கட்டுரை – வானமாமலை பத்மனாபன்
போஜனம் : இந்த தீபாவளி நன்னாளில் எவ்விதமான போஜனம் உண்ணலாம் எந்று சற்றே பார்போம். ஸ்ரீ பெரியாழ்வார் ‘நல்லதோர் சோறு’ என்று நல்ல சோறு என்பதை அருளிச்செய்கிறார்.
அது என்ன நல்ல சோறு?
மடி தடவாச் சோறு என்று பெரியோர் பணிப்பர். அதாவது, ப்ரதிபலன் எதிர்பார்க்காமல் இடும் சோறே இது.
எம்பெருமானுக்கு அமுது செய்த சோறே நற்சோறு. எம்பெருமானுக்கு அமுது செய்து, அடியார்கள் எடுத்துக் கொண்ட பின் உண்பாராம் ஸ்ரீ நம்பிள்ளை என்னும் மஹாசாரியர்.
ஆக, நல்ல சோறு என்பது பணத்துக்கோ, வேறு பலனை எண்ணியோ இடப்படும் சோறு அல்ல. இது ஜாதி மத இன அடிப்படையிலும் தீர்மானிப்பது அல்ல.
இதை சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீ இராமபிரானும், ஸ்ரீ க்ருஷ்ணனும் பின்பற்றி உட்கொண்ட மூன்று போஜனங்கள் என்னவென்று சற்று நோக்குவோம்.
ஸம்யக் போஜனம்
ஸ்ரீஇராமபிரான் சபரி கையால் உண்ட போஜனம்
சபரியால் நன்கு பூஜிக்கப்பட்டு அவள் கையால் உண்ட உணவு ‘ஸம்யக் போஜனம்’. அதாவது நல்ல உணவு என்று கொண்டாடுகின்றனர் நம் ஆசார்யர்கள். இவள் பிறவி இனம் மற்றும் அந்தஸ்தில் உயர்ந்தவள் அல்ல. ஆயினும் இவள் தூய்மையான பக்தியுடன் இட்ட உணவு; ஆதலால் தூய்மையான உணவு என்று போற்றப்படுகிறது.
ஸகுண போஜனம்
ஸ்ரீ க்ருஷ்ணர் தூதுக்கு எழுந்தருளின போது ஸ்ரீபீஷ்ம துரோணாதி க்ரஹங்களை, விட்டு ஸ்ரீவிதுரர் க்ருஹத்திலே உண்டான். இவரோ தாழ்ந்த குலம். சாதாரண வீட்டிலிருப்பவர். பீஷ்ம-த்ரோணாகள் செல்வம் ஜாதி கல்வியில் உயர்ந்தவர்கள். ஆனால் கண்ணபிரான் ஸ்ரீவிதுரரின் நற்குணத்தையும் பண்புகளையும், பக்தியையும் கணிசித்து எளிமையான உணவை உண்டான். இது ஸகுண போஜனம்; அதாவது நல்ல குணமுடைய உணவு என்று கருதப்படுகிறது.
ஸஹ போஜனம்
வாதமாமகன், மற்கடம், விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை என்றபடி இவன் வாயுபுத்திரன், குரங்கு, விலங்கு, இன்னொரு ஜாதி என்று கருதாமல் இராமபிரான் எவ்வித பயனும் கருதாமல் தொண்டு புரிந்த அனுமனுடன் உண்டது ஸஹ போஜனம்.
ஆக அடியார்களிட்ட உணவில், எம்பெருமான் அன்பு பக்தி குணம் இதைத்தான் கொள்கிறானே அன்றி, இதர விஷயங்கள் அல்ல.
ஸ்ரீ க்ருஷ்ணன் பத்ரம், புஷ்பம் பலம் தோயம் -தூய உள்ளத்துடன் எது கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறான் கண்ணன்.
*போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம்” – என்று அடியார்கள் உண்ட உணவின் பகுதி உகந்தது என்று அருளிச் செய்யும் தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம் ஈண்டு நோக்கத் தக்கது.