
தெலுங்கில் உரை: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
அண்மைக் காலமாக நடந்து வரும் கோவில் விக்ரகங்கள் மீதான தாக்குதல் குறித்து… பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா அவர்களின் உரை…
கோவில்களைக் கொள்ளையடித்து ஆதாயங்களை விழுங்கினால் மட்டும் போதாது… ஒவ்வொரு கோவிலிலும் ருத்ராபிஷேகமும் ருத்ர ஹோமமும் சிறப்பாக நடக்கும்படி செய்ய வேண்டும். அப்போது நாடு முழுவதும் செழிப்பாக விளங்கும்.
அரசர்களாலும் பயம்… திருடர்களாலும் பயம்… திருடர்களே அரசரானால் என்ன ஆகும்? அதுதான் இப்போது நடக்கிறது.
நம் மதிப்பைப் பெறுவதற்காக நம்மைப் போலவே உடை உடுத்து நதிகளில் மூழ்கி எழுந்து நம்மிடையே உள்ள பெரியவர்களின் உதவியோடு… அதன் பிறகு என்ன செய்தார்கள்?
பின்புறத்திலிருந்து ஹிந்து தர்ம துரோகிகளை அனுப்பி கோவில்களை துவம்சம் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட அரசுகளின் பீடை விலக வேண்டுமென்றால் ருத்ரனின் அருள் நமக்கு வேண்டும். எதனால் இவ்வாறு கூறுகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகப் புரிந்திருக்கும்.
“உஷ்…! அப்படிக் கூறாதீர்கள்?” என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள் பார்த்தீர்களா? அவர்களால்தான்… இந்த உஷ் என்று எச்சரிக்கும் குரல்களால்தான் நம் நிலைமை இவ்வாறு உள்ளது.
ஏனென்றால் பிறருக்கு இதுபோன்ற உஷ்களின் பயமில்லை. அவர்களின் நூல்கள் என்ன கூறுகின்றன? எத்தனை முடியுமோ அத்தனை கோவில்களை உடைத்தால் நல்லது… விக்ரகங்களை நாசம் செய்தால் நல்லது… மதம் மாறாவிட்டால் தலையை வெட்டுவது நல்லது என்று கூறும் மதத்தின் மீது அவர்களுக்கு விசுவாசம் இருப்பதால் அவர்கள் அத்தகைய தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களத் தலையில் தூக்கிவைத்து ஆடாமல் தம்மைத் தாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு இந்துக்களுக்கு உள்ளது.

அது இல்லை என்றால்… நம் கோவில்கள் என்ன ஆனால் நமக்கு என்ன? நம் சாப்பாடு நமக்கு கிடைக்கிறது அல்லவா? நம் பிள்ளைகள் சுகமாக இருக்கிறார்கள் அல்லவா? என்று இருப்பவர்கள் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிக் கொள்வார்கள். பிறகு ரொம்ப முக்கியமாக… இதுபோன்ற செய்திகளைப் பகிர வேண்டாம் என்பார்கள். அப்படிப் பட்டவர்களையும் பார்க்கிறோம்.
தனி மனித துவேஷம் நமக்கு இல்லை. நம் தெய்வங்கள் தாக்கப் படுகிறார்கள். நேற்று வரை வெளி வாசலில் வைத்திருந்த சிலைகள் மீது தாக்குதல் நடந்தது. இது என்னவோ தெரியவில்லையே என்று நினைத்தோம். குண்டூரில் சிருங்கேரி சாரதா மடத்தின் வாயிலில் சாலை அருகில் அற்புதமான சாரதா தேவி விக்ரகம் இருந்தது. அதனை உடைத்து எறிந்தார்கள்.
அதே ஊரில் இருப்பவரிடம் வருத்தத்தோடு தெரிவித்தபோது, “இது எப்போதோ நடந்தது. அவர்கள் கோவிலுக்குள் நுழையவில்லை. வெளியில் தானே நடந்தது?” என்று வருத்தப்படாமல் பதிலளித்தார். இப்படிப்பட்டவர்களால் இந்து தர்மத்திற்கு என்ன பாதுகாப்பு கிடைத்து விடப்போகிறது?
இறுதியில் என்ன ஆயிற்று? மலைமேல் உயர்வாக … விஜயநகரம் அருகில் ராமதீர்த்தம் கோவில் அற்புதமாக பிரகாசிக்கையில்… சென்று கதவைத் திறந்து ராமரின் முகத்தை வெட்டி வீசி எறிந்தாலும்… அசையாமல், பதில் வினையாற்றாமல் இருக்கும் நிலைமை நீடிக்கிறது.
இது குறித்து யாருக்காவது கூறினோம் என்றால்… வெறுமனே புகார் பதிவு செய்து கொள்வார்கள். ஏனென்றால் குற்றம் செய்த துரோகிகள் யார் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களைத் தூண்டி விட்டவர்களே குற்றவாளிகளைத் தேடுபவர்களாக இருப்பார்கள். அதனால் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

