
பத்மன்
“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்றொரு பழமொழி உண்டு. அதனோடு சுதந்திரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். யார் தம்மைப் பாராட்டி சீராட்டிக் கொண்டாடுகிறார்களோ அவர்களைத்தான் குழந்தை அன்போடு அண்டி நிற்கும். தெய்வமும் யார் தம்மைப் பக்தியோடு போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகிறார்களோ அவர்களை அண்டியே அன்பையும் அருளையும் சுரக்கும். அதேபோல் யாரெல்லாம் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்களோ அவர்களுக்குத்தான் சுதந்திரத்தின் பரிபூரண அருளும் பயனும் கிட்டும்.
அதனால்தான் மகாகவி பாரதியார் “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டொமென்று” ஆனந்தக் கூத்தாடிப் பாடுகிறார். அதுசரி, எது சுதந்திரம்? ஸ்வதந்திரம் என்பது இதன் மூலச் சொல். ஸ்வ என்றால் சுயம், தன்னியல். தந்திரம் என்றால் வழிமுறை, உத்தி. ஆக, ஸ்வதந்திரம் என்றால் தன்வழிமுறை என்று பொருள். பிறரால் திணிக்கப்படாத, தன்னால் தேர்ந்து செயல்படுத்தப்படும் வழிமுறையே, ஆளும் முறையே ஸ்வதந்திரம். சுதந்திரம் என்று எடுத்துக்கொண்டால், சு என்றால் நன்மை, தந்திரம் என்றால் வழிமுறை. அவ்வகையில் எது நன்மையைத் தருகின்ற வழிமுறையோ அது சுதந்திரம். அன்னியரின் கீழ் அடிமையாகிக் கிடப்பது ஒருபோதும் நன்மை தந்துவிடாது. ஆகையால் சுய ஆளுமை முறையே சுதந்திரம். அதுவும் நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
தூய தமிழிலே இதனை விடுதலை என்கிறோம். நம்மைப் பிணிக்கும் அனைத்து விதத் தளைகளில் இருந்தும் விடுவித்து நிற்கும் நிலையே விடுதலை. பிறரின் கட்டுப்பட்டில் இருந்து அகன்று, தன்னிச்சையாகச் செயல்பட கிடைக்கும் அதிகாரம் மட்டுமல்ல விடுதலை; தன்னைக் கெடுக்கும் தீய வழிகளில் இருந்து விலகி, சரியான வகையில் செலுத்துவது என்ற பொருளையும் அது தாங்கி நிற்கிறது. ஆகையால், தன்னைத்தானே ஆளும்திறமே சுதந்திரம், தான்தோன்றித்தனமாய் திரிவதல்ல சுதந்திரம்.
சும்மாவா கிடைத்தது இந்தச் சுதந்திரம்? எத்தனைப் பேர் இன்னுயிர் ஈந்தனர்? எத்தனைப் பேர் சிறைக் கொட்டடிகளில் வாடினர்? எத்தனைப் பேர் தமது சொத்து சுகங்களை இழந்தும் அயராது பாடுபட்டனர்? எத்தனைப் பேர் அன்னியர்களுக்கு எதிராக ஆயுதமேந்தியோ, இல்லையேல் அறவழியிலோ தொய்வின்றி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்? அந்த அத்தனைப் பேரின் தியாகத்தால், பலிதானத்தால், சலியாத உழைப்பால் கிடைத்தது இந்தச் சுதந்திரம்!
“இதந்தரு மனையின்நீங்கி இடர்மிகு சிறைபட்டாலும், பதந்திரு இரண்டும்மாறி பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடியின்னல் விளைந்தென்னை அழித்திட்டாலும், சுதந்திர தேவிநின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!” என்று மகாகவி பாரதியார் சுதந்திர தேவியின் அருளைப் போற்றிப் பாடியிருக்கும் பாடல், இதன் அருமை பெருமைகளை விளக்கும். இவ்விதம் கஷ்டப்பட்டு அடைந்த சுதந்திரத்தை நாம் கொண்டாட வேண்டாமா?
ஆகையால் வரும் 15 ஆம் தேதி நமது சுதந்திரத்தின் அம்ருத் மகோத்ஸவத்தை அதாவது அமுத விழாவை ஆனந்தமாகவும், அற்புதமாகவும் கொண்டாடி மகிழ்வோம். 75ஆவது ஆண்டு விழா என்பதற்கு அம்ருத் மஹோத்ஸவம் என்கிறார்கள். இதிலே ஓர் உட்பொருள் உள்ளது. அம்ருத் (அமுதம்) என்றால் இறவாத்தன்மை என்று பொருள். ஆகையால் நாம் பெற்ற சுதந்திரத்தை அழியாமல் பேணிக் காப்பதற்கு உறுதி பூணும் விழாவாக இந்த அம்ருத் மகோத்ஸவத்தைக் கொண்டாடுவோம்.
கொண்டாடுதல் என்பதற்கு பல்வேறு விதங்களிலே மகிழ்ச்சியைப் பரிமாறுதல், கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துதல், விழா எடுத்தல் என்பது மாத்திரம் பொருள் அல்ல. சுதந்திரத்தைக் கொண்டாடுதல் என்பதற்கு மனத்திலும் வாக்கிலும் செயலிலும் சுதந்திர உணர்வைக் கைக்கொண்டு ஆடுதல் என்றும் பொருள்.
தன்னை ஆளும் வழிமுறை அல்லவோ சுதந்திரம்? ஆகையால் தேசத்தின் மக்களாகிய, பாரதத் தாயின் குழந்தைகளாகிய நாம் அனைவரும் தேசத்துக்குப் பயனுள்ள வகையில் நம்மை ஆக்கிக்கொள்ளும் வழிமுறையை முதலில் கைக்கொள்ளுவோம். எப்படி நமது சுயத்தை நாம் மதிக்கிறோமோ, அதேபோல் பிறரது சுயத்தையும் சுதந்திரத்தையும் மதிப்போம். கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்ற பெயரிலே தறிகெட்டத் தனமாய் கருத்துகளை உதிர்ப்பதையும் பேசுவதையும் தவிர்ப்போம், எதிர்ப்போம்.
பல நூற்றாண்டு காலப் போராட்டத்துக்குப் பின் கிடைத்த இந்த சுதந்திரத்தை மதிப்போம், அதன் உண்மை மதிப்பை உணர்வோம். சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்துகொண்டால்தான் மீண்டும் அடிமையாகாமல் நம்மை விழிப்புடன் காப்பாற்றிக் கொள்ள முடியும். சுதந்திரத்தின் பகைவர்களான சாதி, சமய, மொழி, மாநிலப் பிரிவினை எண்ணங்களை வேரறுப்போம். குறுகிய சுயநல எண்ணங்களைக் களைவோம். சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தேசபக்தி, ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாடு, பண்பாட்டுப் பெருமிதம், வரலாற்று உணர்வு ஆகியவற்றை வளர்ப்போம். இவைதாம் சுதந்திரத்தை உண்மையாகக் கொண்டாடுதல் ஆகும்.
மகாகவி பாரதியார் மொழிந்த “எல்லோரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை, எல்லோரும் இந்திய மக்கள்” என்பதை மனத்தில் பதித்து, செயலில் காட்டுவோம். அதன்மூலம் நாம் பெற்ற சுதந்திரத்தை அமுதமாக்கி, அள்ளிப் பருகுவோம்!
ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத அன்னை வெல்க!