
சுதந்திரப் போராட்ட வீரர்கள்!
வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டியன், கட்டபொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்! ஆங்கிலேயருக்கு வரி கட்டமாட்டேன் என்று அடிமைத்தனத்தை அறுத்தெறிய பாடுபட்டவர். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி உரிமையை ஏற்க மறுத்து இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை வீறு கொண்டு எதிர்த்து இறுதியில் தூக்குமேடை கண்டவர்.
பூலித்தேவன் புரட்சி விதை தூவி முடித்த பின்னாளில் 1760ல் நெல்லைச் சீமையின் பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர். ஜெகவீர கட்டபொம்மன்- ஆறுமுகத்தம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தவர் வீரபாண்டியன். கட்டபொம்மன் என்பது வம்சாவளிப் பெயர். ஐந்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த வீரபாண்டியனுக்கு ஊமைத்துரை, துரைசிங்கம் என இரு சகோதரர்கள், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரியர்.
வீரபாண்டியனுக்கு வீரசக்கம்மாள் என்பவரை மணம் முடித்தனர். தந்தை ஜெகவீர கட்டபொம்மனுக்கு உதவியாக இருந்த வீரபாண்டியன் தனது 30 ஆவது வயதில் 1790ல், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பேற்றார். சுமார் 9 ஆண்டுகள் பாளையத்தை ஆண்ட வீரபாண்டியனுக்கு 40 வயதுக்குள் வாழ்வை முடிக்கும் எமன் கிழக்கிந்தியக் கம்பெனி உருவில் அப்போது உருவானது.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் நெல்லைச் சீமையிலும் உருவானது. நெல்லையைச் சுற்றியுள்ள பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க கலெக்டர்களை நியமித்தனர் ஆங்கிலேயர். இதற்கு ஒத்து வராத பாளையக்காரர்களுக்கு இடையே கலகமூட்டி, ஒருவரை ஒருவர் விரோதிகளாக்கினர். அடிபணிந்தவர்க்கு சலுகை அளித்தனர். ஒருவாறு அனைத்து பாளையங்களும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்குள் வந்தன.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போன்றவை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாத நிலையில், வேறு வழியின்றி நெல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து கட்டபொம்மன் வரி வசூல் செய்தார். இதை பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டிய மக்கள், கட்டபொம்மனை ‘கொள்ளையன்’ என்று சாடினர். இதனால் மனவருத்தம் அடைந்தார் கட்டபொம்மன். அப்போது நெல்லைப் பகுதி கலெக்டராக இருந்த ஜாக்சன் துரை கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்றார். கோபமடைந்த கட்டபொம்மன், எங்கள் மக்களை நசுக்கி உனக்கு ஏன் தர வேண்டும் வரி என்று கேள்வி எழுப்பி, மோதல் போக்கைக் கடைப்பிடித்தார்.

தொடர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும் விவேகமும் சுற்றியுள்ள பாளையக்காரர்களிடம் பரவியது. அவர்களும் வீரபாண்டியன் வழியைப் பின்பற்றத் தொடங்கினர். ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் கலெக்டரானார். 1799ல் திப்பு சுல்தானை வீழ்த்திய கையோடு, அடுத்த இலக்காக கட்டபொம்மனை குறி வைத்தனர் ஆங்கிலேயர்.
கிழக்கிந்திய கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன. இதை அடுத்து 1799 செப்.1ல் பானர்மென் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர் ஆங்கிலேயர். போருக்கு ஆயத்தமாகாத நிலையிலும் கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார். ஆனால், கட்டபொம்முவின் கோட்டையை ஆங்கிலேயர் கைப்பற்றினர். இதனால் அங்கிருந்து தப்பித்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் தஞ்சம் அடைந்தார். ஆனால், ஆங்கிலேயருக்கு அஞ்சிய புதுக்கோட்டை மன்னன் காட்டிக் கொடுத்ததால் கட்டபொம்மு கைதானார்.
ஒரு மரத்தடியில் விசாரணை நடத்தப் பட்டது. கட்டபொம்மனை குற்றவாளி என ஆங்கிலேயர் சொல்ல, தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. கம்பீரத்துடன் “எனது தாய்மண்ணைக் காக்க, ஆங்கிலேயருக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறே தூக்குமேடை ஏறினார்.
அப்போதும் கட்டபொம்முவின் பேச்சில் வீரமும் தைரியமும் நிறைந்திருந்தது. இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மனத்தில் வீரம் விதைக்கப் பட்டது. “இப்படி தூக்குமேடையில் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாக்க போரிட்டு வீர மரணம் அடைந்திருக்கலாம் என்று கட்டபொம்மன் மனம் பொருமியபடி கூறிய சொற்கள் மக்கள் மனங்களில் தீயாய் விதைக்கப் பட்டது.
1799 அக்.19 அன்று கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். அவரது நினைவிடம் கயத்தாறில் அமைந்துள்ளது. கட்டபொம்முவின் வாழ்க்கை வரலாறு புராணங்கள், காவியக் கவிதைகள், பாடப் புத்தகங்களில் நீங்கா இடம் பெற்றது. ஆங்கிலேயரை எதிர்த்த துவக்க கால விடுதலைப் போர் வீரராக கட்டபொம்முவை இந்திய அரசு போற்றியது. 1974ல் தமிழக அரசு நினைவுக் கோட்டை ஒன்று கட்டியது. கட்டபொம்முவின் இடிந்து பட்ட அரண்மனைக் கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகிறது. விஜயநாரயணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் கட்டபொம்மனுக்கு நினைவு விழாவை நடத்தி வருகிறது!
- செங்கோட்டை ஸ்ரீராம்