
💥 மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025-இல் தொடங்கும் மாணவர் சேர்க்கை தொடங்கும்!
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? – முழுவிவரம்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 7.05.2025 தொடங்கி 27.05.2025-இல் முடிவடைவதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025-இல் தொடங்கும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 7.05.2025 அன்று தொடங்கியது. இன்றுடன் (27.05.2025) முடிவடைவதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025 அன்று தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-26-கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 07.05.2025 அன்று முதல் 27.05.2025 வரை, www.tngasa.in என்ற இணையதள வாயிலாக பெறப்பட்டது. இதுவரை 2,25,705 விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1.08,619 மாணவிகள். 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,84,762 மாணாக்கர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
சிறப்புப் பிரிவு மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 29.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். கல்லூரித் தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு, கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும். மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மாணாக்கர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும்.
27.05.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 30.06.2025-இல் துவங்கும்
29.05.2025 சிறப்புப் பிரிவு மாணாக்கர்களுக்கான தர வரிசைப் பட்டியல் கல்லூரிகளின் இணைய தளங்களிலும், கல்லூரி தகவல் பலகைகளிலும் வெளியிடப்படும்.
30.05.2025 பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளின் இணைய தளங்களிலும். கல்லூரி தகவல் பலகைகளிலும் வெளியிடப்படும்.
02.06.2025 & 03.06.2025 சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள் / விளையாட்டு வீரர்கள் / முன்னாள் இராணுவத்தினர் /அந்தமான், நிகோபார் தமிழ் மாணாக்கர்கள் / தேசிய மாணவர் படை/ பாதுகாப்புப் படைவீரர்கள்)
04.06.2025 முதல் 14.06.2025 வரை பொதுக் கலந்தாய்வு / தொடர் கலந்தாய்வு மற்றும் மாணாக்கர் சேர்க்கை
30.06.2025 முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் துவங்கும் நாள்





