
தமிழகத்தில் கொரானா தொற்று நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருவதால் பிசிஆர் பரிசோதனை அனைவருக்கும் கட்டாயமாகியுள்ளது. ஆனால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதில் தமிழக சுகாதாரத் துறை சுணக்கம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் கொரானா தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்த படியாக தமிழ்நாடு, தில்லி ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. பக்கத்து மாநிலமான கேரளம், எடுத்த உறுதியான சில நடவடிக்கைகள் மூலம் அம்மாநிலத்தில் கொரானா முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் படிப்படியாக இத் தொற்று அதிகரித்து, அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கொரானா தொற்றுக்கு மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், ரேபிட் கிட் டெஸ்ட் மூலம் இத் தொற்றைக் கண்டறிய சீனாவில் இருந்து பெரும் செலவில் ரேபிட் கிட்கள் மத்திய அரசு மூலம் தருவிக்கப்பட்டு பரிசோதனை தொடங்கப்பட்டது. ஆனால் இக் கருவிகள் சரியான தொற்றை அடையாளம் காட்டாததால் இப் பரிசோதனை முறை தோல்வியைத் தழுவி
மருத்துவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தது. சைனா பொம்மைகளைப் போல், இந்தப் பரிசோதனை கிட்களும் விளையாட்டு பொம்மைகள் ஆனதைக் காண முடிந்தது.

இந்நிலையில் தமிழகத்தி்ல் 3 முறை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டாலும் இத் தொற்று குறைந்தபாடில்லை. எனவே இறுதியாக பிசிஆர் பரிசோதனையில் மட்டுமே கொரானா தொற்றை உறுதிபடுத்த முடியும் என்ற நிலையில், இதற்கான முழுவீச்சி்ல் தமிழக சுகாதாரத்துறை பணியாளர்கள் களமிறங்கினர்.
ஆனால் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு, பொதுமக்களும், அரசின் சில துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்காததால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளதாக பெயர் சொல்ல விரும்பாத சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரும், சுகாதாரத் துறை சங்க நிர்வாகிகளும் வருத்தப்படுகின்றனர்.
42 நாள்களாக மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரத்துறை பணியாளர்களும் 24 மணி நேரமும் பம்பரமாக சுற்றி வேலை பார்த்தாலும் பிசிஆர் பரிசோதனையை தமிழகத்தில் அனைவருக்கும் மேற்கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளும், போதிய பணியாளர்களும் இல்லை என்கின்றனர் அவர்கள்.
அதாவது தமிழகத்தைப் பொருத்தவரை தினமும் 47 ஆயிரம் பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய வசதிகள் இருந்தும், சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள 41 லேப்கள் தவிர்த்து, பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சிக் கல்வி நிலையங்கள் உள்பட 126 பிசிஆர் லேப்களில் இப் பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

இந்த லேப்களை முழுமையாகப் பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் 14 லட்சம் பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் முனைவர் பொன்ராஜ் தெரிவிக்கிறார்.
இதுதொடர்பாக இவர் தொடர்ந்துள்ள மனுவை காணொலி மூலம் அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கொரானா தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனையை அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி கொரானா நோய்த் தடுப்பு அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னையி்ல் கொரானா தொற்று அதிகமாக தெரிய வருவதற்கு மருத்துவப் பரிசோதனைகளை அதிகப்படுத்தியுள்ளதே காரணம் என்று கூறியுள்ளார்.
அதாவது, இதுநாள் வரை பரிசோதனை பெரிய அளவில் செய்யப்படவில்லை என்பதையே இது வெளிச்சமிட்டு காட்டியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. இதுவரை பிசிஆர் பரிசோதனை எத்தனை பேருக்கு செய்யப்பட்டது? சென்னையில் தொற்று ஏற்பட்ட சந்தேகத்தில் மருத்துவமனைக்கு வருவோருக்கு மட்டுமே சோதனைகள் செய்யப்படுகிறதே தவிர, மாநகராட்சி அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் வீடு வீடாக சென்று ஏன் பரிசோதனைகளை நடத்தவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ரேபிட் கிட் டெஸ்டில் கோட்டைவிட்ட தமிழக அரசு, பிசிஆர் பரிசோதனையை அனைவருக்கும் கட்டாயமாக்கினால் மட்டுமே கொரானாவில் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
- சதானந்தன், சென்னை