
தெலுங்கில்: பி எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்.
“கணக்கிடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்த பாரத தேசதாருக்கு உலகம் கடன் பட்டுள்ளது. இல்லாவிடில் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் முன்னேறி இருக்காது” என்றார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.
சுலோகம்:
“யதாசிகா மயூராணாம் நாகானாம் மணயோயதா
ததா வேதாங்க சாஸ்த்ராணாம் கணிதம் மூர்தனி ஸ்திதம்” என்ற சுலோகம் கணிதத்திற்கு இருக்கும் சிறப்பைக் கூறுகிறது.
பொருள்: மயிலுக்குத் தோகையைப் போல, சில நாகங்களுக்கு நெற்றியில் இருக்கும் மாணிக்கத்தைப் போல, வேதாங்க சாஸ்திரத்திற்கு கணிதம் முக்கியமானது.
நட்சத்திர, கிரக, கோளங்களின் நகர்வுகள், வானியல் தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றுக்கு கணிதம் இன்றியமையாதது. வேத மந்திரங்களில் இருக்கும் கணிதத்தை வெளியில் எடுத்து வந்து அளித்ததே வேத கணிதம். கணிதத்தை எளிமையாகவும், விரைவாகவும் லாகவமாகவும் செய்யும் வழிகளைத் தேடுவதே கணித அறிஞர்களின் பணி. இந்த வகையில் பாரத தேச விஞ்ஞானிகள் செய்த முயற்சிகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. பண்டைய வழி முறைகளில் சில, இன்று பள்ளிகளில் கற்றுத் தருபவற்றை விட எளிமையாகவும் விரைவாகவும் செய்யக் கூடியவையாக இருப்பதால், பள்ளிகளுக்கு அப்பாற்பட்டு சில அமைப்புகள் ஏற்பட்டு, வேத கணிதத்தைப் பிரசாரம் செய்யத் தொடங்கின. மாணவ, மாணவிகள் இதனால் பயனடைந்து வருகிறார்கள்.
வேத கணிதத்தை நடைமுறையில் எடுத்து வந்த மகநீயர் ‘ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த மகராஜ்’ என்பவர். இவர் ‘வேதிக் மேத்தமெடிக்ஸ்’ என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார். அதில் பதினாறு சமஸ்கிருத சூத்திரங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றைக் கொண்டு கணக்குகளைக் குறைந்த நேரத்தில், குறைந்த முயற்சியோடு செய்வது எப்படி என்று விளக்கியுள்ளார். இவர் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று ரிஷிகளின் ஞானத்தை உலகறியச் செய்தார். அனைவரும் இதனை ’மேஜிக் மேத்தமெடிக்ஸ்’ என்று பாராட்டினர்.
‘அற்புதக் கணிதம்’ என்ற பெயரில் ‘திரு கண்டவல்லி அப்பல ராம்மூர்த்தி’ என்ற அறிஞர் 1986 ல் ‘ஆந்திர பிரபா’ வாரப் பத்திரிகையில் வேத கணிதம் பற்றித் தொடர் எழுதினார். பண்டிட் ராம்மூர்த்தி சமஸ்கிருதம், ரசாயனம், பௌதிகம், அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றில் நிபுணராக விளங்கினார். அவரை ’நடமாடும் கலைக்களஞ்சியம்’ என்றழைத்தனர்.
நிகழ்காலத்தில் டாக்டர் ‘ரேமெள்ள அவதானி’ என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் வேத கணிதத்தை போதித்துப் புகழ் பெற்றுள்ளார். இவர் செய்த சேவைகளுக்கு இவருக்கு ‘நந்தி அவார்டு’ கொடுத்து கௌரவித்தனர். இவர் பாரதிய கணித விஞ்ஞானத்தைப் பற்றி சிறந்த நூல்களை இயற்றியுள்ளார்.
திரு அடல்பிஹாரி வாஜ்பாயி பாரதப் பிரதமராக இருந்தபோது, அப்போதைய மனித வள மேலாண்மைத் துறை அமைச்சராக இருந்த திரு முரளிமனோகர் ஜோஷி மூலம் வேத கணிதத்தை பள்ளிகளில் கற்றுத் தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தேசதுரோக இடது சாரிகள் அதனை ‘காவி மயமாக்கல்’ என்று திரித்துக் கூறி அதனை முளையிலேயே தடுத்து நிறுத்தியது நம் துரதிருஷ்டம்.
எவ்விதமாவது மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமல்லவா? வேத கணிதம் அந்தப் பயனை நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஈடேற்றக் கூடியது. “எனக்கு கணக்குப் பாடம் பிடிக்காது” என்று கூறும் மாணவர்கள் கூட “கணக்கு எனக்குப் பிடிக்கும்” என்று கூறும் நிலைக்கு வருவார்கள்.
வேத கணிதத்தால் பல நன்மைகள் உண்டு. பெரியவர்கள் வாய்க் கணக்காகப் போடும் வழிமுறையைக் கற்றுத் தருவது, ரிஷிகளின் முயற்சி, மேதைமை போன்றவற்றோடு பரிச்சயம் ஏற்படுத்துவது. பாரத தேசத்தின் பழம்பெரும் ஞானத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவது போன்றவை, அதன் மூலம் தேச பக்தி மிகுந்த புதிய தலைமுறை உருவாகும்.
கால்குலேட்டரும், கம்ப்யூட்டரும் புழங்கும் நவீன யுகத்தில் இதன் தேவை என்ன என்று கேட்பவர்கள் உள்ளனர். நுழைவுத் தேர்வுகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கு வேத கணிதம் நிச்சயம் உதவும் என்பதில் ஐயமில்லை.





