ஏப்ரல் 20, 2021, 3:08 மணி செவ்வாய்க்கிழமை
More

  உ.வே.சா., ஐயர் நினைவில்..! பத்துப்பாட்டுக்கு பட்டபாடு!

  தாமிரபரணிக் கரை நகரங்களில் உ.வே.சா., பெற்ற சுவடிகள் பலப் பல. அவற்றில் ஒன்றுதான்… பத்துப் பாட்டு!

  uvesaiyer-1
  uvesaiyer-1

  இன்று உவேசா., என்று சுருக்கமாகக் கூறப்படும். உத்தமதானபுரம் வேங்கட சாமிநாதய்யரின் பிறந்த தினம்.

  தமிழுக்கு ஒரு பெருமை உண்டு. அது என்றும் இளமையாய் இருப்பது என்பதுதான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் என்று சொல்வார்கள். அந்தப் பழைமையைப் பறைசாற்றுவது, தமிழ்க் குடி பேசிய தமிழ் மொழி.

  ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கால ஓட்டத்தில், ஒரு பழைமையான மொழி பல்வேறு கட்டங்களில் சிதைந்து, உரு மாறி, இன்று நவீன யுகத்தில் புழங்கப்படுவது வேறாக மாறியிருக்கும். பண்டைய மொழியைப் புரிந்து கொள்வதும் பேசுவதும் எழுதுவதும் இன்றைய தலைமுறைக்கு கடினமாகப் போயிருக்கும்.

  ஆனால், தமிழ் மொழி 3 ஆயிரம் வருடங்கள் முன் எப்படி புழங்கப் பட்டதோ, அதே போன்று இன்றும் திகழ்வது சிறப்பு. அதாவது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களை இன்றைய தமிழ்த் தலைமுறையும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் இருந்திருப்பது என்பதை நாம் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ள வேண்டும்.

  திருக்குறள் படித்துப் புரிந்து கொள்ளாத தமிழ்ச் சிறுவர்கள் குறைவுதான்! சென்ற இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை திண்ணைப் பள்ளிகளில் சுவடிகளில் எழுதிக் கற்றுக் கொடுக்கப் பட்டு, படிக்கப்பட்டு வந்த இலக்கியங்களை, இன்றைய நவீன யுகத்தில் அச்சு வடிவிலும் மொபைல் போன், கணினி என நவீன கருவிகளின் வாயிலாகவும் படிக்கிறோம். அவற்றைப் படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம்.

  இத்தகைய மொழியின் வளமைக்கும் இளமைக்கும் காரணமாக அமைந்தவர்கள் பலர். தன்னலம் கருதாத் தொண்டர்களாய் இருந்த அந்த மொழி அறிஞர்களால் நம் மொழி பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. அத்தகையவர்களில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து நம்மால் கொண்டாடப் பட வேண்டியவராய்த் திகழ்ந்தவர் உ.வே.சாமிநாத ஐயர்.

  திண்ணைப் பள்ளிகளின் வழியே, குரு சீடர் என ஆசிரியர் மாணவர்களின் வழியே வழி வழியாய்க் கற்பிக்கப் பட்டு வந்த இலக்கியங்கள் சுவடிகளில் முடங்கிக் கிடந்தன. பாரத நாட்டில் பாரசீகப் பகைவர்களின் படையெடுப்புகளால் தீக்கிரையான சுவடிகள் வெகு அதிகம். பின்னர் பரங்கியரெனும் பகைவர்களால் சிதைவுற்ற சுவடிகளும் வெகு அதிகம். பலவற்றை அவர்கள் தங்கம் வைரமெனும் செல்வங்களை அள்ளிச் சென்றது போல் அள்ளிச் சென்றார்கள். அவற்றினும் தப்பிப் பிழைத்து சுவடிகள் பல அங்கங்கே மண்பானைகளில் உறங்கிக் கிடந்தன.

  uvesa-1
  uvesa-1

  பாரதத்தில் பரவலாகத் தோன்றிய சுதந்திரப் போராட்டக் காலத்தில்… இலக்கியச் செல்வங்கள் கவனிப்பார் அற்றுக் கிடந்தன. அந்த நேரத்தில் தான், தமிழன்னை தன்னை மீட்டெடுக்க தன் தவப்புதல்வனாய் உ.வே.சாமிநாதய்யரைப் பிறக்கச் செய்தாள்.

  சுவடிகளில் உறங்கிக் கிடந்த இலக்கியங்களைப் பதிப்பித்து, நவீனத் தமிழ்ச் சமுதாயத்துக்கு அளிக்க… சுவடிகளைத் தேடி… ஊர் ஊராய்த் தெருத் தெருவாய்ச் சுற்றினார். வாழும் காலமெல்லாம், சுவடிகளைத் தேடுவதிலும் அவற்றைக் கண்டடைந்து பதிப்பிப்பதிலும் தான் அவர் எண்ணம் முழுதும் நிறைந்திருந்தது. அதற்காக அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல…!

  இதுபற்றி தனது சுயசரிதையில் உ.வே.சாமிநாத ஐயர் பதிவு செய்திருக்கிறார். அவற்றில் ஒரு சிறு பகுதி தான் இது…

  தண்தமிழ் என்று வந்தாலே, அது பொருநையின் தொட்டிலில் தவழ்ந்ததாய்த் தான் சொல்ல முடியும். தாமிரபரணி நதி தன்னோடு தமிழையும் சேர்த்து காலம் காலமாய் வளர்த்து வந்திருக்கிறது. தலைமுறைகளாய்ப் பாய வைத்திருக்கிறது.

  தாமிரபரணிக் கரை நகரங்களில் உ.வே.சா., பெற்ற சுவடிகள் பலப் பல. அவற்றில் ஒன்றுதான்… பத்துப் பாட்டு!

  இதனை தமது நிலவிலே மலர்ந்த முல்லை எனும் தலைப்பிலான கட்டுரையில் சுவையாக வர்ணித்திருக்கிறார் உ.வே.சா.

  தெய்வத் தமிழின் வழியே எளியோரும் இறைவனை உணரச் செய்து பக்தி வளர்த்த தெய்வத் தமிழர் நம்மாழ்வார், எவ்வாறு உ.வே.சாமிநாத ஐயருக்கு உதவினார் என்பதை இந்தக் கட்டுரையில் கொடுத்திருக்கிறார்….


  நிலவிலே மலர்ந்த முல்லை!

  ஒரு சுவடியில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களின் “ஜாப்தா’ இருந்தது. அதிற் கண்டவற்றுள் பத்துப்பாட்டின் முதல் ஏழு பாடல்களுள்ள பிரதியின் பெயர் ஒன்று. ஊரை விட்டுப் புறப்பட்டது முதல் அனுகூலமான செய்தியொன்றையும் பெறாமல் தளர்ச்சியடைந்திருந்த என் மனத்தில் அப்பொழுது சிறிய ஊக்கம் பிறந்தது. அந்தச் சுவடிக் குவியல்களிலே பத்துப்பாட்டு அகப்படக் கூடுமென்றே நம்பினேன்.

  மூன்று நாட்கள் ஆழ்வார் திருநகரியில் இருந்தேன். வந்த முதல்நாள் ஆவணியவிட்டம். ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த பள்ளிக்கூடப் பரிசோதகரும் என் நண்பருமாகிய சிவ ராமையரென்பவருடைய வீட்டில் தங்கி இருந்தேன். ஒவ்வொரு நாளும் லக்ஷ்மண கவிராயர் வீட்டில் ஏடு பார்ப்பதும் இடையிலே சில சமயங்களில் தாயவலந் தீர்த்த கவிராயர், அமிர்த கவிராயர் முதலிய வேறு கவி ராயர்கள் வீடுகளிலுள்ளவற்றைப் பார்ப்பதும் என்னுடைய வேலைகளாக இருந்தன. முப்பது கவிராயர்கள் வீடு களில் தேடினேன். லக்ஷ்மண கவிராயர் வீட்டிலுள்ள ஏடுகள் எல்லாவற்றையும் பார்த்தேன். பத்துப்பாட்டு அகப்பட வில்லை. இது நான் புறப்பட்ட காலத்து ஏற்பட்ட சகுனங்களின் பயன் என்றெண்ணி வருந்தினேன்; என் உள்ளம் சோர்ந்தது.

  nammalwar-swami-1
  nammalwar-swami-1

  அப்பொழுது லக்ஷ்மண கவிராயர், “எங்கள் வீட்டில் அளவற்ற ஏடுகள் இருந்தன. எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மனைவியாரின் பிறந்தகம் தச்சநல்லூர். தம் புருஷர் இறந்தவுடன் அவர்கள் தச்ச நல்லூர் சென்று விட்டார்கள். போகும்போது இங்கிருந்த சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்” என்றார். “பத்துப்பாட்டும் அந்தச் சுவடிகளோடு தச்ச நல்லூருக்குப் போயிருக்க வேண்டும். சரி; இவ்வளவு சிரமப்பட்டும் பயனில்லாமற் போயிற்றே!” என்று வருந்தி நான் கூறினேன்.

  அவர் திடீரென்று எதையே நினைத்துக் கொண்டு, “ஒரு விஷயம் மறந்து விட்டேன்; இவ்வூரில் என்னுடைய மாமனார் இருக்கிறார். தேவபிரான் பிள்ளையென்பது அவர் பெயர். அவருக்கும் எனக்கும் இப்பொழுது மனக் கலப்பில்லை. என்னுடைய வீட்டிலிருந்த வேலைக்காரன் ஒருவன் சில சுவடிகளைக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து விட்டான். அவரிடம் நீங்கள் தேடும் புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம். ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது நிறுத்தி விட்டேன்” என்றார்.

  “அவற்றையும் பார்ப்போம். தாங்கள் மட்டும் தயை செய்ய வேண்டும். எனக் காகவும், தமிழுக்காகவும் மனஸ்தாபத்தை மறந்து தாங்களே அவர் வீட்டில் இருப்ப வற்றை வாங்கித் தர வேண்டும்; என்னை வரச் சொன்னாலும் உடன் வருவேன்” என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்; அருகிலுள்ளவர்களும் சொன்னார்கள். கவிராயர் அங்ஙனமே செய்வதாக ஒப்புக் கொண்டார்.

  ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கையும் மனமும் சோர்ந்து, அவ்வூரில் ஸப்ரிஜிஸ்திராராக இருந்த இராமசாமி ஐயரென்பவர் வீட்டுக்குப் போனேன். இரவு அவர் வீட்டில் போஜனம் செய்து விட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். அவ்வூரிலுள்ள ஸ்ரீ வைஷ்ணவப் பெரியார் சிலர் நான் விரும்பியபடி திவ்யப் பிரபந்தத்திலுள்ள சில பாசுரங்களின் பழைய வ்யாக்கியானங்களைச் சொல்லிக் கொண்டி ருந்தனர். நான் மிக்க விருப்பத்துடன் கேட்டு மகிழ்ந்தேன். இயல்பாகவே அவ்வியாக்கியானங்களைக் கேட்டு அடையும் முழு மகிழ்ச்சியும் எனக்கு அப் பொழுது உண்டாக வில்லை. அதற்குக் காரணம் அவற்றைச் சொன்னவர் களது குறையன்று; என் உள்ளத்துக்குள்ளேயிருந்த, “பத்துப்பாட்டு அகப்பட வில்லையே!’ என்ற கவலையே.

  இப்படி இருக்கையில், அன்று ஏதோ விசேஷமாதலின், திருவீதியில் பெருமாளும், சடகோபராழ்வாரும் எழுந் தருளினார்கள். ஆழ்வார் அவதரித்த திவ்ய தேசம் அவ்வூரென்று நான் சொல்வது மிகை; நானும் பிறரும் எழுந்து தரிசனம் செய்தோம். நான் வணங்கினேன். பட்டர்கள் சந்தனம் புஷ்பமாலை முதலியவற்றை அளித்தார்கள்.

  எல்லோருடைய அன்பும் ஒருமுகப் பட்டு அத்தகைய மரியாதைகளை நான் பெறும்படி செய்தது.

  nammalwar-utsav-1
  nammalwar-utsav-1

  அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தைத் தரிசித்தேன்; அவரைப் பார்த்து, “ஸ்வாமி! தமிழ் வேதம் செய்தவரென்று தேவரீரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூலொன்றைத் தேடி வந்திருக்கிறேன். தமிழுக்குப் பெருமையருளும் தேவரீருக்கு, நான் படும் சிரமம் தெரியாததன்றே! நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா!” என்று சொல்லிப் பிரார்த்தித்தேன். உள்ளம் அயர்ந்து போய், “இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை’ என்ற முடிவிற்கு வந்தமை யினால் இங்ஙனம் பிரார்த்தனை செய்தேன்.

  பெருமாளும் ஆழ்வாரும் அவ்விடத்தைக் கடந்து அப்பால் எழுந்தருளினார்கள். உடனே நாங்கள் திண்ணையில் வந்து அமர்ந்தோம். நிலா ஒளி நன்றாக வீசியது. அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக் கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார். திருக்கோயிலில் பிரசாதங்களைப் பெற்று அவற்றை மறைத்துக் கொண்டு வருகிறாரென்று நான் நினைத்தேன்.

  வந்தவர், “இந்த புஸ்தகத்தைப் பாருங்கள்; இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக்கிறது; பார்த்து விட்டுத் திருப்பி அனுப்பி விடுவதாகச் சொல்லி வாங்கி வந்தேன்” என்று கூறி மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார். அவர் என்னிடம் கொடுப்பதற்கு முன்பே ஆத்திரத்தால் நான் அதனைப் பிடுங்கினேன்; மேலே கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து அந்த நிலாவின் ஒளியிலேயே பிரித்தேன். சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் என் கண்ணிற்பட்டது.

  நிலவில் மலர்ந்த அம் முல்லையினால் என் உள்ளம் மலர்ந்தது. எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லை யில்லை. மிகவும் விரைவாக முதலி லிருந்து திருப்பித் திருப்பிப் பார்த்தேன். ஆரம்பத்தில் திருமுருகாற்றுப் படை, அப்பால் பொருநராற்றுப்படை, அதன் பின் சிறுபாணாற்றுப்படை இப்படி நெடுநெல்வாடை முடிய ஏழு பாட்டுக்கள் இருந்தன. ஒவ்வோர் ஏட்டையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கையில் என்னையே மறந்து விட்டேன். சந்தோஷ மிகுதியினால் அப்பொழுது என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருகிலிருந்தவர்களுக்குப் பொருள்பட்டிரா.

  அந்தச் சமயத்தில் மட்டும் என்னை யாரேனும் புதிதாகப் பார்த்திருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகவே கருதியிருப்பார்; என்னுடைய மன உணர்ச்சி அவ்வளவு தீவிரமாகயிருந்தது. ஆழ்வாரை ப்ரார்த்தித்தது வீண் போகவில்லை. அவர் கண்கண்ட தெய்மென்பது ஐயமேயில்லை என்று அருகிலிருந்தவர்களிடம் கூறினேன்.

  அன்று இரவு முழுவதும் ஸந்தோஷ மிகுதியினால் எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாள் காலையில் திருக் கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து அர்ச்சனை செய்வித்து, இப்படியே நான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலம் செய்தருள வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டு வந்தேன்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »