப்படும் ஏதோ ஒரு காரணத்தால் சிறப்பான வகையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
சமணர்கள் மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த நாளை தீபாவளி அன்று விழாவாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் சமணர்களுக்கு முக்கியமான பண்டிகையாக தீபாவளி அமைகிறது. மகாவீரர் அமாவாசையன்று பரி நிர்வாணம் அடைய முற்பட்டார். அந்த அமாவாசை இருளில் மகாவீரரின் அறிவு ஒளி பிரகாசம் அடைந்தது. உடலை விட்டு ஒளி வெளியேறுதல் என்ற பொருளில், தீபாலிகா என்று கொண்டாடப்பட்டதே பின்னாளில் தீபாவளி என்று ஆனதாக ஜைன சமயத்தவர் கூறுகின்றனர். அவர்களின் ஆன்மிகப் புத்தாண்டு பிரதிபதா தொடங்கும்- தீபாவளி அன்று வணிக நிறுவனங்களில் புதிய கணக்குகளை ஜெயின் சமூகத்தவர் தொடங்கி வைக்கின்றனர்.
தங்கள் குரு பரிநிர்வணம் அடைந்த தினம் என்பதால், ஜெயின் சமூகத்தினர் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க மாட்டார்கள். ஜெயின் ஆலயங்களில் மகாவீரரை வணங்கி வழிபட்ட பின்னர், நிர்வாண் லட்டு வழங்கப்படும். ஜெயின் ஆலயம், அலுவலகங்கள், கடைகளில் மின் விளக்குகள் எரிய விடப்பட்டு ஒளி கூட்டப்படும்.
இன்னொரு பாரதீய சமயமான சீக்கியத்தின் ஆறாவது குரு, குரு ஹர்கோவிந்த் மற்றும் 52 பேரை விடுதலை செய்ததைக் கொண்டாடும் வகையில் சீக்கிய சமூகத்தவர் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். ’பந்த் சோர் தீபாவளி’ என்ற பெயரில் அமைந்த இந்த தீபாவளியின்போது அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் உள்ளிட்ட அனைத்து குருத்வாராக்களிலும் வண்ண விளக்குகளால் ஒளி கூட்டப்படுகிறது. தியானம், பிரார்த்தனைகளுடன் இனிப்பு, உணவு பரிமாற்றம், உறவினர்களுக்கு பரிசளிப்பது என தீபாவளி கடைப்பிடிக்கப் படுகிறது. பொது இடங்களிலும் குருத்வாராக்களிலும் சீக்கிய சமூகத்தவர் கண்கவர் வாணவேடிக்கைகளை ஆர்வத்துடன் நடத்துகின்றனர்.
புத்த மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்கின்றனர். அசோகர் புத்த மதத்தைக் கடைப்பிடித்தார். அவ்வாறு மாறிய நாள் தீபாவளி அன்றுதானாம். இவர்களின் தீபாவளிக்கு ’அசோக் விஜயதசமி’ என்று பெயர். நேவார் புத்த மரபினர் லட்சுமிதேவியை வணங்கும் வகையில் தீபாவளி கொண்டாடு கின்றனர்.
இந்தியாவுகுக்ம் ஜப்பானுக்கும் கலாச்சார பண்பாட்டு ரீதியாக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்துக்கள் கடைபிடிக்கும் மரபுகளை ஜப்பானியர் நெடுங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். சனாதன இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் நம்புவது போல் தீபாவளி என்பது முன்னோர்கள் வழிபாடு தொடர்புடையது என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. தங்கள் முன்னோர்கள் நில உலகுக்கு வந்து தங்களை ஆசீர்வதித்து மீள்கிறார்கள் என்பது ஜப்பானியரின் நம்பிக்கை. எனவே விளக்குகளை ஏற்றி வைத்து அவர்களை பூமிக்கு வரவேற்று வழியனுப்பும் திருநாளாக ‘டோரோனாகாஷி’ என்ற பெயரில் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
இந்துக்களுக்கு தீபாவளி மிக முக்கியமான பண்டிகைதான்! இது முன்னோர் வழிபாடு தொடர்புடையது! எனவே இந்த நாளில் தான தர்மங்கள் செய்தல், விளக்கேற்றுதல், தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்தல், பட்டாசு வெடித்தல் மத்தாப்பு கொளுத்துதல் என்று, ஒளியுடன் தொடர்புடைய அனைத்தையும் செய்கின்றனர்…
திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை இந்தத் திதிகளில் குறிப்பிட்ட வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். எம தீபம் ஏற்றுதல் இதில் முக்கியமானது. .. பொதுவாக தீபாவளி நாம் என்ன செய்ய வேண்டும்?!
தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய்க் குளியல், பட்டாசு வெடித்தல், மத்தாப்பு கொளுத்துதல், விருந்து உண்ணல், பட்சணங்கள் பிறருக்குக் கொடுத்து, பெற்று உண்ணல் என நாம் களிக்கிறோம்… பண்டிகையைக் கழிக்கிறோம். இவற்றுடன் நாம் மேலும் ஒரு முக்கியச் செயலையும் செய்யலாம்.
புராதனமான ஆலயங்களுக்குச் செல்வோம். பூஜை முறையாக நடைபெற வழியில்லாத பழைமையான கோயில்களுக்குச் சென்று… அங்கே சந்நிதிகளில் விளக்கு ஒளிர, இயன்ற அளவு எண்ணெய், திரி வாங்கிக் கொடுத்து, தினமும் விளக்கு எரிய உதவி செய்ய வேண்டும். இயன்றால், சர்க்கரை பொங்கல் செய்யச் சொல்லி, நிவேதனம் செய்து, அன்பர்களுக்கு வழங்கலாம். ஆலய தெய்வங்களுக்கு வஸ்திரங்கள் கொடுத்து வரலாம். கோயில் குருக்கள், பட்டாச்சாரியர்கள், கிராமக் கோயில் பூசாரிகளுக்கு பொருளுதவி, வஸ்திரங்கள் கொடுத்து உதவிகள் செய்து தீபாவளி வழிபாட்டை நிறைவு பெறச் செய்யலாம்.
மகாளய பட்சம் தொடங்கி தீபாவளி வரை முன்னோர் வழிபாடு முக்கியத்துவம் பெறுவதால், இந்தக் கால கட்டத்தில் தான தர்மங்கள் செய்தல் முன்னோர் வழிபாட்டை நிறைவு பெறச் செய்யும். இந்துக்களாகிய நாம் தீபாவளியில் நிச்சயம் இதை செய்வோம். நம் ஆலயங்களும் அதன்மூலம் நம் தொன்மையான ஹிந்து தர்மமும் நிலைத்திருக்க நாமும் காரணர்களாய் இருப்போம்!!!