spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்வந்தேறிகளின் வம்பு பிரச்சாரம்! விளைவுகள்... உண்மைகள்! (பகுதி-10)

வந்தேறிகளின் வம்பு பிரச்சாரம்! விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-10)

- Advertisement -
christian conversion
christian conversion

(Whiteman’s burden is to civilise the world) உலக மக்களை நாகரீகமானவர்களாக மாற்றுவது வெள்ளைக்காரர்களுக்கு கடவுள் அளித்த கடமை:

ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டையும் தம் கபட புத்தியால் கைப்பற்றுவதற்கு செய்த பிரச்சார முழக்கம் இது. அவர்களைத் தவிர மீதி உலக நாடுகளின் மக்கள் நாகரிகம் அற்றவர்கள் என்ற அகம்பாவம் நிறைந்த கூற்று இது.

“பாரத நாட்டு மக்களே! உங்களை உய்வடையச் செய்ய கடவுள் எங்களை அனுப்பியுள்ளார்!” என்ற சித்தாந்தம் உரத்து ஒலித்தது. “இந்த நாட்டில் எங்கள் பிரிட்டிஷ் முடியாட்சி இறைவனின் நியதி. அதனால்தான் நாங்கள் நிலையான, நீதியோடு கூடிய, கருணை நிறைந்த, முன்னேற்றமான ஆட்சியை இங்கு ஏற்படுத்துகிறோம். இங்கிருக்கும் அழிவு சக்திகள் அனைத்தையும் அடக்கி விட்டோம். எப்போதும் ஹிம்சையும் ரத்த ஆறு ஓடுவதுமான உள்நாட்டுப் போர்களில் இருந்தும் அவ்வப்போது வரும் உட் கலகங்களில் இருந்தும் காப்பாற்றி பாரத நாட்டு மக்களின் மனதிற்கும் உயிருக்கும் சொத்து சுகங்களுக்கும் பாதுகாப்பு அளித்தோம். இது கடவுள் எங்களுக்கு அளித்த மிகப் பெரும் பொறுப்பு”.

கடவுளின் பெயரால் எதைச் சொன்னாலும் நம்பும் அப்பாவிகளைக் கொண்ட நாடு இது என்று எண்ணினார்களோ என்னவோ! அவர்களின் நாடு பிடிக்கும் பேராசைக்கும் கீழான அகங்காரத்திற்கும் கடவுளின் மதம் என்ற முகமூடி அணிந்தார்கள்.

அதன் பலன்?

அப்பாவி மக்கள் பலர் பிரிட்டிஷ் ஆட்சியாளரின் வலையில் விழுந்தார்கள். மதம் மாறினார்கள். சில கல்வியாளர்கள் கூட இவர்களின் பிரச்சாரத்தில் மயங்கினார்கள். நீங்கள் எம் நாட்டை விட்டுப் போகாதீர்கள் என்று பிரிட்டிஷாரை கெஞ்சிய புத்திசாலிகள் கூட இருந்தார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி இவ்வாறுதான் கெஞ்சியது. “மீதி இடங்களில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் இடத்தைவிட்டு போகாதீர்கள்!” என்று திராவிடர் கழகம் பிரிட்டிஷ் அதிகாரிகளை ஒரு தீர்மானம் இயற்றி வேண்டிக் கொண்டது.

conversion
conversion

வெள்ளையர்களை துரைகள் என்றார்கள். அவர்களுக்கு ஊழியம் செய்யும் அடிமைத்தனம் வளர்ந்தது. நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்களுள் பிரிவு உண்டாகியது. பிரபலமான தலைவர்கள் கூட அவர்களின் வலையில் விழுந்து ‘சர்’ ஆகவும் ‘ராவ்பகதூர்’ ஆகவும் கௌரவம் பெற்றார்கள். சுதந்திரப் போராட்டத்தின்போது மிதவாதிகள், தேசியவாதிகள் இடையே வாக்குவாதங்கள் நேர்ந்தன.

நேரு போன்ற தலைவர்கள் நம் நாடு சுதந்திரத்திற்கு இன்னும் அருகதை பெறவில்லை என்று நம்பினார்கள். (ஒயிட்மேன்ஸ் பர்டன் தாக்கத்தால்).

நாகரிகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளோம். சுதந்திரம் எம் பிறப்புரிமை என்று முழங்கியவர்கள் திலகர், அரவிந்தர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசியவாதிகள். இவ்வாறு சுதந்திரம் பெறும் அருகதை உள்ளது என்று கூறியவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தினார்கள் பிரிட்டிஷ் தாக்கத்திற்கு பலியான தலைவர்கள்.

பிரிடிஷார் ரயில்வே, நீதித்துறை, பாதுகாப்புத் துறைகளைப் புகுத்தி மிகப்பெரும் உதவி செய்ததாகவும் அவர்களின் தயை, தர்மம் என்னும் பிட்சையாலேயே நம் நாட்டு மக்கள் உயிர் வாழ்வதாகவும் எண்ணினார்கள். இன்னும் எண்ணுகிறார்கள்.

ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து கொண்டே வந்த கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் 16வது நூற்றாண்டில் இருந்து ‘ஒயிட்மேன்ஸ் பர்டன்’ பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒயிட்மேன்ஸ் பர்டன்’ என்ற சொல் நம் நாட்டில் புழக்கத்திற்கு வந்தது. ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அநாகரிகமானவர்கள். ஆதலால் அவர்களை நாகரிகமாக மாற்றம் கடமை வெள்ளைக்காரர்களுடையது என்று கூறிக்கொண்டு 1899ல் ரிச்சர்டு ருட்யார்டு கிப்ளிங் கவிதைகள் கூட இயற்றினார்.

ஒரு ஆங்கில வரலாற்றாசிரியர் இவ்விதம் எழுதினார்: “இங்கிலாந்திலுள்ள உடல் பலம் உள்ளவர்கள் அனைவருக்கும் ஆயுதங்கள் அளித்து ஒரு படையாக அமைத்தாலும் கூட சொந்த சக்தியால் அவர்கள் பாரத நாட்டை வெல்ல இயலாது. அமைதி வழியில் அரசாள்வது இன்னும் கடினம். உண்மையில் பாரத நாட்டினர் உள்நாட்டுக் கலகம் மூலம் நமக்கு ஒரு ஆட்சியை ஏற்படுத்தி தந்தார்கள். இன்றைக்கும் இங்கிலாந்துக்கு அடிமையாக விழுந்து கிடப்பதில்தான் அவர்களுக்குத் திருப்தி”. இது நம் நாட்டினர் மீது பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களுக்கு இருந்த புரிதல்.

நம் நாட்டினரை அடிமைப்படுத்தும் இலக்கினை சாதிப்பதற்காக தீட்டிய சதித் திட்டங்களில் இதுவும் ஒன்று. “வெள்ளையரின் கடமை” என்னும் கட்டுக்கதையின் ஆதாரமாக எத்தனை கொடுமைகளைச் செய்தார்களோ வந்தேறிகளான அந்த அசுரர்கள்! நினைத்து பார்த்தாலே உடல் நடுங்குகிறது. கிறித்துவ மத பிரச்சாரத்தை மும்முரமாக்கி மதம் மாற்றினார்கள். இன்னும் பலரை ஏமாற்றினார்கள். இங்கிருக்கும் சனாதன தர்மத்தை சைத்தான் மதம் என்ற பிரச்சாரம் செய்தார்கள்.

