
ஆயுதம் ஏந்தியும் வன்முறைகளைக் கட்டவிழ்த்தும் கட்டுக்கடங்காமல் செல்லும் போராட்டங்களுக்கான கருவிகளாக Gen-Z ஜென் – ஸி எனப்படும் இளைய தலைமுறையை ராகுலின் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் முன்னுதாரணப்படுத்திக் கொண்டு பொதுவெளியில் சொல்லிக் கொண்டிருக்க, பாரதத்தின் இளைய தலைமுறை எப்படிப்பட்டது என்பதை காட்டும் வகையில் பாஜக சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளது. பாரதத்தின் ஜென்-ஸி அடையாளமாக சமூக தளங்களில் இளைய தலைமுறையின் உள்ளம் கவர்ந்த இளம் வயது பாடகியான மைதிலி தாக்குரை கட்சியில் சேர்ந்த மறு நாளே வேட்பாளராக அறிவித்து அவரை வெற்றி பெறவும் வைத்து இதுதான் பாரதம் கனவு காணும் ஜென்-ஸி என்று முன்னிலைப்படுத்தி இருக்கிறது பாஜக.,!
இளவயது சட்டமன்ற உறுப்பினர் எனும் பெருமையை பெற்றுள்ளார் மைதிலி தாக்குர். பீஹார் சட்டசபையின் இளம் எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைதிலி தாக்குர் 25 வயதுள்ள நாட்டுப்புற பாடகி. இவர், பாஜக.,வில் இணைந்த ஒரே நாளில் எம்எல்ஏ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே பிரபலமானவர். அண்மையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில், பாரதத்தின் இளம் சாதனையாளராக விருது பெற்றார். அப்போது இவர் பாடிய பாடலும் பேச்சும் பலரையும் கவர்ந்திருந்தது. அவரை பிரதமர் மோடி மனதாரப் பாராட்டி, ஊக்குவித்தார். பின்னர் இவர் பாஜக.,விலேயே சேர்ந்து, மறுநாளே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இப்போது அலிநகர் தொகுதியில் வென்று எம்எல்ஏ., ஆகி உள்ளார். இதன் மூலம் பீஹார் அரசியலில் மிக இளம் வயது எம்எல்ஏ., என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் எதிர்த்துக் களம் கண்டவர், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான வினோத் மிஸ்ரா என்பதுதான் ஆச்சரியப்படத்தக்க செய்தி. காரணம், அலிநகர் தொகுதி ஆர்ஜேடியின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தொகுதி. அதன் வலிமையான வேட்பாளரான வினோத் மிஸ்ராவை எதிர்த்து, இவர் வெற்றி பெறுவாரா என்று பலரும் ஐயம் தெரிவித்தனர். இந்த நிலையில், அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி இன்று பாஜக., சார்பில் எம்எல்ஏ., ஆகி உள்ளார்.
இள வயது மைதிலி தாக்குரின் ஆச்சரியப்படத் தக்க அரசியல் பயணம், பீஹார் மாநில அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தமது வெற்றி குறித்து மைதிலி தாக்குர் கூறியபோது, இந்த வெற்றி எனக்கு கனவு போல இருக்கிறது. மக்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. முதல்முறையாக எம்எல்ஏ., ஆகி உள்ளேன். என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் மகள் போல் சேவை செய்வேன். மக்களுக்காக எப்படி பணி செய்ய வேண்டும் என்பதே என் ஒரே எண்ணமாக உள்ளது என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.
மேலும், இன்று நான் உங்கள் மகளாக நிற்கிறேன் உங்கள் பிரதிநிதியாக அல்ல!உங்கள் அளவற்ற அன்பு, நம்பிக்கை மற்றும் ஆசீர்வாதங்களால். இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல – இந்த வெற்றி அலிநகர், ஒவ்வொரு அலிநகர் குடும்பத்திற்கும், எனக்கு ஆசீர்வாதம் அளித்த ஒவ்வொரு கைகளுக்கும் உரியது.
இந்த பிரச்சாரம் பொதுமக்களிடம் சென்றடைய இரவு பகல் பாராமல் உழைத்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள், அனைத்து காரியகர்த்தாக்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பூத் அளவிலான காரியகர்த்தாக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
உத்வேகம் மற்றும் வழிகாட்டுதல் எங்கள் முழு குழுவையும் வலுப்படுத்திய மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் நிதிஷ் குமார் ஜி ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய திரு ஜே பி நட்டா, மதிப்பிற்குரிய திரு நித்யானந்த் ராய் ஆகியோருக்கு நன்றி
அலிநகர் என் சகோதர-சகோதரிகள், தாய்-பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள்… என்னை உங்கள் மகள், உங்கள் சகோதரி, உங்கள் பிரதிநிதியாக்கி நீங்கள் எனக்கு கொடுத்த பொறுப்பு – நம்பிக்கை உடைந்து விடமாட்டேன் என உறுதியளிக்கிறேன். இது என் வெற்றி அல்ல – உங்கள் நம்பிக்கையின் வெற்றி. நன்றி அலிநகர்… உங்கள் அன்பு தான் என் மிகப்பெரிய பலம். – என்று
பீஹாரின் மதுபானி மாவட்டம், பெனிபட்டியில் 2000ஆம் ஆண்டு பிறந்த மைதிலி தாக்குர் சிறு வயதிலேயே இசைத்துறையில் தனியிடம் பிடித்துவிட்டார். பாரம்பரிய கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். நாட்டுப்புற இசையை தந்தையிடம் இருந்தும் தாத்தாவிடம் இருந்தும் கற்றார். பள்ளிப் படிப்பை தில்லியில் முடித்தார். பத்து வயதுச் சிறுமியாக இருந்த போதே, பள்ளியில் அனைவரையும் கவர்ந்தவர். தில்லி பல்கலை.க்கு உட்பட்ட ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் 2022ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார். அப்போது, 2021ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதை வென்றவர்.
பேஸ்புக், யூடியூப் மூலம் தமது இசைத் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். 2020ல் இவர் தமிழில் பாடிய கண்ணான கண்ணே பாடலை இன்றும் சமூகத் தளங்களில் தமிழ் இசை ஆர்வலர்கள் பார்த்து மெய்சிலிர்த்து பாராட்டியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்களைப் பெற்றவர் மைதிலி தாக்குர்.





