September 28, 2021, 12:57 pm
More

  ARTICLE - SECTIONS

  தனி நபர் துதிபாடல் நாட்டுக்கும் நிறுவனங்களுக்கும் நல்லதல்ல!

  கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரிதும் வெளியாகி பரபரப்படைந்த செய்தி – பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டி, அவரது உருவச் சிலையை வைத்து வழிபடப்போகிறார்கள் அவரது ஆதரவாளர்கள் என்பது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்காக அமைக்கப்பட்ட இந்தக் கோயிலின் கட்டுமானத்தை கவனித்து வந்த ஓம் யுவா அமைப்பின் தலைவர் ஜ்யேஷ் படேல் இது குறித்து தெரிவித்த போது, “வாழும் மனிதர் ஒருவருக்கு குஜராத்தில் கோயில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எங்கள் அமைப்பைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டவர்கள் இதன் கட்டுமானத்துக்காக நன்கொடைகளைச் சேகரித்தனர். இக்கோயிலில் தினமும் வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். “ராஜ்கோட் தொகுதியில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று குஜராத் முதல்வரானது முதலே அவரை எங்கள் அமைப்பினர் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். மாநில முதல்வராகவும், தற்போது பிரதமராகவும் அவர் ஆற்றிய பணிகளால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். எனவே, அவருக்காக ஒரு கோயிலை அமைக்க முடிவு செய்தோம். ஆரம்பத்தில் கருவறையில் மோடியின் புகைப்படத்தையே வைத்திருந்தோம். தற்போது ரூ.1.7 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட மார்பளவுச் சிலையை நிறுவியுள்ளோம். ஒட்டுமொத்தமாக இந்தக் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.7 லட்சம் செலவானது. எங்கள் அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மாதம்தோறும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர். அவர்களும் கோயில் கட்டுமானச் செலவுக்கு தங்களாலான நிதியை அளித்தனர். “கோயில் அமைந்துள்ள நிலமானது 10 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தாரியா கிராமப் பஞ்சாயத்தால் மதரீதியிலான நிகழ்ச்சிகளுக்காக அளிக்கப்பட்டது. கோத்தாரியா கிராமம், ராஜ்கோட் நகராட்சி எல்லைக்குள் வருகிறது. இக்கோயிலின் தொடக்க விழாவுக்கு மத்திய அல்லது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் வருவார்” என்றார் அவர். இவ்வாறு பிப்ரவரி 16ம் தேதி திறப்பு விழாவுக்காகக் காத்திருந்த கோவில் திடீர் தடங்கலைச் சந்தித்தது. பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டப்பட்டது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், இது குறித்து கருத்து தெரிவித்த மோடி, “எனக்கு கோயில் கட்டுகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சி அடைத்தேன். இந்தச் செயல் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது; என் மீது மதிப்பிருந்தால் எனது ‘க்ளீன் இந்தியா’ கனவை நிறைவேற்ற உங்களது முழு உழைப்பையும் அர்ப்பணித்தால் நான் பெருமைப்படுவேன் ” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தனது விருப்பமின்மையைத் தெரிவித்தார். இதை அடுத்து மோடியின் கோயில், திறப்பு விழா காணும் முன்பே மூடு விழா கண்டது. இந்தக் கோயில் இப்போது கட்டப்படவில்லை என்பதும், 2006-ம் ஆண்டு முதல் இக்கோயில் உள்ளதும், மோடியின் படமும், பாரத மாதாவின் படமும் வைக்கப்பட்டிருந்த இக்கோயிலில் மோடியின் சிலை வைக்கப்பட்டதால் மீண்டும் ஊடகங்களில் பலமாக செய்தி அடிபடத் தொடங்கியதும் இதன் பின்னணித் தகவல். இதன் பின்னணியில் சிலவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின்போது, பிரதமர் மோடி தனது பெயர் வைத்து தைக்கப்பட்ட ஆடம்பர கோட் சூட் ஆடையை அணிந்தது ஊடகங்களில் பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளானது. மோடியின் ஆதரவாளர்களோ இந்த விமர்சனத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறிப் போனார்கள். இதை அடுத்து வந்த தில்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருப்பது உண்மை. தில்லி தேர்தலில் பாஜக படுதோல்வி அடையக் காரணம், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்கச் சென்ற மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்ததுதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெள்ளிக்கிழமை செஞ்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மாநாட்டில் பேசியபோது கருத்து தெரிவித்துள்ளார். இது கொள்ளத் தக்கதா அல்லது தள்ளத் தக்கதா என்பது ஒரு புறம் இருக்க, இதே போன்ற கருத்து தேசிய அளவில் பரவலாக பேசப்படுவதும் உண்மை. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி போன்ற மஃப்ளரும் குல்லாயும் பெற்ற வெற்றி, தேசிய அளவில் மோடியின் ஆடம்பர ஆடை குறித்த பிரசாரத்தை வலுவாகவே மக்களிடம் சேர்த்திருப்பதும் கண்கூடு! இத்தகைய சூழ்நிலையில்தான், மோடிக்கு கோயில் கட்டி அவரது சிலையை வைத்து மக்கள் வழிபடும் செய்தி ஊடகத்தில் வெளியாகி மேலும் ஒரு பிரசாரத்தை மக்களிடம் வலுவாக முன்வைத்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு சிலை வைத்து வணங்கப்படுவது இது முதல் முறையல்லதான்! கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கோயில் கட்டப்பட்டது நினைவில் இருக்கலாம். இருப்பினும், தனது விருப்பமின்மையை டிவிட்டர் பக்கத்தில் மோடி, இந்திய கலாசாரத்தை சுட்டிக் காட்டி, வேண்டாம் என்று வற்புறுத்தியதன் பேரில் கோயில் திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக ஓம் யுவா இயக்கத்தின் ரமேஷ் உந்தாத் கூறியுள்ளார். “கோயில் திறப்பு விழா நடைபெறாது. பிரதமர் தனது ட்விட்டரில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவருக்கு கோயில் எழுப்புவது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இதனை நாங்களும் ஆமோதிக்கிறோம். எனவே கோயில் திறப்பு விழாவை ரத்து செய்கிறோம். மோடியின் சிலை அங்கிருந்து அகற்றப்படும். இனி இக்கோயிலில் பாரதமாதாவுக்கு மட்டுமே சிலை இருக்கும். மோடி, எங்கள் இதயங்களில் இருப்பார்” என்று கூறியுள்ளார். கோவில் விஷயம் ஒரு புறம் என்றால், சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மோடியை கடவுளாகச் சித்திரித்து, அவரது ஆதரவாளர்கள் சிலர் நடந்து கொண்ட செயல் பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்தது -இதனை மோடி எப்படி அனுமதித்தார் என்பதுதான்! ஹர ஹர மோடி என்ற அந்த கோஷம் சிலருக்கு அறுவறுப்பைத் தந்ததும் உண்மை. ”ஹர ஹர மகாதேவா என்ற கோஷம், சிவபெருமானுக்கு சொந்தமானது. நரேந்திர மோடியை புகழ்வதற்கு, அதை பயன்படுத்த வேண்டாம்,” என துவாரகா சங்கராச்சாரியார் சொரூபானந்தா பகிரங்கமாக ஊடகங்களில் அப்போது வேண்டுகோள் விடுத்தார். அப்போதும் இந்தக் கோரிக்கையை ஏற்ற நரேந்திர மோடி, ”இனிமேல், பிரசாரங்களில், என்னை புகழ்வதற்காக, ஹர ஹர மோடி என்ற கோஷத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்,” என கட்சியினரிடம் வலியுறுத்தினார். அதற்கு முன்னர் ஸ்வரூபானந்தா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன்ஜி பாகவத்தையும் சந்தித்துப் பேசி புகார் தெரிவித்தார். வாராணசி தொகுதியில் மோடி போட்டியிடுவதாக அறிவித்த பின், இந்த கோஷம் அதிகரித்து விட்டது. ‘ஹர ஹர மகாதேவா’ என்பது, சிவபெருமானை புகழ்ந்து எழுப்பப்படும் கோஷம். இது, கடவுளுக்கு உரியது. இந்த கோஷத்தை, தனி நபரை புகழ்வதற்காக பயன்படுத்துவது, சிவபெருமானையும், நம் நீண்ட பண்பாட்டையும் அவமதிப்பது போன்றது. கடவுளுடன் ஒப்பிடும் வகையில், தனி நபர் துதி பாடுவது, இந்து மதத்துக்கு விரோதமானது; ஏற்க முடியாதது. இந்த கோஷத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சங்கராசாரியார் ஸ்வரூபானந்தா மோகன்ஜி பாகவத்திடம் கூறினார். இதனை மனத்தில் வைத்துத்தான் மோகன்ஜி பாகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, தனி நபரைத் துதிபாடுவதையோ, வழிபடுவதையோ ஆர்.எஸ்.எஸ். ஏற்காது. அமைப்பின் தொண்டர்கள் இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போதும் இது ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் கருத்து வேறுபாடு, மோடிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தலைவர் என்ற வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன, ஆனால், நெடுங்காலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் இருந்த மோடி, அந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கையை அறியாமல் இருக்க மாட்டார். 1925ல் அந்த அமைப்பைத் தோற்றுவித்த டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார், தனி மனித வழிபாடு இங்கே இருக்கக் கூடாது என்பதால், காவி கொடியையே வணக்கத்துக்குரியதாக முன்வைக்கிறோம் என்று தெளிவாக அறிவித்தார். அதன் பின்னணியில் ஒரு காரணம் இருந்தது. மனிதர்கள் களங்கத்துக்கு உட்பட்டவர்கள். களங்கமில்லாத தூய தலைவர்கள் கட்சிக்கோ அமைப்புக்கோ அமைய வாய்ப்பில்லை. அத்தகைய தலைவர்கள் மீதான களங்கம், தனிநபர் துதி பாடப்பட்டு முன்வைக்கப் படும் காரணத்தால், அமைப்புக்கும் களங்கம் சேர்ந்ததாகி விடும். காரணம் கட்சியே தலைவர், தலைவரே கட்சி என்ற எண்ணம் வலுவாக இருந்துவிட்டால், தலைவர் செய்யும் தவறுகளும், தலைவர் மீதான அவதூறுகளும் கட்சிக்கு அல்லது அந்த அமைப்புக்கு சேர்ந்துவிடும். அதன் பின்னர் அந்தக் கட்சிக்கோ அமைப்புக்கோ வளர்ச்சியோ ஆதரவோ இருக்காது; அந்தத் தலைவர்களோடு அதுவும் சமாதியாகிவிடும். இந்த நிலை ஒரு அமைப்புக்கோ கட்சிக்கோ மட்டும் இருப்பதில்லை; நிறுவனங்களுக்கும் கூடத்தான்! ஒரு சர்வாதிகாரி ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு, தானே நிறுவனம் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டால், அந்த நிறுவனத்தின் சரிவு அந்தத் தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் சேர்ந்தே இருக்கும் என்பது கண்கூடு! அந்த வகையில் நரேந்திர மோடி வலுவான ஒரு தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல எண்ணலாம் தவறில்லை! ஆனால், தன் மீது எய்யப்படும் அவதூறு அம்புகள், கட்சிக்கும் நாட்டுக்கும் ஒரு வகையில் சேர்ந்துவிடும் என்பதை அவர் கவனத்தில் கொண்டாக வேண்டும்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-