ஒருசில பல்கலைகழகங்களில் நான் எழுதி எங்கள் காம்கேர் பப்ளிஷ் செய்துள்ள புத்தகங்கள் பாடதிட்டமாக உள்ளன. ஒருசில பல்கலைக்கழகங்களில் என்னிடம் கான்செப்ட் கொடுத்து எழுதி மட்டும் தரச் சொல்லியும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் என்னிடம் ஒரு புத்தகம் எழுதித்தர கேட்டார்கள். மாணவர்களுக்கு கல்வியுடன் வாழ்வியலையும் சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் துறைத்தலைவர் என்னிடம் போனில் பேசிய முறையில் நான் சற்று வருந்தினாலும் சுதாகரித்துக்கொண்டு அவருக்கு புரியும் விதத்தில் பதில் சொன்னேன்.
‘மேடம்… இந்த பணியை சுதாகர் (பெயர் மாற்றம் செய்துள்ளேன்) என்ற எழுத்தாளரிடம் கொடுத்தோம்… ஆனால் அவர் ரொம்ப பிசி… அதனால் உங்களிடன் கொடுக்க நினைக்கிறோம்…’
ஏற்கெனவே அவர்கள் என்னிடம் ஒருசில பிராஜெக்ட்டுகளை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே நான் செய்து கொடுத்திருப்பதால் நான் சீக்கிரம் முடித்து விடுவேன் என்று சொல்ல வருகிறார். ஆனால் அவர் குறிப்பிடும் எழுத்தாளர் பிசி என்று சொல்லும் இடத்தில்தான் எனக்கு கொஞ்சம் இடறியது.
‘அப்போ நான் என்ன வெட்டி ஆஃபீசரா?’ என மனதில் நினைத்துக்கொண்டு, துறைத் தலைவரை போனிலேயே முறைத்துவிட்டு, ‘அப்படியா சார்… அவர் எங்கு வேலை பார்க்கிறார் சார்?’ என்றேன்.
‘ஒரு பத்திரிகையில் ஐடி துறையில் புரோகிராமர்…’
‘ஓ… அப்படியா… அப்படின்னா அவர் காலையில் 10 மணிக்கு ஆஃபீஸ் சென்றால் இரவு 8 மணிக்குள் வீடு திரும்பி விடுவார் அல்லவா?’
‘ஆமாம் மேடம்…’
‘சரி சார். ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட கால அளவு வேலை செய்யும் ஒருவருக்கே நேரம் இல்லை, பிசி என்றால்…. ஒரு நிறுவனத்தை நடத்தும் எனக்கு வருடம் முழுவதும் 24 * 7 ஏதேனும் ஒரு வேலை அல்லது பிராஜெக்ட் அது குறித்த சிந்தனை, அடுத்த பிராஜெக்ட் எடுக்கும் நிர்பந்தம், மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயம், சர்வர் ப்ராப்ளம் இப்படி ஏகப்பட்ட பணிகளை மனதில் சுமந்துகொண்டே தான் வளைய வர வேண்டி இருக்கிறது… ஆனாலும் ஒரு பணியை ஒப்புக்கொண்டால் அதற்கான நேரத்தை ஒதுக்கி செய்துதரும் திறமை என்னிடம் உள்ளது. நான் சீக்கிரம் முடித்துக்கொடுத்து விடுவதாலேயே நான் பிசி இல்லை என்று அர்த்தம் கிடையாது….’ என்று அவருக்கு புரியும்படி எடுத்துச் சொல்லிவிட்டு வேலையை எடுத்தேன்.
இதுபோல பேசுபவர்கள் எதிராளியை என்னவென்று நினைத்துப் பேசுகிறார்கள்?
அவர் எப்படி சொல்லி இருக்கலாம்… ‘நீங்கள் நன்றாக எழுதுவீர்கள். தமிழாகட்டும் ஆங்கிலமாகட்டும் மொழி நேர்த்தி இருக்கும். அதனால் உங்களிடம் இந்தப் பணியை ஒப்படைக்கிறோம்..’ என்றிருந்தால் அவர்களுக்கான பிராஜெக்ட்டில் என் பங்களிப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு தானாகவே கூடிவிடும் அல்லவா?
எத்தனை வேலைகளை நான் ஒப்புக்கொண்டாலும் என் மனதில் அத்தனைக்கும் தனித்தனி டிராக் போட்டு வேலைகளை பிரித்து செய்ய முடியும். அதனால் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து விட முடியும். அதுதான் நல்ல அட்மினிஸ்ட்ரேட்டருக்கான அடையாளம்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நானும் என் தம்பியும் ஒரு அறை எடுத்து தங்கி படிக்க வேண்டிய சூழல். அப்பா அம்மா இருவருக்கும் வேறு ஊருக்கு திடீர் பணியிட மாற்றம் காரணமாக.
அப்போது பக்கத்து வீட்டில் ஒரு மாமி, மூன்று பெண் குழந்தைகள் (என் வயதை ஒத்தவர்கள்) மெஸ் வைத்து நடத்தி வந்தார்கள். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை கல்லூரி. நேராக அவர்கள் மெஸ்ஸுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவேன்.
அப்போதே நான் கதை கவிதை எல்லாம் எழுதுவேன். ஒருமுறை ஆவலில் அந்த பெண்களிடம் காண்பித்தேன். உடனே அந்த பெண்கள் ஒரு சேர சொன்னார்கள்… ‘எங்களுக்கும் இதுபோல யாராவது சமைத்துப் போட ஆள் இருந்தால் நாங்களும் கதை கவிதை என்ன சினிமாவே எடுப்போம்…’. அவர்கள் குரலில் பொறாமை அப்பட்டமாக தெறித்தது.
நான் காம்கேர் ஆரம்பித்த காலகட்டத்தில் நாங்கள் குடியிருந்த தெருவில் உள்ள ஒரு பெண் என் அலுவலகத்தில் வேலை செய்து வந்தாள். அவள் அம்மா எதற்கெடுத்தாலும் என்னை உதாரணம் காட்டி பேசுவார். அதை நானே கவனித்திருக்கிறேன்.
ஒருமுறை அவள் கடுப்பாகி, ‘அம்மா அவளுக்கென்ன வேலையா வெட்டியா மீட்டிங் மீட்டிங் என்று பேச வேண்டியதுதான் வேலை. எங்களைப் போலவா?’ என்று சொன்னதை அவள் அம்மாவே என்னிடம் சொன்னார்.
இந்த இடத்திலும் பொறாமையின் வெளிப்பாடுதான்.
பிராஜெக்ட் என்றால் PreProcessing, PostProcessing உட்பட அத்தனையையும் முன்பே அனலிஸிஸ் செய்துவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும். மேலும் அடுத்தடுத்த பிராஜெக்ட் எடுக்க வேண்டிய நிலையில் மீட்டிங் இருக்கும். தவிர செய்துகொண்டிருக்கும் பிரஜெக்ட்டில் அத்தனை டீமிலும் ஏதேனும் ப்ராப்ளம் இருந்தால் அதற்கும் மீட்டிங் இருக்கும். மீட்டிங்கில் எனக்குள் எத்தனை டென்ஷன் இருக்கும் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வெறும் மீட்டிங். எனக்கு மீட்டிங் என்பது மண்டைக்குள் லாஜிக்குகள் கொதித்துக்கொண்டிருக்கும். அனிமேஷன் போன்ற கிரியேடிவ் பிராஜெக்ட் என்றால் கற்பனைகள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும். லாஜிக்கோ, கற்பனையோ ஏதோ ஒன்று என் மண்டைக்குள் தளும்பத் தளும்ப நிரம்பி இருக்கும்.
எல்லாவற்ரையும் எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் முடிந்த அளவு புரிய வைக்க முயல்வேன். மாறுபவர்கள் மாறட்டுமே.
இதுவும் நல்ல அட்மினிஸ்ட்ரேட்டருக்கான அடையாளம்தான்.
கட்டுரையாளர் குறித்து…
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்
ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/
http://compcaresoftware.com/



