பிளஸ் 2 பொருளாதாரத் தேர்வில் தவறாகக் கேட்கப் பட்ட 2 கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள்: நீதிமன்றம்

madurai-branch-high-court மதுரை: பிளஸ் டூ பொருளாதார்த் தேர்வுத் தாளில் ஒரு மதிப்பெண் வினாவில் தவறாகக் கேட்கப்பட்ட இரு வினாக்களுக்கு விடையளித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தலா 2 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்ட தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.சந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் மார்ச் 27ல் பிளஸ் டூ பொருளாதாரத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வினாத்தாள் முறைப்படி தயாரிக்கப்படவில்லை. மேலும், பொருளாதாரத் தேர்வின் மாதிரி வினாத்தாளுக்கு எதிராக அமைந்திருந்தது. வினாத்தாளில் பகுதி ஏ-யில் 50 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும், பகுதி பி-யில் 3 மதிப்பெண் கொண்ட 15 வினாக்களில் 10 வினாக்களுக்கும், பகுதி சி 10 மதிப்பெண் வினாக்களில் 6 வினாக்களுக்கும், பகுதி டி-யில் 20 மதிப்பெண் வினாக்களில் 6-ல் 3 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும். புத்தகக் குழு தயாரித்த மாதிரி வினாத்தாளில் பகுதி சி-யில் கேட்கப்பட்டிருந்த 10 மதிப்பெண் வினா, தேர்வின்போது வழங்கப்பட்ட வினாத்தாளில் பகுதி டி-யில் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் புரியாமலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், பதிலளிக்க இயலாதவாறும் இருந்தன. தமிழ் வழி மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாளில் பகுதி ஏ-யில் கேட்கப்பட்டிருந்த 18, 20-வது வினாக்கள் தவறானவை. திறமையான மாணவர்கள்கூட இவ்விரு வினாக்களுக்கும் பதிலளிக்க முடியாது. 20 மதிப்பெண் வினாக்கள், 10 மதிப்பெண் வினாவாக இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க மாணவர்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் மாணவர்கள் சரியாகத் தேர்வை எழுதவில்லை. ஏற்கெனவே, 2013-ம் ஆண்டிலும் பிளஸ் டூ தேர்வில் பல பாடங்களில் வினாத்தாள் குழப்பமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்து மாணவ, மாணவியர் சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே, பொருளாதார வினாத்தாள் முறையற்ற வகையில் தயாரிக்கப் பட்டிருப்பது குறித்து மூத்த பொருளாதார ஆசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்தவும், பொருளாதாரத் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இதில் முடிவெடுக்கும் வரை, பொருளாதாரத் தேர்வுத்தாளை மதிப்பீடு செய்யத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக் குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் திங்கள் அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். விசாரணைக்குப் பின், பிரிவு ஏ-யில் கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினாவில் 18 மற்றும் 20-வது வினாக்களுக்கு தலா 1 மதிப்பெண் வீதம் விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் தலா 2 மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவ்விரு வினாக்களுக்கு விடையளித்த அனைவருக்கும் தலா 2 மதிப்பெண் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.