சா.கந்தசாமி எழுதிய விசாரணைக் கமிஷன் நாவலை கவிஞர் மீரா அகரம் வெளியீடாக 1993 ஆண்டில் வெளியிட்டார். இது தமிழக அரசியல், சமூக வரலாற்றை வலுவாகச் சொல்லும் வித்தியாசமான ஒன்று.
இந்நாவல் பற்றி ஓவியர் ஆதிமூலம் “நிரபராதிகள் கொல்லப்படுவது தடுக்க முடியாத விபத்தாகவே நடந்து வருகிறது. அன்று கோவலன். இன்று இந்நாவலில் கண்டக்டர் தங்கராசு. அந்தச் சாவுக்கு எத்தனை விசாரணை வைத்து எவ்வளவு நஷ்டஈடு கொடுத்தால் தான் என்ன? ஒரு நிரபராதியின் இழப்பை
ஈடு செய்ய இயலுமா? அல்லது நாளையோ மறுநாளோ நடக்க இருக்கும் மற்றொரு நிரபராதியின் மரணத்தைத் தவிர்க்கமுடியுமா? பின் எதற்காக இந்த விசாரணை எல்லாம்?”
இந்த நாவல் 1998 ஆண்டில் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.26.09.2015 ஆண்டில் சாகித்திய அகாதெமி எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வு சென்னையில் நடந்தது. அதில் சா.கந்தசாமி, “என் எழுத்து நியாயத்துக் குரல் கொடுக்கும். அநியாயத்தை எதிர்க்கும். காரணம் அப்படிப்பட்ட மரபில் வைகைக் கரைக்குப் பக்கத்திலுள்ள மேலூரியில் பிறந்து 200 ஆண்டுகளுக்கு முன் காவிரிக் கரையிலுள்ள சாயாவனம் எனற ஊருக்குப் (மாயவரம்-பூம்புகார் இடைப்டட ஊர்) புலம் பெயர்ந்தவன்.
இப்போது அடையாறு கரையிலுள்ள நந்தனத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் இளைய மகன் முரளி நுண்கலை படித்து விட்டுக் கனடாவில் பிரேஸர் ஆற்றங்கரையிலுள்ள வாங்கூவர் நகரில் வசித்து வருகிறார்” என்றார்.
6.10.2019 காலை 10 மணிக்கு கனடாவிலிருந்து அவர் தம் மனைவி திருமதி ரோகிணி அவர்களுடன் இந்தியாவுக்குப் பயணத் திட்டத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுருந்த என்னிடம் தெரிவித்தார்.
சீனாவைப் பற்றியும், மரங்கள் பற்றியும் இரண்டு நூல்கள் எழுதி இருப்பதைத் தொலைபேசியில் பேசிய போது சொன்னார்.
அவர் நம்மை விட்டுப் பிரிந்து மரணித்துப்போனார். ஆனால் அவரின் அசலான படைப்பு எழுத்து என்றும் நியாயத்தின் குரலாகவும் குரலற்றவர்களின் குரலாகவும் ஒலிக்கும்.
(அண்மையில் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமி குறித்து அவரது நெருங்கிய நண்பரும், பேராசிரியருமான சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய நினைவுக் குறிப்பு)