ரஜினிகாந்த்தின் “மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்” என்ன?

Published:

திரைச்சுவை என்ற சினிமா இதழை நான் நடத்திக் கொண்டிருந்த 1982. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஜக்கனாரை என்ற கிராமத்தில் இருந்து காரிதாசன் என்ற படுகர் வாலிபர் சென்னைக்கு வந்தார். 

எனது நண்பர் ஜி.கே. என்ற நாடக இயக்குனரைச் சந்தித்துத் தான் ஒரு திரைப்படம் எடுக்க விரும்புவதைச் சொன்னார். 

அப்போது “காதுல் பூ” என்ற மேடை நாடகம் அன்றைய நாடக நகைச்சுவை சூப்பர் ஸ்டார் எஸ்.வி. சேகர் நடித்து வெற்றிகரமாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் இயக்குனர் மற்றும் கதை வசனகர்த்தா ஜி.கே. தான்.

எனவே எஸ்.வி.சேகர் நடிக்க அதே கதையைப் படமாக்குவதென்று முடிவு செய்தார் ஜக்கனாரை காரிதாசன். ஆனால் சிறிதுகாலத்தில் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

எஸ்.வி.சேகர் ஒதுங்கிக்கொண்டார். நண்பர் என்ற முறையில் ஜி.கே. என்னிடம் உதவி கேட்டுவந்தார். காரிதாசனையும் அறிமுகம் செய்துவைத்தார். 

எஸ்.வி.சேகர் எனக்கும் நல்ல நண்பர். திருநெல்வேலி ஸ்பிக் காலகட்டத்தில் நாடகம் நடத்தவந்தபோது ஏற்பட்ட நட்பு. நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் உள்ள உணவகம் ஒன்றில் தக்காளி ஊத்தப்பம் பிரமாதமாகப் போடுவார்கள். அது அவருக்கு மிகவும் பிடிக்கும். பல இரவுகள் அங்கு இருவரும் அதைச் சுவைத்திருக்கிறோம். பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர்.

ALSO READ:  வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

ஆனாலும் “காதுல பூ” சினிமாவைத் தொடர எஸ்.வி.சேகருக்கு ஏனோ விருப்பமில்லை. பிறகு நாங்கள் வேறு கதாநாயகனைத் தேடத் துவங்கினோம். 

அப்போது எங்களுக்கு அறிமுகமானவர் தான் ராகவேந்தர். லதா ரஜினிகாந்த்தின் சகோதரர். அப்போதே ஏதோ பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆள் படு ஸ்டைலாக சிக்கென்று இருப்பார். 

பின்னாட்களில் அவரது மகன் அனிருத் பெரிய இசையமைப்பாளராக வருவார் என்று அப்போது தெரியாது.

கதைப்படி ஹீரோ தவறுதலாக எமலோகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அங்கு அவர் செய்யும் சாகசங்களை நகைச்சுவையாகச் சொல்லி இருப்பார் ஜி.கே. இரட்டை வேட சப்ஜெக்ட். 

சூப்பர் ஸ்டார் மைத்துனர் ராகவேந்தர் என்பதால் எமலோகத்தில் நடைபெறும் நகைச்சுவையில் ரஜினி ஒரு கௌரவ பாத்திரம் நடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பேசப்பட்டது. 

அடுத்த சில தினங்களில் நானும், ஜி.கே. உள்ளிட்ட சில நண்பர்களும் ரஜினிகாந்த்தை படப்பிடிப்பு இடைவேளை ஒன்றில் சந்தித்தோம். எனது நண்பர் டைரக்டர் ராஜசேகர் (மலையூர் மம்பட்டியான் 1) எடுத்துக்கொண்டிருந்த இந்தித் திரைப்படம் (கங்குவா என்று நினைக்கிறேன்) ஒன்றில் அப்போது ரஜினி நடித்துக் கொண்டிருந்தார். 

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

மிகவும் எளிமையான மனிதர். அப்போதே உச்ச நட்சத்திரம். ஆனாலும் மிகவும் பணிவாகப் பேசுவார். அவரது தனிப் பெருங் குணங்கள் அவை என்பது இன்று வரை என் எண்ணம்.

ஆனாலும் ரஜினி எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வில்லை. மனைவியின் தம்பியாக இருந்தாலும் உதவிக்கென்று ஒரு எல்லைக்கோடு வைத்திருந்தார். 

வேண்டுமானால் தம்பியின் திரையுலக வளர்ச்சிக்கு லதா ரஜினிகாந்த் படத்தின் பாடல் ஒன்றைப் பாடலாம் என்பதோடு பேச்சை முடித்துக்கொண்டார். 

கடைசியில் அது தான் நடந்தது. “லதா ரஜினிகாந்த் பாடும்” என்ற விளம்பரத்தோடு படம் வெளிவந்தது காதுல பூ. படத்தின் “ப்ரிவ்யூ” காட்சிக்கும் ரஜினி குடும்பத்தோடு வந்திருந்தார். 

முறிந்துபோன பேச்சுவார்த்தை எதையும் காட்டிக்கொள்ளாமல் வெகுவாக ரசித்தார். கை தட்டினார். வணக்கங்களையும் வாழ்த்துகளையும் கூறி விடை பெற்றார். 

அதற்குப் பிறகு அவரை நான் சந்தித்ததே கிடையாது. அவரது அரசியல் பிரவேசம் குறித்த சர்ச்சை 95 காலகட்டத்தில் வரும்போதெல்லாம் “ரஜினிகாந்த் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்”என்றே நினைத்தேன். 

தன்னளவில் மட்டுமே சிந்திக்கிறவர என்கிற பிம்பம் தான் என் மனதில் இருந்தது. அது தோற்றப் பிழையாகவும் இருக்கலாம்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

ஆனாலும் மேற்கண்டவற்றை நான் எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால் ரஜினி வெளியே தெரிகிற மாதிரி  “எல்லாவற்றையும் எளிதில் நம்புகிறவர்”  கிடையாது. ஆழமான யோசனை அவருக்கு உண்டு. 

அவரது அரசியல் அறிவிப்பின் பின்னாலும் அது ஒளிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.  

அப்படி என்றால் அது என்ன ஐடியா? ரஜினிகாந்த்தின் “மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்” என்ன?

கருத்து: பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்

Related articles

Recent articles

spot_img