
கட்டுரை: கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்,
ஆசிரியர், கலைமகள் / மஞ்சரி
இன்று சர்வோதயா தினம். மகாத்மா காந்தியின் நினைவு தினம். சர்வோதயம் என்ற வார்த்தைக்கு ‘எல்லோருடைய நலன்’ என்று பொருள் கொள்ளலாம். சுயசார்பு முறை என்றும் ஒரு அர்த்தம் உண்டு. நமக்கு வேண்டியதை நாமே தயார் செய்து கொள்ளுதல்.
கிராமியப் பொருளாதாரம் தேசத்தின் அடித்தளம் என்பது காந்திஜியின் நம்பிக்கை. உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது இன்றைய மோடி சர்க்காரின் கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது…..
என்னுடைய கொள்ளுத் தாத்தாவில் ஒருவரின் பெயர் ஸ்ரீமான் காசி விஸ்வநாத ஐயர் என்பதாகும். இவருடைய மனைவியின் பெயர் ஸ்ரீமதி விசாலாட்சி. வீட்டில் சின்னப் பொண்ணு என்று இவரை அழைப்பார்கள். இந்த சின்னப் பொண்ணு அவர்களின் சகோதரியின் பெயர் ஸ்ரீமதி கல்யாணி.இந்த கல்யாணியின் மகளான ஸ்ரீமதி பொன்னம்மாளின் பேரன் நான். எனவே எனக்கு காசிவிஸ்வநாத ஐயர் கொள்ளுத் தாத்தா முறை ஆவார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் காசி விசுவநாத ஐயர் அவர்கள் கீழாம்பூரில் பல புதுமையான முயற்சிகளைச் செய்தவர்.
விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தியவர். கீழாம்பூர் ரயில்வே லைனுக்கு மேல்புறம் பூவன் குறிச்சிக்கு அருகில் விவசாயத் தோட்டம் ஒன்றை உருவாக்கினார். இந்த விவசாய தோட்டத்தின் மையப்பகுதியில் பெரிய அளவில் தறி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.
பட்டியல் இனத்தவர்களுக்கு அந்தக்காலத்திலேயே மரியாதை கொடுத்தார். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்ததோடு நெசவுத் தொழிலையும் கற்றுக் கொடுத்தார். விவசாய தோட்டத்திற்கு உள்ளேயே அவர்களுக்கு குடில்களும் அமைக்கப்பட்டன.
என்னுடைய தாத்தா ஸ்ரீமான் திருமங்கலம் சுப்பையா அய்யர் (அப்பாவின் அப்பா-பொன்னம்மா பாட்டியின் கணவர்) அவர்களும் காசி விஸ்வநாத ஐயரின்(சின்ன மாமனார்) வழிகாட்டுதலோடு கீழாம்பூர் தெற்கு கிராமத்தில் வடக்கு வரிசையில் தன்னுடைய வீட்டில் தறி அமைத்து நெய்து வந்தார். நெல்லை மாவட்டத்தில் அந்தக் காலத்தில் முதன் முதலாக பெரிய அளவில் புதுமையான உத்வேகத்துடன் தறிகள் அமைக்கப்பட்டது எனது கிராமத்தில் என்பது குறிப்பிடத்தக்கது! எனது முன்னோர்கள்தான் இதற்கான முழு முயற்சியையும் மேற்கொண்டார்கள்.
நெசவு செய்த ஆடைகளை தலையில் சுமந்து கொண்டு எனது தாத்தா திருமங்கலம் சுப்பையா ஐயர் அம்பாசமுத்திரத்தம் செல்வார்கள். அங்குள்ள காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்த சங்கா ஆபீஸில் இதற்கான விற்பனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது….. பின்னர் கல்லிடைக்குறிச்சி பத்தமடை வீரவநல்லூர் போன்ற ஊர்களிலும் பருத்தி துணி நெய்வதற்கான தறிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பத்தமடையில் பாய் நெசவு அதற்கு முன்பாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீமான் பச்சப் பெருமாள் என்கிற பட்டியலினத்தவர் தான் எங்கள் வீட்டில் அக்காலத்தில் வேலைக்கு இருந்தார். சூரியனைப் பார்த்து இன்று மழை பெய்யும், மழை பெய்யாது, வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் என்றெல்லாம் சொல்லக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தார் பச்சப் பெருமாள். இவரைத்தான் நெசவு கூடத்திற்கு தலைவராக்கினார் திரு காசி விஸ்வநாத ஐயர்.
காசி விஸ்வநாதரின் தோட்டம் பின்னாளில் திருமங்கலம் சுப்பையா அய்யர் கைவசம் வந்தது. இந்த பச்ச பெருமாள் எங்கள் வீட்டு விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்தார். இவருடைய மகன் கருத்தப்பிள்ளையூர் ஊராட்சியில் உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காசி விஸ்வநாத ஐயரின் புதுமைகளைப் பாராட்டும் வண்ணம் அவர் அமைத்த விவசாய பகுதிகள் இருந்த இடத்தை விஸ்வநாதபுரம் (பூவன் குறிச்சிக்கு மேல்புறம் உள்ள இடம்)என்று இன்று அழைக்கிறார்கள்.
அதேபோன்று விஸ்வநாத ஐயரின் தோட்டத்திற்கு மேல்புறம் கீழாம்பூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த காசி ஐயர் அவர்களின் குடும்பத்திற்கு நிறைய நிலபுலன்கள் இருந்தன. அந்தப் பகுதியை இப்பொழுது காசியாபுரம் என்று அழைக்கிறார்கள்.
தாமிரபரணி நதிக்கரையை ஒட்டிய ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடந்த பொழுது பல முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த தாழிகளின் உள்ளே மண்வெட்டி, கொழு போன்ற விவசாய கருவிகளும் உமி, நெல் போன்ற விவசாய உணவு பொருட்களின் அடையாளங்களும் இத்துப்போன பஞ்சாடைகளின் எச்சங்களும் கிடைத்துள்ளன! எனவே நெல்லை மாவட்டத்தில் விவசாயமும் நெசவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்தன என்று தெரியவருகிறது.
பாலாடை, பஞ்சாடை என்று சொல்கிற வழக்கம் தமிழர்களிடம் இருந்தது. உடுத்தும் துணியைக் பஞ்சாடை என்றும் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் உபகரணத்தை பாலாடை என்றும் அழைப்பார்கள்.காச்சிய பாலின் மீது படிவதையும் பாலாடை என்று சொல்வார்கள். துகில் என்றும் பஞ்சாடைகளைக் குறிப்பர்.
பழம் தமிழ் இலக்கியங்கள் மூலமாக தமிழர்கள் நூல் ஆடையின் பயனை அறிந்திருந்தார்கள் என்று தெரிய வருகிறது.
‘ஆடை உடையான் அவைக்கு அஞ்சான்’– ‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’ என்கிற பழமொழிகள் வழக்கத்தில் இருந்து வருகின்றன……
உடை பெயர்த் துடுத்தல்…… என்பது தொல்காப்பியம் ஆகும். பெண்கள் நூல் நெய்ததாக நக்கீரர், கபிலர்,பவணந்தி முனிவர் ஆகியோரின் பாடல்கள் மூலம் அறிகிறோம். பருத்தி பெண்டு …என்று புறநானூறு பேசுகிறது!
நூலினு மயிரினு நுழைநூற் பட்டினும்….. என்ற வரிகள் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகிறது.
அந்தக் காலத்தில் தன் கையே தனக்கு உதவி என்கிற பழமொழிக்கு ஏற்ப ஆடைகளையும் மனிதர்களே நெய்துகொண்டார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல..