May 10, 2021, 2:03 am Monday
More

  சங்கத் தமிழில்… சனாதன தர்மம்!

  தமிழர் நெறி வேறு, வேத நெறி வேறு என்பதைப் போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, உயர்ந்த திருக்காட்சி

  lord-shivaperuman
  lord-shivaperuman

  கட்டுரை: பத்மன்

  anandapadamanaban
  கட்டுரையாளர்: பத்மன்

  தமிழன் என்பவன் தனி இனத்தவன், அவனுக்கும் பாரத சமுதாயத்தின் அடிநாதமாகிய வேத நாகரிகத்துக்கும் தொடர்பில்லை என்ற புனைச் சுருட்டு, திராவிட இயக்கங்களால் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், தமிழன் வேத நாகரிகத்திலிருந்து வேறுபட்ட தனி இனத்தான் அல்லன், மாறாக அதன் தனித்துவம் வாய்ந்த சமூகத்தினன்.

  வேதம் என்பதற்கு வேர்ச் சொல்லான வித்தை (அறிவு), வித்து (விதை) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து விளைந்தது. பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குப் பேரறிவுதான் வித்து (விதை). அதைப் பற்றி மொழிவதே வேதம். இதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், ஆராய்ந்து அறியத் தக்கவை. உலகின் அரிய பல விஷயங்கள், அதில் நுட்பமாகப் புதைந்துள்ளன. ஆகையால்தான் வேதத்துக்குத் தமிழில் மறை என்று சிறப்பான மறு பெயரும் உண்டு.

  ஏதேனும் ஒரு பொருளை அல்லது விஷயத்தை வேண்டி, கடவுளுக்கு வேண்டுதலோடு செய்வதுதான் யாகம். உதாரணத்துக்கு பிள்ளைப்பேறு வேண்டுகின்ற புத்திர காமேஷ்டி யாகம், அரசனின் வெற்றியை வேண்டும் ராஜசூய யாகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறு வேண்டி விழைந்து செய்யும் யாகத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல்தான் வேள்வி.

  இந்த யாகத்தீயில் பொருட்களை சமர்ப்பிப்பதற்குப் பெயர் ஆஹூதி. தமிழில் சொன்னால், ஆகுதி. இறைவா இது உனக்கு ஆகட்டும் என்று கூறி படைப்பதுதான் ஆகுதி என்பது. இந்த யாகத் தீயில் இடப்படும் பொருட்களுக்குப் பெயர் அவிஷ் அல்லது அவிர்பாகம். யாகத்துக்குப் பிறகு இந்த அவிர்பாகம் (அவிப்பொருள்) தான் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. தீயில் இடப்படும் பொருள் அவிந்துதானே போகும். அவ்வாறு அவிவதால்தான் அதற்கு அவி என்று பெயர்.

  இவ்வளவு ஏன்? அக்னியே தூய தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதுதான். அதனை அறிந்து கொள்ள, முதலில் இதனைப் பார்ப்போம். தமிழில் ஃ என்ற சொல்லை ஆயுத எழுத்து என்பர். ஆனால் உண்மையில் அதன் பெயர் ஆய்த எழுத்து. பழந்தமிழ் இலக்கணங்களில் ஆய்த எழுத்து என்றே குறிக்கப் பெறுகிறது.

  ayurveda
  ayurveda

  ஆய்தம் என்றால் மூன்று புள்ளிகள் கொண்ட ஓர் எழுத்து என்று பொருள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த கும்முட்டி அடுப்பைப் பார்த்தால் தெரியும். மேலே முக்கோணமாக மூன்று உருண்டைகள் ஃ போல் இருக்கும். அக் காலத்திலும் சரி, இப்போதும் சரி, யாகத்துக்கு இதுபோன்ற ஃ வடிவில் யாக குண்டம் அமைப்பதுதான் சிறப்பானது. பேச்சு வழக்கில் ஃ என்ற எழுத்தை அக் என்று கூறுகிறோம். இந்த அக் வடிவ குண்டத்துக்குளே  உருவாவது, இருப்பது என்ற பொருளில்தான் அக்+உள்ளி, அக்குணி என்றாகி, அதுவே அக்னி ஆனது. (அக் உள்ளி எப்படி அக்குணி ஆனது எனில், உள்ளது என்பது உண்டு என்று ஆனதைப் போல என அறிக.)

  பகுத்தறிவு இல்லாதவர்களால் ஆரியக் கடவுள் என்று கூறப்படுகிற இந்திரன், உண்மையில் தமிழ்க் கடவுள்தான். இந்து என்றால் திங்கள் அதாவது சந்திரன் என்று பொருள். இதன் நிறம் வெண்மை. இதன் தன்மை குளிர்ச்சி. இதுபோல் குளிர்ந்த தன்மையோடு விளங்குகின்ற தண்ணீருக்கு நிறம் இல்லை என்று கூறப்படுகின்ற போதிலும், அது வெள்ளை நிறம் கொண்டதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் தண்ணீருக்கு வெள்ளை நிறம் கொண்டது என்னும் பொருள் கொண்ட வெள்ளம் (வெள்+அம்) என்ற மற்றொரு பெயரும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தைக் கொண்டு செய்வது வேளாண்மை (விவசாயம்).

  sangapalakai
  sangapalakai

  பழந்தமிழர்களின் ஐந்திணைகளில் வேளாண்மை நடைபெறுகின்ற மருத நிலத்தின் தெய்வம் இந்திரன். ஏன்? வெள்ளத்துக்கு (தண்ணீருக்கு) காரணமான மழைக்கு அவன்தான் தலைவன். அவன் நிறமும் திங்களைப் போன்ற வெண்மை. அவன் போருக்கும், காதலுக்கும் பெயர் பெற்றவன். தமிழர்களின் நாகரிகமும் போரும் (புறம்), காதலும் (அகம்) தானே. ஆகையால்தான் வேந்தன் எனப்படும் இந்திரன், தமிழர்களில் பெருவாரியான வேளாண்மை செய்வோரின் தெய்வமாக மதிக்கப்பட்டான். இவனது கோவில் இந்திரக் கோட்டம் என்று அழைக்கப்பட்டதுடன், வசந்த காலத்தில் இந்திர விழாவும் அக்காலத்தில் அமர்க்களமாக நடத்தப்பட்டது. இதற்கான சான்றுகளை, சிலப்பதிகாரத்தில் இந்திரன் விழவு ஊரெடுத்த காதையைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.

  இதேபோல் யாகங்களில் தீக்கு அடுத்தபடியாக போற்றப்படும் புனித நீருக்குரிய வருணனும் தமிழ்க் கடவுள்தான். இவன் நெய்தல் நிலத்தின் கடவுள். நெய்தல் என்பது கடல் நீர் சூழ்ந்த நிலப் பகுதி. மருத நிலமானது மழை நீரை நம்பியிருப்பதால், மழைப்பொழிவுக்குக் காரணமாகப் போற்றப்படும் இந்திரன் அதன் தெய்வம் ஆனான். இதேபோல் கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்துக்கு, கடல் நீரின் அதிபதியான வருணன் தெய்வம் ஆனான். வாரி என்ற தமிழ்ச் சொல்லுக்கு பரந்து கிடக்கும் நீர், பல துளிகள் சேர்ந்தது என்று பொருள். நீரை மொண்டு (முகந்து) எடுப்பதற்கு வாரி எடுத்தல் என்று பெயர். வாரி என்பது தமிழின் கிளை மொழியான தெலுங்கில் ஆறு, குளத்தைக் குறிக்கிறது. இந்த வாரி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதுதான் வருணன் என்ற பெயர்.

  இவ்வாறு பழந்தமிழோடு வேதம் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆராய்ந்து பார்த்தால் வேத கலாசாரத்துக்கு வேறாக அன்றி, வேராக இருப்பது தமிழ்தான். பழந்தமிழர்கள் தீயோம்பும் (வேள்வி நடத்தும்) வேத கலாசாரத்தைப் பின்பற்றியும் ஆதரித்தும் வந்துள்ளனர். இதற்குப் பழந்தமிழ் மன்னர்களான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிப் பாண்டியனும், ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளியுமே சான்று.

  இவையெல்லாம் கற்பனைகள் என்றும், புளுகுகள் என்றும் பகுத்தறிந்து பார்க்காத பகல்வேஷத் தமிழர் அமைப்புகள் சில கூறக்கூடும். அவர்களுக்காகவும், தெய்வீகத் தமிழின் சிறப்பையும் தொன்மையையும் உண்மையிலேயே அறியாத பாமரத் தமிழர்களுக்காகவும் சங்க இலக்கியங்களில் காணப் பெறும் வேத நாகரிகச் சான்றுகளை இங்கே எடுத்துரைக்கிறேன்.

  பத்துப்பாட்டில் முதல் பாட்டு, முருகப் பெருமான் மீது நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை. முருகனுக்குத் தமிழ்க் கடவுள் என்றே சிறப்புப் பெயர் உண்டு. அப்படிப்பட்ட முருகனைப் போற்றும் திருமுருகாற்றுப் படையில், ஆறுமுகப் பெருமானின் ஒரு முகம் என்ன செய்வதாக நக்கீரர் கூறுகிறார் தெரியுமா?

  madurai-temple
  madurai-temple

  ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்குமே என்கிறார். அதாவது மந்திர விதிமுறைகளில் பிசகாது, மரபுப் படி அந்தணர் நடத்துகின்ற வேள்வியை சுப்ரமணியக் கடவுளின் ஒரு முகம் விரும்பி ஏற்கிறதாம்.

  இந்திரனைப் பற்றி திருமுருகாற்றுப்படை எப்படிக் குறிப்பிடுகிறது தெரியுமா?

  நூறுபல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடை தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் என்கிறது.

  அதாவது பலநூறு வேள்விகளை நடத்தியவனும் போர்களில் எதிரிகளைக் கொன்று பல வெற்றிகளைப் பெற்றவனும், நான்கு கொம்புளையுடைய மகுடத்தைத் தரித்தவனும் எழிலான நடையும் நீண்ட கைகளும் உடையவனும், ஐராவதம் என்ற யானையில் வருகின்ற, செல்வம் நிரம்பிய  செல்வனுமாகிய இந்திரன் என்று கூறுகிறது.

  சிறுபாணாற்றுப் படையில் புலவர் நல்லூர் நத்தத்தனார், ஒய்மான் நாட்டு மன்னன் நல்லியக்கோடனின் நகரம், அந்தணர் அருகா அருங்கடி வியல் நகர் என்று புகழ்ந்துரைக்கிறார். அதாவது அந்தணர்கள் எண்ணிக்கைக்கு குறைவே இல்லாத, அருமையான கட்டுக்காவல் நிறைந்த நகரம் என்று பொருள். மேலும் பொருநர்கள் (பாணர்கள்), புலவர்கள் மற்றும் அருமறை நாவின் அந்தணர்களுக்கு (அருமையான வேதத்தை ஓதுகின்ற நாவினை உடைய அந்தணர்களுக்கு) நல்லியக்கோடனின் அரண்மனைக் கதவு அடையா வாயில் கொண்டது (எப்போதுமே திறந்திருக்கும்) என்றும் கூறுகிறார்.

  கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையில், கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்து என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. கேள்வி என்றால் வேதம் என்று பொருள். அந்தக் காலத்திலே வேதம் எழுதப்படாமல் செவிகளால் கேட்டே மனப்பாடம் செய்யப்பட்டதால், இதற்கு சம்ஸ்கிருதத்தில் ஸ்ருதி என்று பெயர். தூய தமிழில், எழுதாக் கிளவி (எழுதப்படாமல் கேட்கப்படக்கூடிய வாக்கியங்கள்) என்றும் கேள்வி என்றும் வேதம் அழைக்கப்படுகிறது. அந்த வேதத்தில் சிறந்த அந்தணர்கள் தங்கள் அருமையான கடமையாகிய வேள்வியை நடத்தி, அதன் சிறப்பைப் பொறித்து வைத்துள்ள தூண் என்று இந்த வரிகளுக்குப் பொருள். இந்தத் தூணை, யூபத் தூண் என்றும் வேள்வித் தூண் என்றும் அழைப்பார்கள்.

  மகா விஷ்ணுவின் உந்தியில் பிரும்மன் தோன்றினான் என்ற புராணச் சம்பவத்தை, பெரும்பாணாற்றுப் படை இவ்விதம் அழகாக எடுத்துரைக்கிறது.

  நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவற் பயந்த பல்இதழ்த் தாமரைப் பொகுட்டின்..

  நீல நிறமும் நெடிய உருவமும் கொண்ட திருமாலின் கொப்பூழ் (தொப்புள்) நான்முகம் கொண்ட பிரம்மனைப் படைத்தளித்த பல இதழ்களைக் கொண்ட தாமரைப் பூவாகும் என்று இதற்குப் பொருள்.

  மதுரைக் காஞ்சியில் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்துபாடும் மாங்குடி மருதனார், நெடுஞ்செழியனின் முன்னோராகிய பெருவழுதி, பல யாகங்களை நடத்தியவன் என்பதை, பல் சாலை முது குடுமியின் நல் வேள்வித் துறை என்று குறிப்பிடுகிறார்.

  மதுரையிலே அந்தணர்களின் வேள்விப் பள்ளிகள் நிறைந்து இருப்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.

  சிறந்த வேதம் விளங்கப் பாடி விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி, உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும் அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின், பெரியோர் மேஎய், இனிதின் உறையும் குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் என்கிறார்.

  சிறப்புடைய வேதத்தைப் பொருள் விளங்குமாறு பாடுகின்றவர்களும், பெருமைக்குரிய சிறப்புகளைத் தருகின்ற வேள்வி செய்தல் உள்ளிட்ட ஒழுக்கங்களோடு பொருந்தி நிற்கின்றவர்களும், நிலங்களைக் கொண்டு அமைகின்ற உலகத்திலே ஒருமை உணர்வுடையே பிரம்மமே தாம் ஆகி, உயர்ந்த நிலையில் உள்ள தேவருலகத்தை இங்கேயே தமது ஒழுக்கச் சிறப்பாலும் வேள்விகளாலும் உருவாக்கக் கூடியவர்களும், அற நெறிகளில் இருந்து பிறழாத நடத்தையுடன் அன்பு நெஞ்சம் கொண்டவர்களும், பெரியோர்களுமாகத் திகழ்கின்ற அறவோர்களும், முனிவர்களுமாகிய அந்தணர்கள் இனிதாக உறைவதற்கேற்ப, அதாவது தவம், வேள்வி உள்ளிட்ட அறச் செயல்களைச் செய்வதற்ப, குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்தணர் தவப்பள்ளி என்று இதற்குப் பொருள்.

  சிவபெருமான் ஐந்துபூதங்களைப் படைத்த தலைவனாக, இயற்கைக் கடவுளாக விளங்குவதை, நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொடு ஐந்து உடன் இயற்றிய மழு வாள் நெடியோன் தலைவன் ஆக என்று குறிப்பிடுகிறார். நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிய, மழு (கோடரி), வாள் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய, நெடிய உருவம் படைத்த சிவபெருமான் உலகின் தலைவனாக இருக்கிறார் என்று இதன் பொருள்.

  பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானை எப்படிப் புகழ்கிறார் தெரியுமா?

  கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் நல் ஆனொடு பகடு ஓம்பியும் நான் மறையோர் புகழ் பரப்பியும் வாழ்ந்தானாம் திருமாவளவன் எனப்படும் கரிகால் சோழன். அதாவது அவனது அரசாட்சியிலே கொலை, கொள்ளை போன்ற தீமைகள் அகற்றப்பட்டிருந்தன. அமரர்கள் எனப்படும் தேவர்களுக்கு உரிய யாகங்களைச் செய்து அவர்களுக்கு உரிய ஆவுதி(ஆகுதி)களை முறை தவறாமல் வழங்கியிருக்கிறான் மன்னன் கரிகாலன். அத்துடன் அதனைச் செய்வித்த அந்தணர்களுக்கு நல்ல ஆநிறைகளை (கால்நடைகளை) பரிசாக அளித்ததுடன், வேதத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய நான்கு மறைகளை அறிந்த அந்தணர்களின் புகழைப் பரப்பியும் வந்திருக்கிறான் அந்தத் தொல் திருமாவளவன்.

  மலைபடுகடாம் எனப்படும் கூத்தர் ஆற்றுப்படையில் அதன் ஆசிரியர் புலவர் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், சிவபெருமான் ஆலகால விஷம் அருந்திய புராணச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரை காரி உண்டிக் கடவுள் என்று புகழ்கிறார்.

  இனி எட்டுத்தொகை சங்க இலக்கிய நூல்களைக் காண்போம். எட்டுத்தொகையின் முதல் தொகை நூலாகிய பதிற்றுப்பத்து நூலில், மூன்றாம் பத்துப் பாடல்களை, சேரன் பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் புகழ்ந்து புலவர் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார். அந்தப் பாடலில்,

  சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சமென்று ஐந்துடன் போற்றி அவைதுணை ஆக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக் காலை அன்ன சீர்சால் வாய்மொழி உருகெழு மரபின் கடவுள் பேணியர் கொண்ட தீயின் சுடர்எழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி (பாடல் 21) என்று புலவர் குறிப்பிடுகிறார்.

  சொல் (சொல் இலக்கணம்), பெயர் (பொருள் இலக்கணம்), நாட்டம் (சோதிடம்), கேள்வி (வேள்வி), நெஞ்சம் (நெஞ்சுக்குப் பொருந்திய ஆகமம்) ஆகிய ஐந்தையும் போற்றி, அவற்றின் துணை கொண்டு, எந்த உயிர்களுக்கும் தீங்கு சூழாது, விளக்கத்துடன் கூடிய கொள்கைகளைப் பின்பற்றி, கதிரவனைப் போன்ற வாக்குத் தவறாத நேர்மையைக் கடைப்பிடிக்கின்ற, முன்னோர் காட்டிய மரபுப்படி கடவுளைப் பேணுகின்ற முனிவர்களாகிய அந்தணர்கள் வளர்க்கின்ற வேள்வித் தீயின் சுடர் எழும்போதெல்லாம் அதிலே ஆவுதி (ஆகுதி) இடப்படுகின்றது. எப்படிப்பட்ட ஆவுதி தெரியுமா? அதனைச் செய்பவர்கள் விரும்புகின்றவற்றை மெய்யாக்குகின்ற (உண்மையாக்குகின்ற) பெரிய பலன்களைத் தரக்கூடிய ஆவுதியாம். இந்தப் பாடலுக்குப் பெயரே அடுநெய்யாவுதி என்பதுதான். வேள்விக்கு இதைவிட என்ன பெரிய விளக்கம் வேண்டியிருக்கிறது?

  அத்துடன், அந்தணர்களின் ஆறு கடமைகள் என்று வேதம் கூறுவதையும் மிக அழகாகத் தமிழில் எடுத்துரைக்கிறார் பாலைக் கௌதமனார்.

  ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர்  (பாடல் 24) என்கிறார். அதாவது தான் வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், அவை இரண்டையும் பிறருக்குச் செய்வித்தல்- அதாவது வேதத்தை ஓதச் செய்தல் (சொல்லிக் கொடுத்தல்), வேள்விகளை பிறருக்காக அல்லது பிறரைக் கொண்டு நடத்துதல் – தானங்களை வழங்குதல், அரசர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து அறச் செயல்களுக்காக தானங்களை தாம் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய ஆறு கடமைகள் அறச் செயல்களைச் செய்கின்ற (தர்மத்தைக் கடைப்பிடிக்கின்ற) அந்தணர்களுக்கு உண்டு என்கிறார்.

  இதேபோல் ஆறாம்பத்துப் பாடலைப் பாடியுள்ள பெண்பாற் புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார், பாட்டுடைத் தலைவனாகிய சேரமன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழந்துரைக்கும்போது

  பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஓரூர் ஈத்து வான் வரம்பன் எனப் பேர்இனிது விளக்கி (பாடல் 60-க்குப் பிந்தைய பதிகம்) என்கிறார். மறையோதுகின்ற, அறச் செயல் புரிகின்ற பார்ப்பனர்களுக்கு கபிலை எனப்படும் பழுப்பு நிறமுடைய சிறந்த பசுக்களையும், குடநாட்டிலே ஓர் ஊரையும் தானமாகக் கொடுத்ததன் மூலம் வானில் வாழும் தேவர்களை திருப்தி செய்ததால், வான் வரம்பன் (வானத்தை எல்லையாகக் கொண்டவன்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளான் சேரலாதன் என்கிறார் புலவர். இந்த வான்வரம்பன் வழிவந்தவர்கள்தான் வானவராயர் எனப்படும் வானவரையர்கள்.

