சிவகங்கை மாவட்டம் ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டை முன்னிட்டு,
நாடு முழுவதும் இளங்கலை மாணவர்களுக்கு, வருகின்ற 19.09.2024 முதல் 21.09.2024 வரை வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது என்று, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏப்ரல்1, 1935 இல் நிறுவப்பட்டது. இந்த ஆண்டு வங்கியின் செயல்பாடுகளின் 90வது ஆண்டைக் குறிக்கிறது.
இவ்வரலாற்று மைல்கல்லை நினைவு கூறும் வகையில் தொடர் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு, ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டை முன்னிட்டு, நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் இளங்கலை மாணவர்களுக்கு வருகின்ற 19.09.2024 முதல் 21.09.2024 வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 வரை வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது.
இவ்வினாடி வினா போட்டியானது, நான்கு நிலைகளில் நடைபெறவுள்ளது. அதில், நாடு தழுவிய ஆன்லைன் போட்டியில் மாணவர்கள் இருவர் கொண்ட குழுக்களாக MCQ வடிவ வினாடி வினா போட்டியில் பங்கேற்பார்கள். ஒரு கல்லூரியில் இருந்து பல அணிகள் பங்கேற்கலாம்.
அவ்வாறு, ஆன்லைன் போட்டியின் மூலம் தகுதி பெறும் அணிகள், மாநில அளவிலான சுற்றில் பங்கேற்றல் வேண்டும். மாநில அளவிலான சுற்றில், மாநில அளவில் வெற்றி பெறும் அணிகளைத் தீர்மானிக்க, நேரில் நடக்கும் வினாடி வினா போட்டியில் பங்கேற்றல் வேண்டும்.
அடுத்தக்கட்டமாக, மாநில அளவிலான வெற்றியாளர்கள் மண்டல அளவிலான சுற்றில் பங்கேற்றல் வேண்டும். இம்மண்டல அளவிலான சுற்றானது ஐந்து வெவ்வேறு மண்டலங்களுக்கிடையே நடைபெறும்.
அவ்வாறு, ஐந்து மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டியின் வெற்றியாளர்கள் இறுதிப்போட்டியான தேசிய இறுதிப்போட்டியில் சிறப்பு பரிசுகளுக்காக போட்டியிட வேண்டும்.
மேலும், இவ்வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.08 இலட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.06 இலட்சமும் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டி குறித்து, கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள QR ஐ ஸ்கேன் செய்து விவரங்கள் அறிந்து,
விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.