
ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
ஒளிரும் நம் பாரத அன்னையின் “பல மொழிகளில் ஒரே சிந்தனை” என்ற தாரக மந்திரமே, உலக நாடுகள் நம்மைப் பார்த்து வியந்து நோக்கும் விஷயங்களில் ஒன்றாக விளங்குகிறது!
ஒவ்வொரு மொழியும் ஓர் அழகு. ஒவ்வொரு மொழியும் தனித்துவமானதுதான்! “பலமொழிகள்” என்ற புன்னகையை அணிகலனாக அணிந்து தன் மாநிலங்கள்
என்னும் தேசத்தின் நாளங்களை உயிரூட்டி வருகிறாள் நம் பாரத அன்னை.
பல்மொழி அறிந்தவனால் தேசத்தின் எட்டு திசைகளிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. அதிக மக்கள் பேசும் மொழியினை அறிந்தவனுக்கு தன் மாநிலத்தைத் தாண்டிச் சென்றாலும் அங்கும் சமாளிக்க முடியும் என்பது திண்ணம்.

செப்டம்பர் திங்கள் 14 ஆம் நாள், ‘ஹிந்தி திவஸ்’ எனும் பெயரில், இந்தி தினமாக அனுசரிக்கப்படுகிறது. மஹாத்மா காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் போது தேசம் தழுவிய அளவில், நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் மொழியாக இந்தியை நினைத்தார். இதனால் ராஷ்டிர பாஷா பிரசார் சமிதியை மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தாவில் 1936-ல் இயைந்த ஒரே கருத்தைக் கொண்ட தலைவர்களின் ஒத்துழைப்போடு தொடங்கினார்.
அக்காலத்தில் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த லோகமான்ய பால கங்காதர திலகரோ, “நாட்டின் ஒரு பகுதி மக்கள் இன்னொரு பகுதி மக்களுடன் இந்தியில் உரையாட வேண்டும்,” என்றார்.
காந்தியடிகளும், “இந்தியை தேசிய பயன்பாடுகளில் கொண்டு வர முயன்றால், நாட்டு முன்னேற்றத்துக்கு உதவும்” என்று ஒரு முறை கூறியுள்ளார். பாரத இலக்கிய உலகிற்கும் இந்தி மொழி மகத்துவமான பங்கினை ஆற்றியுள்ளது.
சென்னையிலும் தக்ஷின பாரத இந்தி பிரசார் சபா, தென்னந்தியாவில் இந்தி மொழியை பரப்புவதில் முதலிடம் பெறுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கூற்றான “இந்தியாவை இணைக்க இந்தி ஒரு சக்தியாய் உள்ளது” என்பதற்கிணங்க முந்தைய தலைமுறைகளினரின் அறிவுறுத்தலினாலும், வழிகாட்டலினாலும், இளைஞர்கள், சிறியவர்கள் பலரும் இந்தி கற்பதில் இன்றைய நாட்களில் ஆர்வம் காட்டுவதை காண முடிகிறது.
தாய்மொழி தன்னிகரற்றது. அது நம் வீட்டை இணைக்கும். நாட்டை இணைக்க ஒரு மொழி இந்தி. உலகை இணைக்க ஒரு மொழி ஆங்கிலம் என மூன்று மொழிகளை, வெறும் மொழி கற்றல் எனும் அளவிலாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது வாழ்வின் முன்னேற்றத்துக்கான வழி.
நாம் நம் தாய்மொழியாம் தமிழை உயிர் போல் ஆராதித்து, இந்தியையும் கற்பதே பாரத அன்னைக்கு செலுத்தும் மரியாதை மிக்க வீரவணக்கம்!