இதே முழக்கத்தோடு முதல் உலகப்போரில் 1914-1918 பாரத நாட்டினரை பங்கு பெறும்படி உற்சாகப்படுத்தினார்கள். அன்றைய அகண்ட பாரதத்திலிருந்து சுமார் 13 லட்சம் பேர் போரில் குதித்தார்கள். அதற்குப் பலனாக விடுதலை அளிப்போம் என்ற ஆசை காட்டினார்கள். ஆனால் போர் முடிந்தபின் முழங்கையை காட்டினார்கள். பாரதப் படை வீரத்தோடு போராடியது. 74 ஆயிரத்து 187 பேர் உயிரிழந்தனர். பதினோரு படைவீரர்களுக்கு விக்டோரியா க்ராஸ் (விசி) கிடைத்தது. இதுவே விடுதலைக்குப் பிறகு வீரசக்ரம் ஆக மாறியது போலும்.

பலரின் உயிரை எடுத்ததோடு கூட மக்களைப் பிழிந்து வசூல் செய்த செல்வம் 838 கோடி ரூபாய்கள். பிரிட்டிஷாரின் பரிபாலனத்தின் எந்த ஒரு செயலும் பாரத நாட்டு மக்களுக்கு உதவிகரமானதாக இருக்கவில்லை. சாதாரண மக்கள் பொருளாதாரத்தில் நலிந்து போனார்கள். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டது. அன்னபூரணியாக விளங்கிய பாரத தேசத்து மக்கள் பசி பசி என்று பரிதவித்தார்கள். 1766- 1900 வரை பல பஞ்சங்களை நம் நாடு காண நேர்ந்தது. அந்த நேரங்களில் பசிக்கொடுமையால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றரை கோடிக்கு மேல்.

பெங்கால், பீகார், ஒடிசா, ஆக்ரா, மும்பை பஞ்சங்கள் வரலாற்றில் இடம் பிடித்தன. அவை அனைத்தும் பிரிட்டிஷார் செயற்கையாக உருவாக்கியவையே!

1838 ல் ஓரியண்டல் ஹெரால்ட் அறிவிப்பின்படி 1766, 1770, 1782, 1792, 1803, 1804, 1819, 1820, 1824, 1829, 1833, 1836, 1837, 1838 ஆம் ஆண்டுகளில் பஞ்சம் வந்தது. வில்லியம் டிக்பி என்ற வரலாற்றாசிரியர் 107 ஆண்டுகளின் வரலாற்றினை எழுதுகையில் 1793- 1900 இடைப்பட்ட காலத்தில் உலகில் பல்வேறு போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சங்களாக இருக்கையில், 1891- 1900 வரை உள்ள பத்தாண்டுகளில் இரண்டு கோடி பேர் உயிரிழந்தார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்… துயரம்!” என்று குறிப்பிடுகிறார். இது பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய நிர்வாகம்.

நாகரீகத்தை சொல்லித் தந்தார்களா? பிரிட்டிஷ் கழுகுகள் கற்றுத்தந்த கலாச்சாரம் என்ன?

பிரிட்டிஷார் நம் நாட்டை நாசமாக்கினார்கள். நாட்டின் விஸ்தீரணத்தைக் குறைத்தார்கள். பொருளாதாரத்தை வீழ்த்தினார்கள். வீரர்களான இந்திய வீரர்களை தூக்கிலிட்டார்கள். பஞ்ச அரக்கனை தூண்டிவிட்டார்கள். அதோடுகூட கிளப்புகள் என்ற பெயரில் ஆண் பெண் வேறுபாடின்றி குடித்து கும்மாளமிடும் ஒழுக்கமின்மையை உட்புகுத்தினார்கள்.

காவியம், சாஸ்திரம் என்று காலம் கழித்த நாகரீக மனிதர்களை புகைப்பிடித்து சீட்டாடும் இடங்களுக்கு அனுப்பினார்கள். அவற்றிற்கு கிளப் கல்ச்சர் என்று பெயரிட்டார்கள். இளைஞர்களை தமக்கு அடிமைகளாக்கி கொண்டார்கள். கையூட்டு கலாச்சாரத்தை கற்றுத் தந்தார்கள். அதுமட்டுமின்றி இந்திய மேதாவிகளை கிளப்களுக்கு அடிமையாக்கி தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டார்கள்.டிவைட் அண்ட் ரூல் என்ற சதிக்கு உள்ளாகி தேசத் துரோகத்தில் ஈடுபட்டவர்களின் கதைகள் பல வரலாற்றில் உள்ளன. கித்தூர் ராணி வரலாற்றில் மல்லப்பசெட்டி போல் பலர்.

நாகரிகம் என்றால் என்ன? உலக மக்களுக்கு நாகரிகத்தை கற்றுத் தருகிறோம் என்று தண்டோரா போட்டு கொண்டு வெள்ளையர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்த கலாச்சாரம் எப்படிப்பட்டது?

சூட், பூட், ஹாட் கலாச்சாரமா? “மாத்ருவத் பரதாரேஷு பர த்ரவ்யானி லோஷ்டவத்” – பிற பெண்களை தாயாக எண்ண வேண்டும். பிறர் செல்வத்தை மண்ணாக எண்ண வேண்டும். இதுவே பாரதீய கலாச்சாரம்.

ஆனால் இந்தியர்களில் காமம் குரோதம் லோபம் போன்றவற்றைப் புகுத்தி தமக்கு அனுகூலமாக உருவாக்கிக் கொண்டார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் துயிலெழும் நற்பழக்கம் போய் நேரம் கழித்து எழுவதும் பெட் காபி அருந்துவதுமான கல்ச்சரை கற்றுத் தந்தார்கள். ஸ்நானம், சௌச்சம் போன்றவற்றை விலக்கி விட்டு சென்ட் அடித்துக்கொள்வது ஃபேஷன் என்றார்கள். ஆரோக்கியமான நமஸ்தே சம்பிரதாயத்தில் இருந்து சுகாதாரமற்ற ஷேக் ஹேண்டுக்குப் பழக்கப்படுத்தினார்கள்.

நம் பண்டிகைகளை அறிவியல் ரீதியானது அல்ல என்று பிரச்சாரம் செய்து வேலென்டைன்ஸ் டே போன்ற தீய சம்பிரதாயங்களை பண்டிகையாக கொண்டாடச் சொன்னார்கள்.

Slavery is the mother of all sins என்றார் ஸ்ரீயாதவ ராம் ஜோஷிஜி (ஆர்எஸ்எஸ்). “ஆயிரமாண்டு அடிமைத்தனத்தில் இருந்த காரணத்தால் இந்தியனின் மனமும் புத்தியும் மாறிப்போய் விபரீதம் புகுந்துவிட்டது. பிரிட்டிஷ் நாகரிகத்தைக் கற்றுக் கொண்ட இந்திய இளைய சமுதாயம் நாட்டிற்கு பிரச்சனையாக உருவாகி வருகிறது. ஆங்கில மொழி வழியே நாட்டிற்குள் புகுந்த ஆங்கில கலாச்சாரத்தின் கைகளில் நாடு சிக்கியுள்ளது. வந்தேறிகள் சென்றுவிட்டாலும் ஒய்ட் மேன்ஸ் பர்டனை சுமந்து கொண்டே உள்ளது இந்தியா”.

வெள்ளைக்காரர்கள் செய்த கொடுமைகளை மக்களுக்கு முக்கியமாக மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னால்தான் ஆங்கில கலாச்சாரத்தை போற்றும் ஆட்சியாளர்கள் உருவாகாமல் இருப்பார்கள். உலகிற்கு நாகரிகத்தை கற்றுத்தந்த நம் நாட்டிற்கு நாகரிகம் சொல்லித் தரத் தேவையில்லை என்றும் முழங்கிடும் சக்தியை நாம் சம்பாதித்து கொள்வோமாக!

தெலுங்கில்: பி எஸ் சர்மா.
தமிழில்: ராஜி ரகுநாதன்.
(ருஷிபீடம் ஆன்மீக மாத இதழ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe