24. நல்ல சங்கல்பம்?!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“ஸஹ்ருதயம் சாம்மனஸ்ய மவித்வேஷம் க்ருணோமி வ:” – அதர்வண வேதம்
“இதயங்கள் இணைந்து நல்ல உள்ளத்தோடு வேற்றுமை இல்லாமல் நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும்”
எண்ணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. நல்ல சங்கல்பம், நல்ல விருப்பம்… இவையெல்லாம் எண்ணத்தோடு தொடர்புடையவை. அதனால்தான் நல்லவற்றையே விரும்பும் திவ்யமான எண்ணங்கள் வேத இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
‘சுப ஆகாங்ஷை‘ (நல் விருப்பம்) என்ற பண்பாடு நல்ல பழக்கமாக வேதங்களில் எடுத்தியம்பப்படுகிறது ஒவ்வொரு மனிதனும் ஒரு சைதன்ய சக்தி. மனிதனிடம் இருந்து வெளிப்படும் எண்ண அலைகள், சொல், பார்வை இவற்றுக்கு சக்தி இருப்பதற்குக் காரணம் அவனில் ஓடிக்கொண்டிருக்கும் சைதன்யமே. அந்த
சைதன்யத்தை பவித்திரமான சாதனைகளால் நியமத்தோடு தூய்மை செய்து கொள்பவரின் ஆளுமை சக்தியோடு கூடியதாகிறது. அப்படிப்பட்டவரின் எண்ணம், சொல், பார்வை அனைத்தும் பிரபஞ்சத்தின் மீது நல்வழியில் தாக்கம் ஏற்படுத்தும். அதாவது நல்ல பண்பாடுள்ள மனிதர் வெளிப்படுத்தும் விருப்பங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். தீயவர்களின் துஷ்ட இயல்புகள் தீய தாக்கத்திற்கு காரணமாகின்றன.
இந்த நன்மை தீமைகளின் எண்ண அலைகள் சுற்றுச்சூழல் மீதும் இயற்கை மீதும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை.
இந்த சூட்சும ரகசியத்தை அறிந்த வேத ருஷிகள் ‘சுப ஆகாங்ஷை’ (நல் விருப்பம்) என்பதை ஒரு அற்புத செயல் வடிவமாக ஏற்படுத்தியுள்ளார்கள்.
நல் விருப்பம் என்ற பெயரால் வெறிபிடித்த ஆர்ப்பாட்டம், வியாபாரம் போன்றவை இன்றி ஒரு உயர்வான முறையில் இயற்கையையும் இயற்கை சக்திகளையும் கட்டுப்படுத்தும் தெய்வீக சக்திகளை பணியாற்றச் செய்து விஸ்வத்திற்கு நன்மை விளைவிக்கும் திசையில் இத்தகைய நல் விருப்பங்கள் பண்டைய பாரத பூமியில் செழித்திருந்தன.
எண்ண சக்தியை சப்த சக்தியால் வெளிப்படுத்தி நல் விருப்பங்களை மந்திரங்களாக நிலைநாட்டினார்கள்.
சனாதனமான இந்த எண்ண அலைகளை கவனித்தால், மிக உன்னதமான பண்டைய காலத்தில், இத்தகு உயர்ந்த பக்குவத்தை அடைந்திருந்த வேத வைபவத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது.
“பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா: பத்ரம் பஸ்யே மாக்ஷபிர்யஜத்ரா:”
‘காதுகளால் நல்லவற்றையே கேட்கவேண்டும். கண்களால் நல்லவற்றையே பார்க்க வேண்டும்” என்பது இதன் பொருள்.
இதில் நமக்கு நிகழும் நன்மை என்பது நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தில் நிகழும் நன்மையே. “நல்ல செய்திகளைக் கேட்க வேண்டும். நல்ல காட்சிகளைக் காண வேண்டும்” என்ற எண்ணத்தில்,‘உலகில் நல்ல சம்பவங்களே நடக்க வேண்டும்’ என்ற உட்பொருள் மறைந்துள்ளது.
“த்யௌ: சாந்தி: அந்தரிக்ஷ: சாந்தி ப்ருத்வீ சாந்தி: வனஸ்பதய: சாந்தி:…”
ஆகாயம், பூமி, சுற்றுச்சூழல், பயிர் பச்சைகள், மரங்கள், நதிகள், கடல் அனைத்தும் சாந்தமாகத் திகழ வேண்டுமென்ற விஸ்தாரமான சாந்தி மந்திரங்கள் விரிந்து பரந்த விஸ்வத்தோடு மானுடத் தொடர்பு எவ்வாறு உள்ளது என்பது பற்றி தெளிவாக விளக்குகின்றன.
மனிதனுக்கும் ப்ரக்ருதிக்கும் உள்ள அனுபந்தத்தை நினைவுபடுத்துகின்றன. அதன் மூலம் பிரபஞ்சத்தோடு தனி மனிதனுக்கு உள்ள பிரிக்கமுடியாத அன்பையும் உறவையும் பலப்படுத்துகின்றன.
“சம்கச்சத்வம் சம்வதத்வம்” –சேர்ந்து நடப்போம். சேர்ந்து பேசுவோம். “சுமனஸ்ஸு, சௌமனஸ்யம்” – நல்ல மனதோடு அனைவரும் ஒரே உள்ளத்தவராக வாழ்வோம்... போன்ற எண்ணங்கள் சேர்ந்து வாழ்ந்து செல்வங்களைப் பகிர்ந்து வாழும் சமமான வழிமுறையை மிகத் தெளிவாக காட்டுகிறது.
“பஸ்யேம சரதஸ்ஸதம் சந்தாம சரதஸ்ஸதம் மோதாம சரதஸ்ஸதம் ப்ரப்ரவாம சரதஸ்ஸதம்” போன்ற மந்திரங்கள், “வாழும் காலம் வரை புலன்கள் அனைத்தும் நல்ல விதமாக பணிபுரிந்து ஆனந்தமாக வாழ்வோம்” என்ற உயர்ந்த நல் விருப்பத்தை அறிவிக்கின்றன.
தினமும் நல்லவற்றையே சங்கல்பிக்க வேண்டுமென்றும் நல்லவற்றையே எண்ண வேண்டும் என்றும் புராணங்கள் போதிக்கின்றன.
விபரீதமான எண்ணங்களை மனத்துக்குள் வரவேண்டாம் என்றும் எத்தனை கோபம் வந்தாலும் அமங்கலமான சொற்களைப் பேச வேண்டாம் என்றும் வேத, இதிகாச, புராணங்கள் ஆணையிடுகின்றன. அதனால்தான் நம் தேசத்தில் பேச்சில் தவறுதலாகக் கூட அமங்கலச் சொற்கள் வராமல் கவனமாக இருப்பார்கள். ஏதாவது பொருள் தீர்ந்து விட்டால் ‘நிறைந்துவிட்டது’ என்போம். தீபம் அணைந்து விட்டால் ‘மலையேறி விட்டது’ என்போம். இவ்விதம் நல்ல விருப்பங்களை தினசரி வாழ்க்கையின் நடைமுறையில் நம் கலாச்சாரம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
“மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ:” – காற்று அமிர்தம் போன்றும் நதிகள் அமிர்தம் போன்றும் ஸ்வச்சமாக, உற்சாகமாக அருள வேண்டும்.
“சூஷாதமே சுதினம்தமே” – நல்ல உதயம், நல்லநாள் கிடைக்கவேண்டும்.
இவ்வாறான சனாதன நல் விருப்பங்கள் பலப்பல உள்ளன. நல்ல எண்ணங்களை நிரந்தரம் பெற்றிருந்தால் நம் உள்ளத்தின் ஆழ்படலங்களில் துளியும் தீய சம்ஸ்காரங்கள் மீதி இருக்காது. அதற்கு நித்தியமும் நல் விருப்பங்கள் கொண்ட வாழ்க்கையை வாழ சங்கல்பம் செய்து கொள்வோமாக!