
தலைமுறையினரை இணைக்கும் மார்கழி
– ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர் –
ஸ்ரீ கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி,” என்றார். அத்துணை அருமையான மார்கழி மாதம் தான் ஸ்ரீ ஆண்டாளும் கண்ணனை ஆராதித்த மாதம். அழகிய கோலங்களுடனும், திருப்பாவை, திருவெம்பாவை பாசுரத்தை பாடுவதில் இருந்து தொடங்கும் நாட்கள் மிக இனிமையானவை.

கோவில்களிலும், சபாக்களிலும் கொண்டாடப்படும் மார்கழி உற்சவ கொண்டாட்டங்கள் இப்போதைய சூழ்நிலையில் பல குடும்பங்களில் மூன்று- நான்கு தலைமுறையினரின் பங்களிப்போடு, தொழில்நுட்பத்துடன், தலைமுறையினரை இணைக்கும் ஒரு பாலமாக கோலாகலமாய் கொண்டாடப் படுகிறது.

பல நகரங்களில் வாழ்ந்து வந்தாலும் மார்கழி மாதத்தில் பாடப்படும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாடுவதிலும், அதற்கான பொருள் கூறுவதிலும், பொருளுக்கான விளக்கங்களைக் கூறுவதிலும், பாசுரத்திற்கான கோலங்கள் போடுவதிலும், மாலை நேரத்தில் பலவித பாடல்களைப் பாடுவதிலும் என பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக தலைமுறையினர் இணைகின்றனர்.

இந்திய உணவு கழகத்திலிருந்து ஓய்வுப் பெற்ற கும்பகோணத்தில் உள்ள திருமதி. K. லலிதா ஸ்ரீநிவாஸன் கூறுகையில்
“ஆன்- லைன் வகுப்புகளும், வீட்டிலிருந்தே வேலைச் செய்யும் பெற்றோர்களுக்கும், லாக்டவுனால் வீட்டிலேயே பொழுதைப் போக்க வேண்டியுள்ள வயதானவர்களுக்கும் மார்கழி மாத கொண்டாட்டங்கள் ஒரு ஆறுதலை தருகிறது என்பதே ஒரு நிதர்சனம்,” என்றார்.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த யுனைடெட் இந்தியா காப்பீட்டு கழகத்திலிருந்து ஓய்வுப் பெற்ற திரு N. பக்தவத்சலம் அவர்கள், கூறுகையில் “மழலைக் குரலில் அற்புதமான பாசுரங்களைச் சொல்வதும், வேற்று மாநிலத்தில் தமிழ் அறியாத குழந்தைகள் தமக்கு தெரிந்த மொழிகளில் பாசுரத்தை எழுதிப் பாடுவதும், பஜனை முறையில் பாசுரங்களைப் பாடும் குழந்தைகளும் (அதனை கற்றுக் கொடுத்த பெற்றோர்களும், இசை ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள்) பாசுரத்தின் முதல் நான்கு வரிகளை சென்னையிலிருந்து ஒருவர் பாடுவதும், பெங்களூரிலிருக்கும் ஒருவர் மீதமுள்ள வரிகளைத் தொடர்வதும், மூன்றுத் தலைமுறையினர் ஒன்றாக பாசுரம் பாடுவதும் என்பன போன்ற பல அருமையான நிகழ்வுகள், தொழில்நுட்ப உதவியுடன் எங்கள் குடும்பத்தில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

இசையும், ஆன்மீகமும் இணந்து, தொழில்நுட்பத்தின் உதவியோடு நம் பாரத பண்பாட்டிற்கு அணிகலனாக திகழ்கிறது!