குண்டர்களைப் போல் கிளம்பி… சனாதன தர்மத்தை எப்படி துவம்சம் செய்கிறார்கள் பாருங்கள்!
தாம், தம் பிள்ளைகள், அவர்களின் திருமணம், அவர்களின் நலத்துக்காக ஹோமம் செய்து வருகிறார்களே தவிர நாட்டு நலனுக்காக ஒரு சிறிய குரல் கூட எழுவதில்லை.
மீண்டும் விடுதலைப் போராட்டத்தை போன்ற தீவிரமான போராட்டம் நடந்தால் ஒழிய சனாதன தர்மம் பாரத தேசத்தில் பாதுகாக்கப்பட மாட்டாது. இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதனால் இவர்களுக்கு என்ன வந்தது? யாரோ குண்டர்கள் செய்தார்கள்… யாரோ பாவம்! பைத்தியங்கள் செய்தன… என்று கூறி கைகழுவி விடுவார்கள். இத்தனை பேர் பைத்தியங்கள் இந்த ஆண்டு மட்டும் எதனால் கிளம்பினார்கள் என்பதுதான் புரிய வில்லை. அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள் இவை அனைத்தும்.
வெளிப் பார்வைக்கு மட்டும் குங்குமப் பொட்டு அணிந்து நதியில் மூழ்கி எழுகிறார்கள் தவிர.. தம்மவர்களை அனுப்பி ஹிந்து கோவில்களை தாக்கி வருகிறார்கள். மற்றொருபுறம் இப்போது தான் வளர்ந்து வரும் கோவில்களையும் கொள்ளையடித்து பிடுங்கிக் கொண்டு… கோவில் சொத்துக்களை விழுங்கி ஏப்பமிட்டு வருகிறார்கள்.
கோவில்களிலிருந்து முக்கியமாக, இத்தனை சதவீதம் அரசாங்க கஜானாவுக்கு செல்ல வேண்டும்… அதன்பின் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்… என்ற நியதியில் கோவில்கள் நடந்து வருகின்றன. இந்த உண்மை தெரியாமல் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள் அப்பாவி பக்தர்கள். இப்படிப்பட்ட நிலையில் நாம் உள்ளோம்.
முதலில் ஹிந்துக்களுக்கு விழிப்பு ஏற்பட வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்போமாக!

நாம் எதிர்வினையாற்ற வேண்டும். தர்ம ரட்சணைக்காக அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்… தர்மத்திற்காக இவற்றைச் செய்கிறேன்… என்று கூறிக்கொள்ளும் சுவாமிஜிகள், பீடாதிபதிகள் தர்மத்திற்காக இப்போது கூட பேசாவிட்டால்… இப்போது கூட எதிர்வினையாற்றா விட்டால் தர்மம் எப்படி காப்பாற்றப்படும்?
இவற்றைக் கூறுவதில் அரசியல் சம்பந்தம் எதுவும் இல்லை. ஆனால் தர்மத்தின் மீதுள்ள பக்தியால் கூறுகிறோம். பயப்பட்டுக் கொண்டே இருந்தால் உண்மையை எப்போதுதான் பேசுவது?
தர்மம் காப்பாற்றப்படட்டும்! ஒன்றும் தெரியாதவர்கள் போல் தர்ம துரோகம் செய்பவர்களுக்கு விரைவில் துர்கதி உண்டாகட்டும்! அதன் மூலம் தேசத்திற்கு நலம் விளையட்டும்!
ஆலயங்களும் அவற்றின் ஆதாயங்களும் அரசாங்கத்தின் கையில் இருக்கின்றன. அங்கு நடக்கும் அமைப்புகள் அனைத்தும் பயங்கரமாக உள்ளன.
ஏதோ அப்பாவி போல… அத்தனை பெரிய சுவாமிக்கு பிரம்மோத்ஸவம் நடக்கும் போது அந்நிய மத சின்னங்களை வைத்துவிட்டு, பின்னர் யாரோ விமர்சித்தார்கள் என்று எடுத்தார்களாம்! நாமும், “அப்பாடா! எடுத்து விட்டார்கள்!” என்று திருப்தி அடைகிறோமே தவிர, அவ்வாறு பிற மதச் சின்னங்களை நம் கோவில் திருவிழாவில் ஏன் வைக்க வேண்டும் என்றோ, அப்படிப்பட்டவர்கள் கோவிலில் எந்தெந்த பணிகளில் சேர்ந்துள்ளார்கள் என்றோ கேட்க இயலாமல் இருக்கிறோம்.
இவை அனைத்தும் உங்களுக்குத் தெரியாததல்ல. இங்குள்ள ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கும் வேதனையே இங்கு சொற்களாக வெளிவருகின்றன.
நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு நம் ரிஷிகள் அளித்த ஆயுதங்களை நாம் பயன்படுத்த வேண்டும். அவற்றை நம் தனிப்பட்ட நலனுக்காக செய்து கொள்வது தவறு என்று கூறவில்லை. ஆனால் இவற்றை தேச நலனுக்காக செய்யுங்கள். அது சிறப்பு.
ஜபம் ஹோமம் ருத்ரம் போன்றவற்றை யாரும் செய்வதில்லையா என்று கேட்டால்… செய்கிறார்கள். இவற்றை நம் கோவில்களைத் தாக்குபவர்களின் நலனுக்காகவும் அவர்கள் அளிக்கும் தட்சிணைக்காகவும் சென்று ஹோமமும் அபிஷேகமும் செய்பவர்கள் உள்ளார்கள்.
ஆனால் தேச நலனுக்காக அப்படிப்பட்டவர்கள் ஐந்து நிமிடம் கூட ருத்ர பாராயணம் செய்வதில்லை. இதுபோன்ற நிலைமை உள்ளது.
சத்குரு சிவானந்த மூர்த்தி கூறுகிறார், “அறிந்தவர்கள் நாட்டு நலனுக்காக பத்து நிமிடம் கண்ணீர் விட்டாலும் போதும்… பத்து நிமிடம் பகவானை நினைத்தாலும் கூட பாரத தேசம் க்ஷேமமாக விளங்கும்” என்கிறார்.
தர்மம் காப்பாற்றப்படட்டும்! ஒன்றும் தெரியாதவர்கள் போல் தர்ம துரோகம் செய்பவர்களுக்கு விரைவில் துர்கதி கிட்டட்டும்! அதன் மூலம் தேசத்திற்கு நலன் விளையட்டும்!
good article