“பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!”
(மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)
(பாமர மக்களுக்காக கோயில் மணியை அடிக்கச் சொன்ன பரமாசார்யா) (பெரியாவாளின்
யுக்தி)
நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
30-08-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
மகாபெரியவா க்ஷேத்ராடனம் பண்ணிண்டு இருந்த
காலகட்டம் அது. யாத்திரை ஆந்திரா பக்கமா
நடந்துண்டு இருந்தது.
அந்த மாதிரியான யாத்திரைகள் பண்ற சமயத்துல
பெரியவாளோட சிஷ்யர்கள் கொஞ்சம் பேர்தான் போவா.
அதோட உள்ளடங்கிய பகுதிகள் வழியா போவார். சில
தலங்களுக்குப் போறச்சே, பெரியவா வந்திருக்கறதை
பக்கத்து ஊர்க்காரா கூட தெரிஞ்சுக்க முடியாது.வழியில்
கோயிலோ, குளமோ, மரத்தடியோ,பாழ் மண்டபமோ!
‘இன்னிக்கு இங்கே தங்கிக்கலாம்!’னு ஆசார்யா எங்கே
சொல்றாரோ அங்கேதான் ஜாகை.
அந்த சமயத்துல ஒருநாள், ஒரு சின்ன கிராமம் வழியா
போயிண்டு இருக்கறச்சே, அங்கே புராதனமான சிவன்
கோயில் ஒண்ணு இருந்ததைப் பார்த்தார்,பரமாசார்யா.
சுவாமி தரிசனம் பண்ணலாம்னுட்டார். உள்ளே போன
சமயத்துல உச்சிகால பூஜை நடந்துண்டு இருந்தது.
அன்னிக்கு அங்கே இருந்த அர்ச்சகருக்கு என்ன அவசரமோ
மகாபெரியவாளை அவசர அவசரமா வரவேற்றுட்டு,
உச்சிகாலபூஜையை ஏதோ ஒரு வேகத்தோட பண்ணி
முடிச்சார்.சுவாமி தரிசனம் முடிஞ்சதும் பெரியவா
ப்ராஹாரத்தை சுத்தி வரத் தொடங்கினார். அங்கே இருந்த
மண்டபத்தைப் பார்த்ததும்,”இங்கே கொஞ்ச நாழி தங்கி
சிரம பரிகாரம் செஞ்சுக்கலாம்னு தோணறது” அப்படின்னு
சொன்ன பரமாசார்யா, அந்த மண்டபத்தோட மூலைலை
போய் சட்டுன்னு படுத்துண்டுட்டார்.
பரமாசார்யா பள்ளி கொண்டுட்டார்னா அப்புறம் சீடர்கள்
என்ன செய்வா? அவாளும் அங்கேயே இன்னொரு பக்கமா
உட்கார்ந்து ஓய்வெடுக்க ஆரம்பிச்சுட்டா.
இந்த நேரத்துல அங்கே சுவாமி சன்னதியில் உச்சிக்கால
பூஜையை முடிச்சிருந்த அர்ச்சகர், வந்திருந்த
பக்தர்களுக்கெல்லாம் விபூதி குங்குமம்னு பிரசாதம்
குடுத்து முடிச்சார். ஏற்கெனவே ஏதோ அவசரத்துல
இருந்த அவர், மகாபெரியவா வந்திருந்ததையே
மறந்துட்டாரா இல்ல ஆசார்யா புறப்பட்டுப்
போயிருப்பார்னு தானாவே நினைச்சுண்டாரோ
என்னவோ சன்னதியை சாத்திட்டு, கோயிலைப்
பூட்டிண்டு கிளம்பிப் போய்ட்டார்.
பெரியவா கோயிலுக்குள்ளே வந்து சுவாமி தரிசனம்
பண்ணினார் இல்லையா? அப்போ அங்கே இருந்தவாள்ல
சிலர் பரமாசார்யா வந்திருக்கிற விஷயத்தை,
“பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!(மகாபெரியவாங்கற
தெய்வம் வந்திருக்கார்) அப்படின்னு வெளீல போய்ச்
சொன்னதுல விஷ்யம் வேகமா பரவிடுத்து. அக்கம் பக்கத்து
கிராமங்கள்ல இருந்து நிறைய பேர்,பரமாசார்யாளை
தரிசனம் பண்றதுக்காக கோயிலுக்கு வர ஆரம்பிச்சா.
பதைபதைக்கற வெய்யில்ல நண்டு,சிண்டு குழந்தைகளை
இடுப்புலயும்,தோள்லயும் தூக்கிண்டு அவா அவாளல முடிஞ்ச
காணிக்கையையும் எடுத்துண்டு அவசர அவசரமா வந்தவா,
கோயில் வாசலுக்கு வந்ததும் அப்படியே அதிர்ந்து போய்
நின்னா, காரணம், கதவைச் சாத்திப் பூட்டி பெரிய பூட்டு
தொங்கிண்டு இருந்தது.
‘அடடா… பெத்தச்ச தேவுடை தரிசனம் பண்ண வந்தா, நாம
வர்றதுக்குள்ளே அவர் புறப்பட்டுட்டாரே..அதாவது
பரவாயில்லை இந்தக் கொளுத்தற வெயில்ல அவர் எந்தப்
பக்கம் போயிருப்பார்?’ அப்படின்னு ஆளாளுக்கு
வருத்தத்தோட சொல்லிண்டா.சிலர் ஏமாற்றத்தோட
திரும்பி நடக்கவும் ஆரம்பிச்சுட்டா.
அந்த சமயத்துலதான் நடந்தது ஒரு அதிசயம்!
மோனத்தவத்துல இருக்கறாப்புல ஒருக்களிச்சுத் தூங்கிண்டு
இருந்த ஆசார்யா சட்டுன்னு எழுந்தார். தனக்கே உரித்தான
சிட்டிகைச் சொடுக்குல இன்னொரு மூலையில் தூங்கிண்டு
இருந்த சிஷ்யர்களை எழுப்பினார்.
“ஏண்டா வெளீல ஜனங்கள் நிறையப்பேர் வந்திருக்கா போல
இருக்கே.எல்லாரும் காத்துண்டிருக்காளா,என்ன?” எல்லாம்
தெரிந்தவர்,எதுவுமே தெரியாதவர் மாதிரி சிஷ்யர்களிடம்
கேட்டார்.
சிஷ்யர் அவசர அவசரமாக கதவு இடுக்கு வழியே
பார்த்துட்டு “ஆமாம்,பெரியவா! ஆனா,கதவு வெளீல சாத்திப்
பூட்டியிருக்கு” என்று சொன்னார்.
“அடடா அவாள்லாம் தரிசனம் பண்ண முடியாம ஏமாந்து
திரும்பிடுவாளே..!” சொன்ன பரமாசார்யா,அந்த சீடனைப்
பார்த்து அடுத்த கட்டளையைப் பிறப்பிச்சார்.
“சரி, நீ ஒண்ணு பண்ணு.சட்டுன்னு அந்தக் கல்லுமேல ஏறி
அங்கே தொங்கற கண்டா மணியை பலமா அடி!”
ஆசார்யா ஆணை பிறப்பிச்ச அடுத்த நிமிஷம் அந்த இடமே
அதிர்ற மாதிரி மணி ஓசை எழும்பித்து!.
திரும்பிப் போகத்தொடங்கியிருந்த அத்தனை பேரும்
அப்படியே நின்னா. ஏதோ புரிஞ்சுண்டவாளா சந்தோஷமா
கோயில் பக்கமா ஓடி வந்தா.இதுக்குள்ளே கோயிலுக்குப்
பக்கத்துல இருந்த காவல்காரன் மணிச் சத்தம் கேட்டு
ஓடி வந்தான். பூட்டின கோயிலுக்கு உள்ளேர்ந்து மணிச்
சத்தம் வருதேன்னு திகைச்சு தன்கிட்டே இருந்த மாத்து
சாவியால் கதவைத் திறந்தான்.
அப்புறம் என்ன, பாமர ஜனங்கள் எல்லாரும் தங்களோட
‘பெத்தச்ச தேவுடு’வான பரமாசார்யாளை ஆனந்தமா
தரிசனம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிண்டா.
மணி அடிச்சு ஆராதனை பண்ண வேண்டிய தெய்வத்துக்கு
சமமான மகாபெரியவா, கோயில் மணியை ஒலிக்கப்
பண்ணி, தங்களை வரவழைச்சு தரிசனம் தந்ததை
நெகிழ்ச்சியோட சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டா
எல்லாரும்.
பரமாசார்யாளோட வந்தவா எல்லாரும் கோயிலுக்குள்ளே
தான் இருந்தா.ஆனா, ஆசார்யாளுக்கு மட்டும் அவ்வளவு
ஜனங்கள் தன்னை தரிசனம் பண்ண வந்திருக்கிறது
எப்படித் தெரிஞ்சுது? திரும்பிப் போக நினைச்சவாளை
கோயில்மணியை அடிச்சுக் கூப்பிடணும்னு எப்படித்
தோணித்து? எல்லாம் அந்த பரமேஸ்வரனுக்குத்தான்
வெளிச்சம்!




