spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா?!

ஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா?!

- Advertisement -

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதில் ஒரு தவறும் இல்லை.

போக்குவரத்து, தகவல் தொடர்பு, தகவல் பெருக்கம் போன்றவையெல்லாம் நடக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பல்வேறு மதங்கள், கலாசாரங்கள், பண்பாடுகள், அடையாளங்கள், சடங்குகள், விழாக்கள், மொழிகள், உடைகள், உணவுகள் என அனைத்துமே மிக மிக நெருக்கமாக வந்துவிட்டிருக்கின்றன.

முற்காலத்தைப் போல் தனித்தன்மையைப் பேணியபடி, தனித் தீவாக யாரும், எதுவும் இருக்கமுடியாத நிலை உருவாகிவிட்டிருக்கிறது. எப்போதுமே ஆதிக்க சக்திகளின் அடையாளம், பண்பாடு போன்றவையே பலராலும் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும்.

தனித்தன்மை மிகுந்த கலாசாரங்கள் நிச்சயம் சிலவற்றைத் தக்கவைத்துக்கொள்ளமுடியும். இருந்தாலும் நவீன கால மாற்றங்களினால் பெரிதும் மாறியே தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள முடிவதாக ஆகும்.

இப்போது, நம் முன் இருக்கும் கேள்வி பிற ஆதிக்க சக்திகள், நவீனகால மாற்றங்கள் இவற்றைமீறி எவற்றை நாம் தக்கவைத்துக்கொள்வது… எவற்றை எப்படி மாற்றிக்கொள்வது?

கூட்டுக் குடும்பம் சிதைந்துவிட்டது; தாய் மொழிக் கல்வி குறைந்துவிட்டது; சிறு உற்பத்திகள் பின்னடைவைச் சந்திக்கின்றன;

பாரம்பரிய உணவு முறை மாறிவிட்டது; பாரம்பரிய மருத்துவம் மாறிவிட்டது. பாரம்பரிய உடைகள் விசேஷ நாட்களுக்கானவையாகிவிட்டன. பாரம்பரியத் தொழில்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. பாரம்பரிய விளையாட்டுகள் அழிந்துவிட்டன. பாரம்பரியக் கலைகள் மாறிவிட்டன.

இந்த அனைத்து மாற்றங்களில் பெருமளவு சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குள் நடந்தவை. இஸ்லாமிய ஆதிக்கம், கிறிஸ்தவ ஆதிக்கம் போன்றவை சுமார் ஆயிரம் ஆண்டுகளாக நம் தேசத்தில் இருந்த நிலையிலும் சுதந்தரத்துப்பின் இந்து சக்திகள் ஓரங்கட்டப்பட்டு மேற்கத்திய நகலெடுப்பு வேலைகள் முடுக்கிவிடப்பட்ட பின் நடந்த மாற்றங்களே மிக மிக அதிகம்.

பார்த்துப் பார்த்துச் சொத்து சேர்த்த பெரும் செல்வந்தருக்குப் பிறந்த ஊதாரிப் பிள்ளைகள் நாம். நம் முன்னோர்கள் எத்தனையோ தியாகம் செய்து போற்றிப் பாதுகாத்த திருமேனிகளைத் திருடியும் திருட்டுக் கொடுத்தும் வாழ்பவர்கள் நாம். நம் முன்னோர்கள் பாடுபட்டு வளர்த்த சந்தன மரங்களை வெட்டி விறகாக்கி எரிக்கும் அறிவிலிகள் நாம். நமது அந்தந்த நேர ஆவேசங்களுக்குப் பின்னால் நிதானமாக யோசித்துப் பார்க்கவேண்டியவை இவை.

இன்னொருவகையில் பார்த்தால், ஆங்கிலம் இந்தியாவை நிர்வகிக்கவும் உலக அறிவுடன் நாம் தொடர்பு கொள்ளவும் கிடைத்த பெரும் வரமாகவே இருக்கிறது. பயிற்று மொழியாக அது இருப்பதுதான் பெரிய தவறு. மற்றபடி ஒரு மொழியாக அதைக் கற்றுக் கொள்வது மிக மிக அவசியமே.