  வேதம் ஓதுகின்ற, அறத்தோடு வாழ்கின்ற அந்தணர்களுக்கு அக்காலத் தமிழர்கள் எத்தகைய மதிப்பு அளித்தனர் என்பதை, வேளிர் மரபைச் சேர்ந்த மன்னன் செல்வக் கடுங்கோ வாழிஆதனைப் பாடிய ஏழாம் பத்தில் கபிலர் எடுத்துரைக்கிறார். வாழிஆதனைப் பார்த்து

  பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே (பாடல் 63) என்கிறார். அதாவது, யார்க்கும் அஞ்சாத, எவருக்குமே தலைவணங்காத மாவீரன் வாழிஆதன், பார்ப்பனர்களுக்கு மாத்திரமே பணிவோடு தலைவணங்குவான், வேறு யார்க்கும் வணங்க மாட்டான் என்கிறார் கபிலர். இதன்மூலம் எப்பேர்ப்பட்ட பெரும்புகழும், வீரமும் படைத்த மன்னர்களும் பண்பு நிறைந்த பார்ப்பனர்களுக்கு பணிவோடு மரியாதை செலுத்தினர் என்ற வரலாற்றுச் செய்தியைச் செதுக்கியுள்ளார் கபிலர்.

  எட்டாம் பத்திலே சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை, அரிசில் கிழார், கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை (பாடல் 74) என்று பாராட்டுகிறார். அருமறை குறித்த விளக்கங்களை நன்கு கேட்டறிந்து, அதன் முறை தவறாது வேள்விகளைச் செய்தான் இரும்பொறை என்கிறார்.

  எட்டுத்தொகையின் மற்றொரு நூலாகிய பரிபாடலில், காக்கும் கடவுளாகிய திருமால், நாவல் அந்தணர் அருமறைப் பொருள் (முதல் பாடல்) என்று புகழப்படுகிறார். நாவலந்தீவு எனப்படும் பாரதம் முழுவதும் வாழுகின்ற அந்தணருக்கு அருமறையின் உட்பொருளாக இருப்பவர் திருமால் என்று இதற்குப் பொருள். அந்தணர் என்றால் ஆரியர் என்றும் அவர்கள் வெளியே இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்றும் பரப்பப்படும் பசப்புரைக்குப் பதிலடி இந்த வரிகள்தாம்.

  மேலும் பரிபாடலின் 3-ஆவது பாடலில், அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ, அமரர்க்கு முதல்வன் நீ, அவுணர்க்கும் முதல்வன் நீ என்று திருமால் போற்றப்படுகிறார். இதனைப் பாடியவர் புலவர் பெட்டனாகனார். அமரர் என்றால் ஆரியர் என்றும் அரக்கர் (அவுணர்) என்றால் திராவிடர் என்றும் இல்லாத இனவாதம் மொழியும் இழிபிறவிகளை இந்தப் பாடல் வரிகளால் கொட்டுகிறார் பெட்டனாகனார். இறைவன் அனைத்துமாகி நிற்பவன், அத்துடன் எதிரும் புதிருமான அமரர்களுக்கும் அவனே முதல்வன், அரக்கர்களுக்கும் அவனே முதல்வன். அவனே அனைத்தும். இந்தப் பரிபாடல் வரிகள், யஜூர் வேதத்தின் ஶ்ரீ ருத்ரத்தில் சிவபெருமானை, முரண்பாடாக நாம் கருதும் அனைத்துக்கும் அவரே தலைவர், அவரே அனைத்தும் என்று போற்றுவதற்கு ஒப்பாக இருக்கின்றன.

  பரிபாடலில் 5-ஆவது பாடல் (பாடியவர் புலவர் கண்ணனாகனார்) செவ்வேள் எனப்படும் முருகனைப் புகழ்ந்து பாடப்பட்டிருப்பது. முருகனின் பிறப்பையும் இது எடுத்துரைக்கிறது. இந்தப் பாடலில், முருகனைத் தோற்றுவித்த அவன்தம் தந்தையாகிய சிவபெருமான், அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் என்றும் விண்ணோர் வேள்வி முதல்வன் என்றும் போற்றப்படுகிறார். அதாவது, (திரிபுர தகனத்தைப் பாராட்டி) அமரர்கள் நடத்திய வேள்வியின் அவிர்பாகத்தை உண்ட பசுமையான கண்களை உடைய பார்ப்பனர் (சிவபெருமான் எப்போதும் யோகநெறியிலும், தவத்திலும் இருப்பதால் அவர் பார்ப்பனர்) என்றும், விண்ணோர்களாகிய தேவர்கள் நடத்துகின்ற வேள்விகளில் துதிக்கப்படும் முதல்வன் என்றும் சிவபெருமான் போற்றப்படுகிறார். மேலும் இதே பாடலில், முருகனின் சேவடியை மறுபிறவி இல்லை என்று கூறும் மடையர்கள் சேரமாட்டார்கள் (மறு பிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பரிபாடலின் 8-ஆவது, 9-ஆவது பாடல்களில் சிவபெருமான் மணிமிடற்று அண்ணல் (நீலகண்டன்) என்று புகழப்படுகிறார்.

  14-ஆவது பாடல் (கேசவனார் பாடியது), செவ்வேளைப் புகழ்துரைக்கும்போது இருபிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே என்கிறது. துவிஜர்கள் அதாவது இயற்கையாய் பிறக்கும்போது ஒரு முறையும், பூணூல் அணிவித்து உபநயனம் செய்விக்கப்படும்போது மறு முறையும் என இரு பிறப்பு கொண்ட இருபிறப்பாளர்களான, கருணை நெஞ்சமுடைய அந்தணர்களின் அறச் செயல்களில் அமர்ந்து விளங்குபவன் முருகப்பெருமான் என்று இதற்குப் பொருள். ( பிறப்பின் அடிப்படையில் பிராமணன் உருவாவதில்லை, சிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறான் என்பதற்குத்தான் வேத வழிப்பட்ட இந்த உபநயனச் சடங்கு. இதைத்தான் இந்த இருபிறப்பு உணர்த்துகிறது. அதே வேளையில் பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணன் என்பது பிற்காலத்தில் புகுந்துவிட்ட தவறு.)

  பரிபாடலில் புறத்திரட்டாகத் தொகுக்கப்பட்ட பாடல்களில் எட்டாம் பாடல் மதுரை மாநகரின் சிறப்பை இவ்வாறு எடுத்துரைக்கிறது-

  பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரலெடுப்ப ஏமஇன் துயில் எழிதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது, எம்பேர் ஊர் துயிலே.

  தாமரைப் பூவில் பிறந்த பிரும்மனின் நாவில் இருந்து பிறந்த பெருமை உடையவை நான்கு வேதங்கள். அப்படிப்பட்ட வேதங்களைப் பாடுகின்ற சிறந்த குரல் ஒலி கேட்டுத் துயில் எழுகிறதாம் பாண்டியன் தலைநகராகிய மதுரை மாநகரம். அவ்வாறு இல்லாமல், சேரனின் வஞ்சி, சோழனின் கோழியூர் எனப்படும் உறையூரைப் போன்று கோழி (சேவல்) கூவி இங்கு பொழுது விடிவதில்லையாம். ஆக, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை,
  அதற்கு இணையாக வேத நெறியையும் வளர்த்தெடுத்துள்ளது என்பதற்கு இதனைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? மதுரையில் மட்டுமல்ல, பண்டைத் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் வேத நெறி தழைத்திருந்ததை முன்னர் பல பாடல்களை எடுத்துக்கூறி நிறுவியுள்ளோம்.

  தமிழர் நெறி வேறு, வேத நெறி வேறு என்பதைப் போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, உயர்ந்த திருக்காட்சியைக் கண்டு, நம் முன்னோர்களைப் போன்று தமிழும், வேதமும் தழைக்கச் செய்ய, சங்க இலக்கியங்களை ஊன்றிப் படிப்போம். அதன்வழி நடப்போம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,171FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »