தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு இனி அடுத்த வருடம் தான் இருக்கும் என்று கூறப் படுகிறது.
தமிழகத்தில் டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமே? என்று சென்னை உயர் நீதிமன்ற கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நவம்பர் 16ல் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு எதிரான வழக்கை நவம்பர் 20க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். டிசம்பருக்கு பின் திறப்பது என்பது நீதிமன்ற கருத்தே; அரசு சிறந்த முடிவெடுக்கும் என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதிக சிரமம் ஏற்படும் என்று உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.
முன்னதாக ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறந்த கடந்த வாரம், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட கொரோனா சோதனைகளில் பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இது நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதை அடுத்து, அரசு பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்தது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப விரும்பி ஒப்புதல் தெரிவிக்கிறார்களா என்பது குறித்து தகவல் அளிக்க ஒரு படிவத்தை அளித்துள்ளது அதில் பெரும்பாலான பெற்றோரும் விருப்பம் இல்லை என்று தெரிவித்தனராம்…
முன்னதாக பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்து நவம்பர் 12 நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் நீதிமன்றம் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறக்க லாமே என்று ஒரு ஆலோசனையை வெளியிட்டிருக்கிறது
மேலும் பண்டிகை காலம் என்பதால் இப்போது இரண்டாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் கொரோனா இரண்டாவது அலையைக் காரணம் காட்டி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மழை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் அடுத்தடுத்து இருக்கும் சூழ்நிலையில் டிசம்பருக்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என்ற முடிவுக்கு அரசும் வரக்கூடும் என்றே கருத்துகள் உலா வருகின்றன