பாரம்பரிய விளையாட்டுகள் அழிந்தது பெரிய இழப்புதான். ஆனால், கிரிக்கெட் மூலம் தேச ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது.

அலோபதி மருத்துவம் பல குறைகளை உடையதுதான். ஆனால், அதன் நன்மைகளும் மிக மிக அதிகமே. மருந்து நிறுவனங்கள், மருத்துவ மையங்கள் அடிக்கும் கொள்ளைகள், தவறுகள் ஆகியவற்றை அந்த மருத்துவம் மேல் நாம் சுமத்துவது சரியல்ல.

பாரம்பரிய உடைகளை நாம் பின்னுக்குத் தள்ளிய நிலையிலும் மேற்கத்திய உடை நமக்குப் பெரிய அளவில் கெடுதலை ஒன்றும் விளைவிக்கவில்லை.

கலைகளைப் பொறுத்தவரையில் சினிமா நமக்குத் தேவையான கேளிக்கையை அளவுக்கு அதிகமாகவே தந்து வருகிறது. அதிலும் திருவிழா நாட்களில் திரைப்பட வெளியீடும் ஒரு அங்கமாகிவிட்டது.

அப்படியாக, இந்த நவீன கால மாற்றமானது ஒருவகையில் வரவேற்கத்தகுந்தவையும் கூட.

இந்நிலையில், ஒவ்வொரு அம்சத்திலும் பாரம்பரியத்தைத் தக்கவைத்தல், மீட்டுருவாக்கம் செய்தல் ஆகியவற்றை எப்படி அணுகுவது?

இதில் மூன்று வழிகள் இருக்கின்றன.

முதலாவதாக, முற்று முழுதாக பாரம்பரிய அடையாளத்தை அப்படியே மறு உருவாக்கம் செய்வது.

இரண்டாவதாக, முழுமையாக நவீன அடையாளத்தைப் பின்பற்றுவது.

மூன்றாவதாக, பழமை, புதுமை இரண்டையும் கலந்து பின்பற்றுவது.

மூன்று குரல்களுமே எப்போதும் எல்லா விஷயங்களிலும் இருக்கும். காலப்போக்கில் எந்தக் குரல் வலுக்கிறதோ அதுவே புதிய அடையாளமாக ஆகும்.

திருமணம் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால், பாரம்பரிய முறைப்படியான திருமணம் ஒரு நாள், அதற்கு முந்தைய நாளில் மேற்கத்திய உடையுடன் மேற்கத்திய பாணியில் நிச்சயதார்த்தம் என இரண்டையும் கலந்து பின்பற்றுகிறோம். இது ஒருவகையில் கீழே விழுந்தலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற செயல் போன்றதுதான். ஏனென்றால் கூட்டுக் குடும்பம் என்ற பாரம்பரிய அமைப்பைக் கைவிட்டுவிட்ட பின் நாம் செய்யும் எல்லாமே அப்படியானதுதான்.

ஆங்கிலப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது?

நாம் நமது விழாக்களின் முக்கியமான அங்கமாக கோவிலுக்குச் சென்று வழிபடுகிறோம். அந்த வகையில், ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட நள்ளிரவில் கோவிலைத் திறக்கலாம். ஆனால், பாரம்பரியத்தைத் தக்கவைக்கவேண்டுமென்றால், கோவிலை இரவில் திறக்கக் கூடாது.

பாரம்பரியமா… புதிய கொண்டாட்டமா?

இது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான்.

நமது மரபில் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் கோவில்கள் திறந்துவைக்கப்படுவதுண்டு. எனவே, இரவில் கோவிலைத் திறப்பதென்பது முற்றிலும் இல்லாத விஷயம் அல்ல.

