spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 17)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 17)

- Advertisement -
manakkula vinayakar

விநாயகர் நான்மணிமாலை – பகுதி 17
விளக்கம்: கு.வை.பாலசுப்பிரமணியன்

பாடல் 20 – அகவல்

இறைவி இறையவ னிரண்டு மொன்றாகித்
தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள் ளொளியாகி யுலகெலந் திகழும்
பரம் பொருளேயோ! பரம்பொருளேயோ!
ஆதிமூலமே! அனைத்தையுங் காக்கும் 5

தேவ தேவா, சிவனே, கண்ணா,
வேலா, சாத்தா, விநாயகா, மாடா,
இருளா, சூரியா, இந்துவே, சக்தியே,
வாணீ,காளீ, மாமகளேயோ,
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள 10

தியாதுமாய் விளங்கு மியற்கைத் தெய்வமே;
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே,
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்,
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; 15

உடைமை வேண்டேன்,உன்துணை வேண்டினேன்
வேண்டா தனைத்தையு நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே.

பொருள் – விநாயகப் பெருமானே நீ இறைவி, இறைவன் இருவரும் ஒன்றாகித் தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் நமது உள்ளத்தின் உள்ளே உள்ள ஜீவ ஒளியாகி, திகழுகின்ற பரம்பொருள் அல்லவோ?

ஆதிமூலமே, அனைத்தையுங் காக்கும் தேவ தேவா, சிவனே, கண்ணா, வேலா, சாத்தா, விநாயகா, மாடா, இருளா, சூரியா, இந்துவே, சக்தியே, வாணீ, காளீ ஆகிய மிகப் பெரும் பெண் தெய்வங்களாய், ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், இவ்வுலகில் உள்ளது யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே விநாயகா.

வேதச் சுடரே, மெய்யான கடவுளே, நான் உன்னிடம் அபயம் கேட்டேன். எனக்கு நோய்கள் வேண்டாம்; நூறாண்டு வாழுகின்ற வாழ்வு வேண்டும்; அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்; வேண்டாத அனைத்தையும் நீக்கி, வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே.

பாடல் ‘இறை’ எனத் தொடங்கி ‘கடனே’ என முடிகிறது.

பாரதியார் பேசும் தெய்வங்கள்

இந்தப் பாடலில் பாரதியார் சாத்தன், மாடன், இருளன் ஆகிய சிறுதெய்வங்களையும், சிவன், வேலவன், திருமால், காளி, வாணி, சக்தி ஆகிய பெண்தெய்வங்களையும், அலிவடிவ தெய்வத்தையும், மாதொருபாகன் வடிவத்தையும் விநாயகராகப் பார்க்கிறார். சிவ சக்தியரே சிவ-விஷ்ணுக்களாக பார்க்கப்படுவதும் உண்டு. ‘ரகு வம்ச’த்தில் மங்கள ஸ்லோகமாக (நூல் தொடக்கத்தில் கூறப்படும் கடவுள் வணக்கமாக) வருகிற ஒரு ஸ்லோகம் இத்தகைய கருத்தினைக் கொண்டிருக்கும். ‘பிராதஸ்மரணம்’ சொல்லும் வழக்கமுடைய போன தலைமுறையினரில் நூற்றில் தொண்ணூறு பேருக்கு இந்த ஸ்லோகம் தெரிந்திருக்கும்.

வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த – ப்ரதிபத்தயே
ஜகத : பிதரௌ வந்தே பார்வதீ – பரமேச்வரௌ

இதன் பொருள் ‘சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பவர்களும், உலகங்களுக்கெல்லாம் தாய் தந்தையருமான பார்வதி-பரமேஸ்வரர்களைச் சொல் பொருள் ஆகியவை பற்றிய அறிவு உண்டாகும் பொருட்டு வணங்குகிறேன்’ – என்பதாகும்.

இதிலே முடிவில் வரும் ‘பார்வதீ-பரமேஸ்வரௌ‘ என்பதைப் ‘பார்வதீப-ரமேச்வரௌ’ என்று வேறு விதமாகவும் பிரிப்பதும் உண்டு. இப்படிச் சொன்னால் ‘பார்வதீ-பரமேஸ்வரர்களை வணங்குகிறேன்’ என்பதற்குப் பதில் ‘பார்வதீபதியான பரமேஸ்வரனையும் ரமாபதியான மஹா விஷ்ணுவையும் வணங்குகிறேன்’ என்று அர்த்தம் தோன்றும்.

‘ப’ என்று சொன்னாலே ‘பதி’தான். ‘அதிபதி’ என்பதை ‘அதிப’ (தமிழில் ‘அதிபன்’) என்றாலே போதும். ‘ந்ருப’ (நிருபன்) என்று ராஜாவைச் சொல்கிறோம். ‘ந்ரு’ என்றால் ‘நர’. நரஸிம்ஹம் என்பதை ந்ருஸிம்ஹம் என்றும் சொல்வதுண்டு. நரபதிதான் ‘ந்ருப’ என்பவன். ‘பார்வதீப’ என்றால் பார்வதீபதியான ஈஸ்வரன். ‘ரமேஸ்வர’ என்றால் ரமைக்கு ஈசனாக, நாயகனாக இருக்கப்பட்ட விஷ்ணு. ‘பார்வதீப-ரமேஸ்வரௌ’ என்றால் ‘சிவ-விஷ்ணுக்களை’ என்று அர்த்தம்.

‘பார்வதீ-பரமேஸ்வரௌ’ என்று வைத்துக் கொண்டால் சிவ-சக்தி சொரூபம் நினைவுக்கு வரும். ‘பார்வதீப-ரமேஸ்வரௌ’ என்று அதையே ஒரு எழுத்து பின்னே தள்ளிப் பிரித்துக்கொண்டால் சிவ-விஷ்ணுக்கள் ஆகிவிடுகிறது.

இதிலே பெரிய தத்துவம் உள்ளது. சக்திதான் புருஷ ரூபத்தில் இருக்கிற போது விஷ்ணு; சிவம் எப்போதும் புருஷனாகச் சொல்லப்படும் நிர்குண வஸ்து. இவ்வுலக நண்மைக்காக சிவபெருமான் ஸகுணமான சக்தியோடு சேர்ந்திருக்கிறார். அம்பிகையை இடது பாதியில் வைத்துக் கொண்டு மாதொருபாகனாக இருப்பார். அந்த ஸகுண சக்தியே புருஷ ரூபத்தில் விஷ்ணுவாயிருந்தாலும் அவரை அதே இடது பாதியாக வைத்துக்கொண்டு சங்கரநாராயணராக இருப்பார். விஷ்ணு அம்பிகையின் இடத்தில் ஈசனுக்கு மனைவியாக இருப்பவர். “அரி அலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார்.

எனவே இறைவி இறையவ னிரண்டு மொன்றாகித் தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் என்று பாரதியார் பாடும்போது சைவம், வைஷ்ணவம் என்று பேதமில்லாமல் சிவசக்தி ரூபத்தை நாம் உணரமுடிகிறது.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe