41. எதனால் பயம் ஏற்படுகிறது?
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“த்விதீயாத்வை பயம் பவதி” – ப்ருஹதாரண்யக உபநிஷத்.
“இரண்டாவது இருப்பதால் பயம் ஏற்படுகிறது”.
நம் வேதாந்த வித்யை ‘ஏக’ தத்துவதை விளக்குகிறது. “ஏகமேவாத்விதீயம் ப்ரஹ்ம“, “ஏகம் சத்“, “ஏகோ நாராயண:“, ஏகோ ருத்ர“, அஜாம் ஏகாம்” – போன்ற எண்ணற்ற வேத வாக்கியங்கள் ஏகத்துவத்தை இலட்சியமாகக் கொண்டு போதிக்கின்றன.
இந்த ‘ஏகத்துவ’ போதனையை வேதாந்தத்தின் உள்ளமாக உணர்ந்து இதனை ‘அத்வைதம்‘ என்றார்கள். இதுவும் உபநிடதக் கூற்றே!.
“ப்ரபஞ்சோபசமம் சாந்தம் அத்வைதம்” என்பது மாண்டூக்கிய உபநிஷத்து கூற்று. இதனை வியாக்கியானம் செய்து போதித்து உண்மையான வேதாந்த சித்தாந்தத்தை தெளிவாக்கிய ஆதிசங்கரரின் போதனைகளை ‘அத்வைதம்‘ என்று பின்னர் வந்தவர்கள் அழைத்தார்கள்.
‘ஏகம்’ என்று கூறாமல் ‘அத்வைதம்’ (இரண்டல்ல) என்று ஏன் கூற வேண்டும்? உலக விவகாரங்களில் துவைதம் (இரண்டு) போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் அது ‘இரண்டல்ல – ஒன்றே!’ என்று கூறுவதே அத்வைதம் என்ற சொல்லின் உள்ளர்த்தம்.
பரமார்த்தம் இதுவே. சத்தியமே பரமார்த்தம். அனைவரிலும் ஒளிரும் தெய்வீக சைதன்யம் ஒன்றே. ஜீவன் அவித்யையால் பிரமை கொண்டு ஈஸ்வர சைதன்யத்தை வேறு வேறாக தரிசிக்கிறான். தேச, கால, வர்த்தமான தளங்களில் மட்டுமே சிந்திக்கக்கூடிய அறிவுக்கு இத்தகு பின்ன பின்ன தரிசனங்கள் ஏற்படத்தான் செய்யும்.
தன் சிறு அசைவுக்குக் கூட மூலகாரணமான பரமாத்ம சைதன்யத்தை அடையாளம் கண்டு, தன் எல்லைக்குட்பட்ட மனம் என்னும் அகங்காரத்தை ஈஸ்வர சைதன்யத்தோடு லயம் செய்யும் யோகி மட்டுமே அந்த அனுபவத்தைப் பெறுகிறான். அதாவது சத்தியத்தை அனுபவத்தில் அடைகிறான். சாதகன் அந்த சத்தியத்தை சாஸ்திரம், குரு உபதேசம் போன்ற வழிகள் மூலம் மனனம் செய்தபடி, மனதில் நிலைநிறுத்திக் கொண்டு ஞானம் வைராக்கியம் பக்தி – இந்த மார்க்கங்கள் மூலம் யோகியாகிறான். சத்தியமாகிய லட்சத்தை சாதித்து அடைகிறான்.
அனைவருக்கும் ஆதாரமான சைதன்யம் ஒன்றே என்று விசாரணை மார்க்கத்தால் அறிந்தவன் உடல் தொடர்பான மரியாதைகளை கடை பிடித்தபடியே பரமாத்மாவை வழிபடுகிறான்.சிறிது சிறிதாக பிரம்மானுபூதியில் தாதாத்மியம் (பேதமற்ற இணைப்பு) பெற்று, தான் வேறு என்ற ஸ்திதியை விட்டு விடுகிறான்.
“அவிபக்தம் விபத்தேஷு தத்ஞானம் வித்தி சாத்விகம்” – வேறு வேறாக உள்ளவற்றில் ஏகத்துவத்தை தரிசிப்பதே சாத்துவிக ஞானம் என்று கீதாசார்யன் கூறுகிறான்.
பின்னப் பார்வை என்பது ராஜஸம் தாமஸம் போன்றவற்றின் திரிபு. சாத்துவிக ஞானமே சிறிது சிறிதாக பிரம்ம ஞானத்தை அளிக்கிறது.
தான் அல்லாதவற்றின் மீதே ஜீவனின் பயம். பிரிவும் கூடலும் தன்னை விட வேறானவற்றில் இருந்து கிடைக்குமே தவிர தன்னிலிருந்தே அவை கிடைக்காது. இங்கு ‘தான்’ என்பது ஸ்தூல உடலாகவோ, உள்ளே இருக்கும் சூட்சுமஉடலாகவோ, காரண உடலாகவோ இங்கு கூறப்படவில்லை. இந்த மூன்று உடல்களிலும், மூன்று அவஸ்தைகளிலும் (ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி) செயல்படும் ‘நான்’ என்னும் ஸ்புரணை கொண்ட ‘அஹ’ த்தோடு,எந்த திரிபுரங்களுக்கு அப்பாற்பட்ட சைதன்யத்தால் பெறப்படுகிறதோ – அந்த சர்வ காரண சைதன்யத்தில் ‘நான்’ என்ற ஸ்புருஹை ஏற்படுகிறது.
தாதாத்மியம் பெற்றால் ‘சர்வம் பிரம்மமயம்‘ என்ற ஸ்புருஹை ஏற்படும். அப்போது இனி இரண்டாவது என்பது இருக்காது. பக்தியோடும் சேர்ந்து அனைத்தும் பகவான் மயமாக பார்ப்பவருக்கு பயமே இல்லை. அதனால்தான் பக்தன் பயமற்றவன், பிரகலாதனைப் போல.
கடலில் அலைகள் எல்லாம் கடலே என்று உணராமல் அலைகளை வேறாகப் பார்ப்பது எப்படியோ ஏகத்துவ தரிசனம் இல்லாமல் இருப்பது கூட அப்படியே. அலைகளெல்லாம் கடலுடையதே. சமுத்திரத்தோடு தொடர்பு இல்லாத அலையே இல்லை. ஒவ்வொரு அலையிலும் சமுத்திரத்தின் சக்தி உள்ளது.
அனைத்து உலகங்களும் பரப்பிரம்மத்திலேயே இருக்கின்றன என்று உணர்ந்து பரப்பிரம்மத்தை விஸ்வ சரீரனாக தரிசிக்க வேண்டும்.
நம் புலன்களில் அவ்வவற்றின் இயல்பும் வடிவமும் அததற்கு இருந்தாலும் அனைத்தும் ‘நான்’ என்ற சைதன்யத்துடையதே அல்லவா! அவ்வாறு அனைத்து ஜீவன்களின் சைதன்யங்களும் பரமாத்மாவுடைய சைதன்ய சக்திகளே!
எங்கும் பரவும் சூரிய ஒளி வீட்டு ஜன்னல் வழியே உள்ளே விழும் போது, ஜன்னலிலிருந்து மட்டுமே ஒளியை பார்ப்பவன் அந்த ஒளியை ஜன்னல் அளவாகவே நினைப்பான். அந்த அறையைப் பொருத்தவரை அது சரிதான். ஆனால் ஜன்னலருகில் சென்று அந்த ஒளிக்கு மூலமான ஆகாயத்தில் ஒளிரும் சூரியனைப் பார்த்தால் அந்த ஒளி அபாரமானது, எல்லையற்றது என்றும், ஜன்னலே எல்லைகளோடு கூடியது என்றும் புரியவரும்.
உடலில் பிரகாசிக்கும் சைதன்யம் அகண்டமான பிரம்மமே என்று தெரிந்தால் மாயையின் விகாரத்தால் ஜீவியிடம் தோன்றும் எல்லைக்குட்பட்ட சிந்தனை விடுபட்டு, “ப்ரஹ்மவித் ப்ரஹ்மைவ பவதி” என்ற நிலைக்கு வருவான். அவனுக்கு அனைத்தும் ஈஸ்வர நிலையமே என்று என்று புரியும்.
எல்லா அலைகளின் ஆட்டத்திற்கும் கடலே ஆதாரம். அலைகளை எல்லாம் சேர்த்து ஏக சமுத்திரமாக பார்க்கும் விவேகி, ஒவ்வொரு அலையிலும் அந்த கடலின் பிரத்தியேக இயல்பையே பார்த்து, ‘எல்லாம் சமுத்திரமே’ என்று ஒப்புக் கொள்வான்.
“ஒரே சூரியன் அனைத்து ஜீவன்களுக்கும் ஒவ்வொன்றாக தோன்றுவது போல” என்று பாகவதம் இந்த சத்தியத்தை விளக்குகிறது.
“ஹரியட, ஹருடட, சுரலட, முனுலட, அகிலாண்டகோடுலட – அந்தரிலோனு பரமாத்முடு வெலிகே” என்று தியாகராஜர் இதனையே அற்புதமாக கீர்த்தனை செய்கிறார்.