இரண்டாவதாக, ஆங்கிலப் புத்தாண்டு என்ற உலகமே கொண்டாடும் நாளை நாமும் கொண்டாடவேண்டும் என்ற அழுத்தம் மக்களுக்குத் தரப்பட்டு அதை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

இளைய தலைமுறை அதை மிகவும் தவறாக அல்லது மேற்கத்திய நகலெடுப்பில் மேற்கத்திய அமைப்பின் மோசமானதை மட்டுமே பின்பற்றும் வகையில் ஈடுபட்டுவருகிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டமானது இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று மிதமானது. பொதுமக்கள் கொண்டாடுவது. இன்னொன்று கொண்டாட்ட மனநிலை கொண்டது. இளைய தலைமுறை கொண்டாடுவது.

புரியும்படிச் சொன்னால், ஒன்று சைவம்… இன்னொன்று அசைவம். இரண்டு மாறுபட்ட வழிமுறையை எப்படி உள்வாங்கிக் கொள்வது.

மிதமான பிரிவினருக்கு கருவறைத் தெய்வ வழிபாடு.

இளைய தலைமுறையினருக்கு திறந்தவெளி எல்லைத் தெய்வ வழிபாடு.

எல்லைத் தெய்வ வழிபாடு அனைத்துக் கொண்டாட்டங்களையும் அனுமதிக்ககூடியதுதான். எனவே கிராமப்புறங்களில் அவரவர் குல தெய்வக் கோவிலில் புதிய திருவிழாவாக இதைக் கொண்டாடலாம். நகர்ப்புறங்களில் பொது மக்கள் ஒன்று சேரமுடிந்த பீச், மைதானம் ஆகிய திறந்த வெளிகளில் பிரமாண்ட எல்லைத் தெய்வ சிலைகள் அமைத்து இளைய தலைமுறையினர் கொண்டாடலாம். பைக் ரேஸுக்கு பதிலாக ரேக்ளா ரேஸ் நடத்தலாம். சிலம்பப் போட்டி, பாரம்பரியக் கலைகள் எனக் கொண்டாடலாம்.

வெறியாட்டு, இந்திர விழா என்றெல்லாம் வாழ்ந்த நமக்கு அதை இந்த ஆங்கிலப் புத்தாண்டு நேரத்தில் மீட்டுக்கொள்ளலாம்.

நள்ளிரவு 12 மணிக்கு வெற்றி வேல் வீர வேல் என்ற முழக்கத்தை நமது புத்தாண்டு கோஷமாக விண்ணை அதிரச் செய்யலாம்.

மிதமாகக் கொண்டாட விரும்புபவர்கள் கருவறை தெய்வக் கோவிலுக்கு சாத்விக முறையில் வணங்கச் செல்லலாம். நள்ளிரவில் நமக்கான நாள் தொடங்குவதில்லை. எனவே கோவில்கள், பீச், மைதானம் போன்ற இடங்களில் அதிகாலையில் கூடி சூரியன் உதிக்கும் நேரத்தில் கங்கைக்கு ஆரத்தி காட்டுவதுபோல் ஒவ்வொருவரும் அகல் விளக்கை ஏந்தி சூரியனுக்கு ஆரத்தி காட்டி புத்தாண்டை வரவேற்கலாம்.

உலகம் 12 மணிக்கு ஹேப்பி நியூ இயர் என்று முழங்குமென்றால் பாரதம் சூரிய உதய நேரத்தில் ஹரஹர மஹாதேவ் என்றும் ஜெய் ஸ்ரீராம் என்றும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, சாமியேய் சரணமய்யப்பா என்று கோஷமிட்டு வரவேற்கலாம். தாய்த் தெய்வ சன்னதிகளில் குலவையிட்டு வரவேற்கலாம்.

ஆங்கிலப் புத்தாண்டை நமது பாணியில் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை.

  • பி.ஆர்.மகாதேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe