
36. யாரையும் வெறுக்க வேண்டாம்
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“மானோத்விக்ஷத கஸ்சன” – அதர்வணவேதம்.
“நாங்கள் யாரையும் துவேஷிக்காமல் இருப்போமாக!”
இந்த சங்கல்பம் திடமாக இருக்க வேண்டும். யாரிடமும் சிறிதளவு வெறுப்பு ஏற்பட்டாலும் உடனே அதை நீக்கி விட முயல வேண்டும்.
அடுத்தவர் நமக்கு அனுகூலமாக இல்லாவிடில் துவேஷம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி நம்மைவிட பிறர் சிறப்பாக இருந்தாலும் வெறுப்பு தோன்றுகிறது. பொறாமையால், அசூயையால் வெறுப்பு தோன்றும். ஒருமுறை வெறுப்பு வந்து விட்டால் பிறருடைய நற்செயல் கூட தீமையாகவே தென்படும். அன்பிருந்தால் தீய செயல்கள் கூட நல்லதாகவே தோன்றும்.
“அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ர: கருண ஏவச” என்பது பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவின் கூற்று.
பக்தி யோகத்தில் பக்தனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள், “அத்வேஷ்டா சர்வபூதானாம்”. சிலர், பக்தர்கள் என்று கூறிக்கொண்டே பிறரை வெறுப்பார்கள். இது தவறு. ஏனென்றால் ஒவ்வொருவரின் உடலிலும் பரமாத்மா உள்ளார் என்று சாஸ்திரம் கூறுவதை நம்பும்போது, யாரை வெறுத்தாலும், யாரை துன்புறுத்தினால் பரமாத்மாவையே சேரும் என்பதை அறிய வேண்டும்.
அதனால் பிறரை அவரவருக்கு அளிக்க வேண்டிய மரியாதைப்படி கௌரவித்து வெறுப்பின்றி நடந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் சமுதாயத்தில் அனைவரும் ஒன்று போல் இருக்க மாட்டார்கள். மனிதனுக்குள்ள விபரீதமான குணம் என்னவென்றால் தான் எதை நம்புகிறானோ அதை அனைவரும் நம்ப வேண்டும் என்று எண்ணுவான்.
ஒவ்வொருவர் ஒவ்வொரு கொள்கையை உடையவராக இருப்பார். உலகம் அனைத்தும் ஒரே கொள்கையின் கீழ் வரவேண்டும் என்று விரும்புவது வீண் முயற்சி. அனைவரும் ஒரே கொள்கை உடையவராகவோ ஒரே மதத்தை அனுசரிப்பவராகவோ இருக்க மாட்டார்கள்.
நம் வேத கலாச்சாரத்தில் தேவதைகளை பிரார்த்தனை செய்வது, மோட்சத்தை அடையும் ஞானம் வைராக்கியம் இவற்றைப் பெறுவது… இவையே முக்கிய அம்சங்களாக கூறப்படுவதாக நினைக்கிறோம். ஆனால், ஆலோசனைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் சமுதாய வாழ்வுக்கும், தனிமனித வாழ்க்கை முறைக்கும் இடையில் எழும் பிரச்சனைகளை எவ்விதம் தீர்ப்பது? எத்தகைய கண்ணோட்டத்தோடு வாழ்ந்தால் சுகமாக வாழலாம்? போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக மானுட உறவுகள் குறித்து உயர்ந்த கருத்துக்களைக் கூறுகிறது சாஸ்திரம்.