video call - 2026

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் வகுப்புகள் தடைப்படாமல் இருக்க ஆன்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கும் தமிழக அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதகங்களை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இணையதளங்களில் வரும் ஆபாச விளம்பரங்களால் மாணவர்களின் கவனம் சிதைவதாகவும், மொபைல், மடிக்கணினி போன்றவைகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை என குற்றம் சாட்டப்பட்டது. மேலும், நாள் முழுவதும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசு, ஆபாச இணையதளங்களை தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், மதுக்கடைகளை திறப்பதற்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை போல, ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் தமிழக அரசு எடுக்க தவறி விட்டதாகவும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, கிராமங்களிலும் 100-க்கு 44% பேரிடமும் நகரங்களில், 65% பேரிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளதால், ஆன்லைன் கல்வி அனைவருக்கும் சென்று சேருவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 4 மணி நேர வகுப்புகள் நடத்தினாலும் அதன் பின் வழங்கப்படும் வீட்டு பாடங்களும் மாணவர்களுக்கு சுமையாக அமைகின்றன. எனவே அரசு பள்ளிகளை போல தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் நடத்த வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு இது சாத்தியமில்லை என தெரிவித்து, ஆன்லைன் வகுப்புகளை குறைக்க வேண்டும் எனவும், வீட்டுப்பாடத்தையும், குறைக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்து வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending