மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள், அவசியம் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுடன் இன்று ராஜ்பவனில் ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில், பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி, சென்னையைச் சேர்ந்த காயத்ரி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சப்ரீன் இமன்னா, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஷ்ரேயா, மற்றும் சென்னையைச் சேர்ந்த மோனிஷா, விஷ்ணு வர்த்தன், விஷாலி, கௌரி, செம்மொழி அரசி, மோனிஷா தவசியம்மாள் உள்பட அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள், அவசியம் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும். இலக்கை அடைவதில் மாணவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். மொபைல் போன் பயன்படுத்துவதில் மாணவர்களிடையே கட்டுப்பாடு வேண்டும். படிப்பு தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.வணிகவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் சிஏ படிப்பும், வழக்கறிஞர் ஆக விரும்பம் கொண்ட மாணவர்கள் சட்டப் படிப்பையும் தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் அடுத்தடுத்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும்” என்று கூறி உற்சாகமூட்டினார்.
முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு நினைவுப் பரிசளித்து வாழ்த்தினார்.