November 28, 2021, 8:27 am
More

  ஜூன் 10: சத்குரு ஸ்ரீசிவானந்த மூர்த்தி நினைவுநாள்!

  தன் சொற்பொழிவுகளில் சனாதன தர்மத்தை நேர்மையுடன் பின்பற்றுவதால் விழுமியங்கள் உருவாகி ஆத்ம கௌரவம் மூலம் இந்தியா புத்துயிர் பெறும்

  sadguru sivananda moorthi2 - 1

  ஜூன் 10 சத்குரு ஸ்ரீசிவானந்த மூர்த்தி நினைவுநாள்!
  சத்குரு சிவானந்த மூர்த்தி

  1928 டிசம்பர் 21 ஆம் தேதி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் பிறந்தார். செல்வந்தரான ஜமீந்தார் குடும்பத்தில் பிறந்த சிவானந்த மூர்த்தி தன் செல்ழங்களை ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கிய கொடை வள்ளலாகத் திகழ்ந்தார்.

  ஸ்ரீசிவானந்தமூர்த்தி பீமிலியில் ஆனந்தவனம் என்ற ஆசிரமம் ஏற்படுத்தி ஆன்மீக நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவர் சிவானந்தா கலாச்சார அறக்கட்டளை மற்றும் ஆந்திர மியூசிக் அகாடமி ஆகியவற்றை நிறுவினார். தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல இடங்களில் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் கலைத் துறைகளுக்கு சிறந்த சேவையாற்றியுள்ளார்.

  ஸ்ரீசிவானந்த மூர்த்தியின் தாயார் பெயர் சர்வமங்களா. தந்தை  வீரபசவராஜுலு. இவர்கள் சிவ பக்தர்கள். சுமார் 200  சிவன் கோயில்களைக் கட்டியுள்ளனர்.  இவர்கள் ஆராத்ய பிராமணர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

  சிறுவயதிலிருந்தே, சிவானந்தமூர்த்தி ஆன்மீகத்திலும் யோக சாஸ்திரம் பயிலுவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1949ல் அறிவியல் பட்டப்படிப்பை முடித்து ஹனுமகொண்டாவில் காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தனது பெரும்பாலான நேரத்தை  ஏழைகளுக்கு  உதவுவதிலும் ஹிந்து தர்ம பிரசாரத்திற்கும் செலவிட்டார். உயரதிகாரியாக  பதவியிலிருந்து  தன்னார்வ ஓய்வு பெற்றபின் முழு நேரமும் மக்கள் சேவையிலும் கலாச்சார சேவையிலும் கவனம் செலுத்தினார்.

  இவர் தேசப் பற்றும் சனாதன தர்ம பற்றும் தன் இரு கண்களாகக் கருதினார்.  துறவிகள் உட்பட அனைவரும் பொது நலனுக்காக தங்கள் பங்கு சேவையை ஆற்ற வேண்டும் என்று இவர் அடிக்கடி தனது உரைகளில் கூறுவது வழக்கம்.  ஸ்ரீ சிவானந்த மூர்த்தி சனாதன தர்மம் அதன் வரலாறு இசை நாட்டியம் போன்றவற்றில் ஒரு கலைக்களஞ்சியம் போல்  விளங்கினார்.

  அரசியல் கலாச்சாரம் ஆன்மீகம் குறித்து விரிவாக தெலுங்கு நாளிதழ்களில் எழுதி வந்தார். இவை இரண்டு தொகுதிகளாக பாரதியம் என்ற பெயரில் வெளிவந்தன.  கடோபனிஷாத்தின் விளக்கமாக இவர் எழுதிய அவரது ‘கதயோகம்’ என்ற நூல் மிகப் பிரபலமானது. காஞ்சி பரமாச்சாரியாரும் ஸ்ருங்கேரி சங்கராச்சாரியாரும்  இந்நூலைப் பாராட்டியுள்ளனர். இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய டேவிட் ஃப்ராவ்லி, “சிவானந்த மூர்த்தி அத்வைதம், ஞானம், யோகா மற்றும் அதன் அடித்தளங்களைப் பற்றி அறிந்த சிறந்த மனிதர்” என்று கூறுகிறார். 

  sadguru sivananda moorthi - 2

  ஹிந்து திருமண அமைப்பு (2006), மகரிஷிகளின் வரலாறு (2007) கௌதம புத்தர் (2008) ஆகியவை இவர் எழுதிய புகழ் பெற்ற நூல்களில் சில. சரியான வாழ்க்கை வழிமுறை குறித்து சாமானியனுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் இவர் எழுதிய 450 க்கும் மேலான கட்டுரைகள் ஆந்திரபூமி இதழில் வெளிவந்தன. புராணங்கள் காவியங்கள் மற்றும் இலக்கிய நூல்களிலிருந்து ஆந்திராவின் வரலாற்றைத் தொகுத்தெடுத்து ‘மனகதா’ என்ற நூலை எழுதியுள்ளார்.  இது ஹைதராபாத் தூர்தர்ஷனில் 13 எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டது.

  சனாதன தர்ம அறக்கட்டளையை நிறுவி அதன் முதன்மை அறங்காவலராக விளங்கினார்.  நுண்கலை,  தொழில்நுட்பம்,  அறிவியல், மருத்துவம், பத்திரிகை, மானுடவியல் மற்றும் பிற துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்த அறக்கட்டளை சன்மானம் செய்து கௌரவித்து வருகிறது.

  ஸ்ரீசிவானந்த மூர்த்தி இந்திய பாரம்பரிய இசை மற்றும் நாட்டியத்தை மேம்படுத்துவதற்காக ஆந்திர மியூசிக் அகாடமியை நிறுவினார்.  ஆனந்தவனம் ஆசிரமத்தில் ரெகார்டிங்களுக்காக அதிநவீன ரெக்கார்டிங் ஹால் கட்டப்பட்டு பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன.  ஆந்திர மியூசிக் அகாடமி ஒவ்வொரு ஆண்டும் ஹைதராபாத்தில் இசை விழாக்களை நடத்துகிறது.

  தெலுங்கு பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. திருப்பதி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத் இவருக்கு மகாமஹோபாத்யா என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. 2000 ல் சென்னையில் உள்ள ஸ்ரீராஜலட்சுமி அறக்கட்டளை இவருக்கு ஸ்ரீராஜலட்சுமி விருது வழங்கி பெருமை கொண்டது.

  இவர் தன் சொற்பொழிவுகளில் சனாதன தர்மத்தை நேர்மையுடன் பின்பற்றுவதால் விழுமியங்கள் உருவாகி ஆத்ம கௌரவம் மூலம்  இந்தியா புத்துயிர் பெறும் என்று எடுத்துரைத்தார்.

  உலகெங்கிலுமுள்ள ஆன்மீகர்களால் நன்கு அறியப்பட்ட சத்குரு ஸ்ரீ சிவானந்தமூர்த்தி தன் 87ம் வயதில் 2015 ஜூன் 10 ம் தேதி  புதன்கிழமை அதிகாலை காலமானார்.  சிறிது நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர் வாரங்கலில் முலுகு சாலையில் உள்ள குருதாமில் சிவனடி சேர்ந்தார். ஸ்ரீசிவானந்த மூர்த்தி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி போன் செய்து அவரது உடல்நலம் குறித்து  விசாரித்தார்.

  சத்குரு ஸ்ரீசிவானந்தமூர்த்தி சனாதன தர்மத்தின் நற்கூறுகளுக்கு ஏற்ப கலையையும் இலக்கியத்தையும் புதுப்பிக்கும் பாலமாக விளங்கினர்.  ஆன்மீக தத்துவ ரகசியங்களை உபதேசித்து மக்களை நல்வழி நடத்த அயராது பாடுபட்டார். இவருக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.

  கட்டுரை:- ராஜி ரகுநாதன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,746FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-