August 2, 2021, 5:39 am
More

  ARTICLE - SECTIONS

  சிறுகதை: முன் இருக்கை!

  இனிமேல் வாழ்க்கை என்னும் பயணத்தில் முன் இருக்கையில் அமர ஒருபோதும் தயங்கக் கூடாது, முன் இருக்கை தரும் அனுபவங்கள் அலாதியானது

  bus seat - 1

  சிறுகதை : முன் இருக்கை
  – ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்

  பேருந்து பயணம் என்பது பலருக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கும். சிலருக்கு பயணிக்க வேண்டும் என்று கட்டாயத்தில் இருப்பர். ரேகாவிற்கு சின்ன வயதிலிருந்து பேருந்து பயணம் என்றால் பிடித்ததாகவே இருந்தது.

  அவள் தஞ்சை மாவட்டத்திலேயே அதிகம் பயணம் செய்ததால் சோழன் போக்குவரத்துக் கழக பேருந்துகளிலேயே பயணம் செய்யும் படி ஆயிற்று. ரேகாவின் அம்மா, அந்த பஸ்களில் எழுதியிருக்கும் திருக்குறளை அவர்கள் இறங்கும் இடம் வரும் முன் மனப்பாடம் செய்ய சொல்வது வழக்கம். அதனாலேயே திருக்குறளில் ரேகாவிற்கு ஆர்வம் கூட வந்தது.

  திருமணத்திற்கு பின் வெவ்வேறு மாநிலங்களுக்கு அவள் சென்றதனால் பஸ்ஸில் பயணம் செய்வது குறைந்தது. அவளது உறவினர்களும் அருகாமை ஊர்களில் இல்லாததால் பஸ் பயணத்தை விட இரயிலில் செல்வதே வசதியாய் இருந்தது அவளுக்கு.

  இதற்கிடையில் ஒரு விசேஷத்திற்காக ரேகா குடும்பத்திற்கு இரண்டு மணி நேரமே பயணம் செய்ய வேண்டியிருந்ததால், சாலையும் கொஞ்சம் சரியாய் இல்லாததால் அவள்குடும்பத்தினர் பேருந்தில் செல்ல முடிவெடுத்தனர்.

  ஒரு தனியார் பேருந்து தான் அவர்களுக்கு கிடைத்தது. அவளது மகன்கள் முன் இருக்கையில் உட்கார மறுத்ததால், ரேகாவிற்கு அந்த இருக்கையில் உட்காரும் படி ஆயிற்று.
  முன்பெல்லாம் பேருந்து பயணத்தை விரும்பும் ரேகாவிற்கு இன்றோ கொஞ்சம் இளைப்பாற வேண்டும் என்று இருந்தது.

  அவள் கண்ணை மூடி ஓய்வெடுக்கும் சில நொடிகளில் அந்த நடத்துனர் அடிக்கடி பேருந்தை நிறுத்த அடிக்கும் விசில் சப்தத்தினால் தூக்கம் கலைந்தது, ரேகாவிற்கு. இதனால், அவளும் தன் முடிவை மாற்றிக் கொண்டு பயணத்தை ரசிக்க முடிவெடுத்தாள். நடத்துனர் மற்றும் பயணிகளுக்கு நடந்த உரையாடல்களை அவள் ரொம்பவே ரசித்தாள்.

  சிறிது தூரத்தில் ஒரு கிராமத்தை அடைந்தவுடன் அங்கு மக்கள் குழாமாய் நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்த விசிலார் ( நடத்துனர்), “இந்தக் கும்பலில் இருந்து மூன்று அல்லது நான்கு பயணிகள் தான் பேருந்தில் ஏறுவார்கள்,” என்றார். மூன்றும் அல்ல நான்கும் அல்ல. இரண்டரை டிக்கெட்டுகள் ( ஒரு தம்பதி மற்றும் அவர்களின் குழந்தை) தான் பஸ்ஸில் ஏறினார்கள். இந்தக் கால நடத்துனர்கள் கூட பயணிகளின் மனதை படம்பித்துள்ளனரே, என்று ரேகாவிற்கோ ஆச்சரியம் ஆனது,

  ஒரு சில நொடிகளில் ஒரு கிராமத்துப் பெண் விசிலாருடன் விவாதத்தில் ஈடுபட, ரேகா, ஆர்வ மிகுதியால் அவர்களின் விவாதத்தை கேட்கத் தயாரானாள். விசிலார் அந்தப் பெண் மற்றும் அவள் குழந்தைக்கு இரண்டு டிக்கெட்டுகளைப் போடப் போக, அந்தப் பெண்ணோ, அன்று காலையில் வேறோரு பேருந்தில் ஒன்றரை டிக்கெட் எடுத்ததைக் காண்பித்த போது, ரேகா தன்னையுமறியாமல் ” சபாஷ் பெண்ணே,” என்று அவளைப் பாராட்டினாள். விசிலாரோ வழிந்த படியே மீதிப் பணத்தை பெண்ணிடம் கொடுத்தார்.

  அடுத்த நிறுத்தத்தில் ஏறிய ஒரு பெரியவரோ தன் சாக்குப் பையை ரேகாவின் சீட்டுக்கடியில் வைத்து விட்டு, அவரது குடும்பத்தினருக்கு வாட்ஸ்-அப் வீடியோ காலில் தான் பத்திரமாக பஸ் ஏறியதை தெரிவித்த போது, ரேகா, அதிசயித்துத் தான் போனாள்.

  ஒரு குழந்தையுடன் ஏறிய பெண்மணியை சமாளிப்பதில் விசிலாருக்கு ஏற்பட்ட தோல்வியை நினைத்து, நினைத்து வெகு நேரம் சிரித்துக் கொண்டே இருந்தாள், ரேகா. விசிலார், “குழந்தைக்கு டிக்கெட் எடும்மா,” என்றவுடன், அந்தப் பெண்ணோ,”தம்பிக்கு ஐப்பசி மாதம் வந்தா தாங்க மூணு வயசாகுது,” என்றாள். உடனே, விசிலார், “தம்பியைப் பார்த்தா அப்படி தெரியலையே அம்மா,” என்றவுடன், ” அந்தப் பெண்ணோ, “தம்பி, வாயை திறந்து பால் பல்லைக் காட்டு, ஐயாவுக்கு”, என்ற அம்மாவின் அறிவியல் சார்ந்த வழிமுறையை நினைத்து பெருமிதம் அடைந்தாள், ரேகா.

  அடுத்த நிறுத்தத்தில் ஏறிய பல பெண்கள் அன்று கொண்டாடும் ஒரு பண்டிகைக்காக பாரம்பரிய உடையணிந்து பரஸ்பரம் வாழ்த்துத் தெரிவித்தனர். ரேகாவும் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டாள்.

  சில நிமிடங்களில் பஸ் திரும்பவும் நின்றது. ரேகா முன் இருக்கையில் இருந்ததால் ” இப்போ, யாரு ஏறுகிறார்கள்,” என ஆவலுடன் பார்க்க, ஒரு சின்னப் பையனுடன் ஒருவர் ஏறினார். அந்தப் பையனோ வெளியில் கசங்கிய அழுக்கான வேஷ்டியில் இருந்த பெரியவரைப் பார்த்து, “தாத்தா, உடம்பை நல்லாப் பார்த்துக்கோங்க,” என்றான். பிறகு தடவியப் படியே தன்னுடன் வந்தவருடன் மேலே ஏறி வந்தான் அந்தக் கண் தெரியாதப் பையன். இதனைக் கண்ட ரேகாவின் கண்களும் பனித்தன.

  சிறிது நேரப் பயணித்திற்கு பிறகு ரேகா இறங்கும் இடமும் வந்தே விட்டது. பயணத்தின் போது கண்ட காட்சிகளை நினைவு படுத்திய ரேகா, ” இனிமேல் வாழ்க்கை என்னும் பயணத்தில் முன் இருக்கையில் அமர ஒருபோதும் தயங்கக் கூடாது, முன் இருக்கை தரும் அனுபவங்கள் அலாதியானது,” என்று தனக்குள்ளே முடிவெடுத்து தான் போகும் இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள், ரேகா தன் குடும்பத்தாருடன்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,336FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-