October 22, 2021, 12:47 pm
More

  ARTICLE - SECTIONS

  அண்ணா என் உடைமைப் பொருள் (6): சாயி லீலைகள் இரண்டு!

  இந்த மூன்று நிகழ்வுகளுமே அண்ணாவை எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.

  anna

  அண்ணா என் உடைமைப் பொருள் – 6
  – வேதா டி. ஸ்ரீதரன் –

  சாயி லீலைகள் இரண்டு

  இடையே ஒரு சின்ன ப்ரேக். அண்ணா பற்றி நான் எழுத விரும்பாததற்கு அண்ணாவின் இயல்பு தான் முழுக் காரணம் என்று முதல் பதிவில் சொல்லி இருந்தேன்.

  இது சரியானது தான் என்றாலும், இதுவே முழு உண்மை அல்ல. இதற்கு வேறு சில துணைக் காரணங்களும் உண்டு.

  ஒருசில அதி முக்கியமான சம்பவங்களைப் பற்றி அண்ணா என்னிடம் கூறி இருக்கிறார். ஆனால், அவற்றை எந்த இடத்திலும் அவர் எழுதவில்லை. எழுதாதது மட்டுமல்ல, அவற்றில் ஒரு சம்பவத்தைப் பற்றி எழுத இருப்பதாக புலி வருது பாணியில் அப்பறம், அப்பறம் என்று போக்குக் காட்டியும் வந்தார். இதற்குக் காரணம் அவரது தயக்கம்தான் என்பதை என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அண்ணாவே எழுதாமல் விட்டுவிட்ட இதுபோன்ற விஷயங்களை நான் எழுத்தில் வடிப்பது முறையற்ற செயல். இதேபோல அண்ணாவைப் பார்க்க வந்த நபர்கள் தெரிவித்த சில தகவல்களும் உண்டு. அவற்றைப் பற்றியும் எழுத விருப்பம் இல்லை.

  அண்ணாவைப் பற்றி எழுதுவது என்றால், நான் அவரைப் பார்த்த கோணத்தில் மட்டுமே என்னால் எழுத முடியும். இதில், அவருக்கும் எனக்கும் இடையே நிலவிய அந்நியோன்னியமும் உண்டு. ஊடல்களும் உண்டு. (அந்நியோன்னியத்தின் உச்சபட்சம் தான் ஊடல்.) சாக்ஷாத் அம்பாள் வடிவம் என்று மனதளவில் அவரை நான் தஞ்சமடைந்ததும் உண்டு, அடிவயிற்றில் இருந்து அவரைச் சபித்ததும் உண்டு. இரண்டுமே பெர்சனல் விஷயங்கள். நிச்சயமாக என்னால் அவற்றை எழுத முடியாது.

  மேலும், அண்ணா என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல. என்னதான் அவர் தனிமைக் குகைக்குள் அடைந்திருந்தாலும் அவரைச் சுற்றி ஏராளம் பேர் இருந்தனர், அவ்வப்போது எத்தனையோ விஷயங்கள் அலையடித்தன. அவற்றை எல்லாம் எழுதுவது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உவப்பான விஷயமாக இருக்காது என்பதும் ஒரு காரணம். (அண்ணா பெரியவாளின் சரிதம் எழுத ஆரம்பித்ததும், அதற்கு ஆசி அளித்த பெரியவாளே அதைப் பிரசுரம் பண்ண வேண்டாம் என்று தடை போட்டதையும் நாம் அனைவரும் அறிவோம். அதற்குப் பெரியவா சொன்ன காரணமும் இத்தகையதே.)

  Ra Ganapathy - 1

  இதுபோன்ற விஷயங்கள் எதுவும் இல்லாமல் அண்ணாவைப் பற்றி என்னதான் எழுத முடியும்?

  நேற்று மாலை ஶ்ரீ சக்திவேலைத் தொடர்பு கொண்டு பேசினேன். ‘‘நான் அண்ணா பற்றி எழுதுவதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?’’ என்பது அவரிடம் நான் முன் வைத்த கேள்வி.

  ‘‘பதிவுகள் நல்லபடியாகத் தானே இருக்கின்றன. இந்நிலையில் இத்தகைய கேள்விக்கான காரணம் என்ன?’’ என்று அவர் பதில் கேள்வி கேட்டார்.

  மேலே குறிப்பிட்டிருக்கும் காரணங்களை நான் அவரிடம் விளக்கினேன். அண்ணாவின் அன்புத் தம்பியர் சிலருக்கு நான் அவரைப் பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லையோ என்ற ஐயம் எனக்குள் எழுவதாகவும் தெரிவித்தேன்.

  (என்னிடம் யாரும் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், அண்ணாவுடன் தொடர்புடைய விஷயங்களில் எனக்குள் தோன்றும் எதையும் முழுக்க முழுக்க என்னுடைய எண்ணம் என்று கருதி விட முடிவதில்லை. பெரும்பாலும் அது அவரது சங்கல்பமாகவே இருந்திருக்கிறது என்பதே என் அனுபவம்.)

  அதற்கு சக்திவேல், ‘‘செய்வது நல்ல வேலை தான். முடிந்த வரை செய்யுங்கள். முடியாத பட்சத்தில் விட்டு விடுங்கள். யாராவது வருத்தம் தெரிவித்தால் அது குறித்து அப்போது யோசிக்கலாம். இப்போதைக்கு உங்கள் பதிவுகள் அப்படியே தொடரட்டும்’’ என்று கூறினார்.

  இன்று காலை ஶ்ரீ மோகனராமனிடம் இருந்து ஒரு மெயில். ஸ்வாமியின் இரண்டு லீலைகள் குறித்து நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் சுய புராணம் அதிகம் இருக்கும் என்பதால் அவற்றைப் பற்றி விரிவாக எழுதவில்லை. இதைத் தனது மெயிலில் சுட்டிக் காட்டிய ஶ்ரீ மோகனராமன், சுய புராணம் என்று எந்தச் சம்பவத்தையும் தவிர்க்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார். சுய புராணமாகத் தெரியும் விஷயங்கள் – பாயசத்துக்கு முந்திரி, ஏலம், பாதாம், கிராம்பு மாதிரி – முக்கிய விஷயத்துக்குச் சுவை கூட்டும் சமாசாரங்களாக இருக்கும் என்று அவர் சொல்லி இருந்தார்.

  (இந்த முந்திரி முதலான பொருட்கள் பற்றி அண்ணா ஒருமுறை சொன்னது இப்போது நினைவு வருகிறது. அண்ணா ஒருமுறை, ‘‘அரவிந்தர் எழுத்துகளைப் படித்திருக்கிறாயோ?’’ என்று கேட்டார். நான் வேகவேகமாக ஊகூம் சொன்னேன். உடனே அண்ணா, ‘‘சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டிருக்கிறாயா?’’ என்றார். கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல் மலங்க மலங்க முழித்தவாறு, ‘‘சாப்பிட்டிருக்கிறேன்’’ என்று பதில் சொன்னேன். அவர், ‘‘சர்க்கரைப் பொங்கலில் வெல்லம், ஏலம், முந்திரி, கிராம்பு, பச்சைக் கர்ப்பூரம், திராட்சைப் பழம் எல்லாம் போட்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பொருட்களை மட்டும் வைத்து சர்க்கரைப் பொங்கல் பண்ணினால் யார் சாப்பிடுவது? அதே மாதிரிதான் அரவிந்தர் எழுத்தும். ஒரு பெரிய கட்டுரை அல்லது கவிதையில் ஆங்காங்கே ஏதோ ஓரிரண்டு quotable quotes இருந்தால் சுவையாக இருக்கும். அப்படி இல்லாமல் quotable quotes-ஐ மட்டும் வைத்துப் பக்கம் பக்கமாக எழுதினால் எப்படிப் படிக்க முடியும்?’’ என்றார்.)

  மீண்டும் மோகனராமன் மெயிலுக்கே வருகிறேன். போன பதிவில் நான் எழுதாமல் தவிர்த்த இரண்டு சம்பவங்களையும் எழுதுமாறு அவர் சொல்லி இருப்பதால் அவற்றை இங்கே விரிவாக எழுதுகிறேன்.

  முதல் சாயி தரிசனம்

  பல வருடங்களாக எனது வாழ்க்கை விரக்தியிலேயே கழிந்தது. எப்போதுமே மனதில் நிறைய ஏக்கங்கள் உண்டு. பல சமயங்களில் அவை பொருளாதாரம், அங்கீகாரம், உயர் ஸ்தானம் சார்ந்தவையாக இருக்கும். எப்போதாவது சில சமயம் சுய தேடல் சார்ந்தவையாக இருந்ததும் உண்டு.

  நான் எழுமலையில் இருந்த நாட்களில் ஒருமுறை திடீரென அத்தகைய ஏக்கம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருந்தது. ஏதேதோ குழப்பமான நினைவுகள். இடையிடையே, சாய்பாபா, பெரியவா முதலிய மகான்கள் சம்பந்தம் வேண்டும் என்ற ஏக்கம் பிறந்தது. குறைந்தது, இந்தப் பிறவியில் இந்த இருவரையும் தொலைவில் இருந்து பார்த்துக் கை கூப்பும் பாக்கியமாவது கிடைக்குமா என்ற ஏக்கமும் எழுந்தது.

  இதற்குச் சில நாட்கள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்காகக் கொடைக்கானல் போயிருந்தேன். மாதாந்தரக் கூட்டமாகி அந்த நிகழ்ச்சி அந்த மாதம் கொடைக்கானலில் நடைபெற்றது. எங்கள் குழுவில் இருந்த ஶ்ரீ சிவராமன் என்பவருக்குத் தெரிந்த ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் என்ற மதுரை அன்பர் அன்று காலையில் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார். அவர் மூலம் ஸ்வாமி கொடைக்கானல் வந்திருப்பது தெரிய வந்தது. எங்கள் கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டு நாங்கள் அனைவரும் தரிசனத்துக்காகக் கிளம்பினோம். குளியல், சாப்பாடு முடிந்து நாங்கள் கிளம்புவதற்கு ரொம்ப தாமதமாகி விட்டது. நேரம் முதலான விவரங்கள் சரியாக நினைவில்லை. ஆனால், தரிசன நேரம் முடிந்த பின்னர்தான் நாங்கள் போய்ச் சேர்ந்தோம் என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

  அப்போது கொடைக்கானல் ஆசிரமத்தில் திறந்த வெளியில் தான் தரிசனம். நிறையப் பேர் – குறிப்பாக, வெளிநாட்டினர் – ஏற்கெனவே தரிசனத்துக்காக வந்து அமர்ந்திருந்தார்கள். நாங்கள் போய்ச் சேர்ந்து சிறிது நேரம் கழித்துத் தான் ஸ்வாமி அங்கே வந்தார். தொலைவில் இருந்தாவது அவரை தரிசிக்க முடிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  தரிசனத்துக்காக அங்கே காத்திருந்தவர்களில் பலர், கையில் ஏதோ காகிதத்தை ஏந்தியவாறு ஸ்வாமியையே பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் முகங்களில் மிகுந்த ஏக்கம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர்களில் ஓரிருவரிடமிருந்து மட்டும் அத்தகைய காகிதங்களை ஸ்வாமி எடுத்துக் கொண்டார். மற்றவர்களிடம் இருந்த காகிதங்களை அவர் கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் கைகளில் இருந்த காகிதம் என்ன என்று ஶ்ரீ சிவராமனிடம் கேட்டேன். ‘‘ஒரொருத்தரும் சொந்தக் கதை, சோகக் கதையெல்லாம் பக்கம் பக்கமா எழுதி எடுத்துண்டு வந்திருப்பாங்க’’ என்று அவர் விளக்கினார்.

  ‘‘அதை ஏன் சாய்பாபா அவங்க கிட்டேர்ந்து வாங்கிக்கலை?’’

  ‘‘ஶ்ரீதரா, அதெல்லாம் அவரோட சாய்ஸ். அவரை யார் கேள்வி கேட்கறது? அவருக்குத் தோணறதை எடுத்துப்பார். தன்னோட லெட்டரை அக்ஸெப்ட் பண்ணிக்க மாட்டாரான்னு நிறைய பேர் வாரக் கணக்கா காத்திருப்பாங்க.’’

  ‘ஆகா, இவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமா என்று நினைத்தேன். சில நாட்களிலேயே இப்படி எதிர்பாராத விதமாக தரிசனம் கிடைத்து விட்டது’ என்று அதுவரை மகிழ்ச்சியில் இருந்த எனக்கு அந்த மகிழ்ச்சி உடனடியாக மறைந்து விட்டது. ‘பாவம், இவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறார்களோ! இவர்கள் தரும் கடிதங்களை வாங்கிக் கொண்டால் இந்த சாய்பாபா எந்த வகையில் குறைந்து போய் விடுவார்?’ என்ற கேள்வி எனக்குள் பெரிதாக எழுந்தது. அதுவரை என் மனதில் மகான் ஸ்தானத்தில் வீற்றிருந்த ஸ்வாமி அப்போது கல் நெஞ்சக்காரராகக் காட்சியளித்தார்.

  mahaperiyava2 - 2

  இந்த தரிசன அனுபவத்தில் வியப்புக்குரிய செய்தி உண்டு என்று கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் இதில் இரண்டு அம்சங்கள் வியப்புக்குரியவை. முதலாவது அம்சம் சில மாதங்கள் கழித்துப் புரிய வந்தது. இரண்டாவது அம்சம் சில வருடங்களுக்குப் பின்னரே புரிந்தது.

  ஸ்வாமியின் கொடைக்கானல் விஜயம் பற்றி எங்களுக்குத் தகவல் தெரிவித்த மீனாட்சி சுந்தரம் என்ற அந்த மதுரைவாசி விரைவிலேயே சென்னைவாசி ஆகி விட்டார். அப்போது நானும் சென்னைவாசி ஆகியிருந்தேன். இருவருக்கும் இடையே ஓரளவு பரிச்சயமும் ஏற்பட்டிருந்தது.

  பகுத்தறிவுப் பாசறைகளின் வார்த்தைகளின் மூலமாகத் தான் ஸ்வாமி எனக்கு முதலில் அறிமுகமானார். சாய்பாபா படத்தின் முன்பாக நைவேத்யமாக வைக்கப்படும் பொருட்களில் கொஞ்சம் கொஞ்சம் மாயமாகி விடும் என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டதும் உண்டு. அதுவரை எனக்கு ஸ்வாமி பற்றிய அறிமுகம் இவ்வளவு தான்.

  இந்நிலையில், சாயி பக்தரான இந்த மீனாட்சி சுந்தரம் தான் முதன் முதலாக என்னிடம் ஸ்வாமி பற்றி ஒருசில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டவர். அவர் மூலம் நான் கேள்விப்பட்ட முதல் சாயி லீலை தாராபுரம் நடராஜன் வாழ்வில் நடந்தது.

  தாராபுரம் நடராஜன் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா இல்லை. அம்மா ஏதேதோ வீடுகளில் வேலை செய்து சம்பாதித்து நடராஜனைப் பள்ளியில் படிக்க வைத்தார். அம்மாவுக்குத் தீராத வியாதி ஏற்பட்டது. மரணத் தறுவாயில் அவர் நடராஜனிடம் அங்கிருந்த காலண்டரைத் தன் வயிற்றில் வைக்குமாறு கூறினார். நடராஜன் கைகளைப் பிடித்து, காலண்டரில் இருந்த முருகன் படத்தின் மீது வைத்த அவர், ‘‘முருகா, நீ தாண்டா என் மகனுக்குச் சோறு போடணும்!’’ என்று மீண்டும் மீண்டும் புலம்பியவாறே உயிர் நீத்தார்.

  அம்மாவின் மரணத்துக்குப் பின்னர் உறவினர் ஒருவரது ஆதரவில் வளர்ந்த நடராஜன், பள்ளிப் படிப்பை முடித்து ஆசிரியப் பயிற்சியும் பெற்று ஆசிரியராகப் பணியில் இணைந்தார். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருந்தன.

  இந்நிலையில் ஸ்வாமி பற்றி யதேச்சையாகக் கேள்விப்பட்ட அவருக்குள் ஒருவித ஏக்கம் – ஸ்வாமியை தரிசிக்க வேண்டும் என்று. இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் ஒருநாள் மாலை அவர் சாலை வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். தூரத்தில் யாரோ அவரைப் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார். ஏதோ பெரிய காரில் இருந்து யாரோ தலையை வெளியே நீட்டி இவரை அழைப்பது புரிந்தது. காருக்கு அருகே சென்றால், ஸ்வாமி உள்ளிருந்து இறங்குகிறார்.

  திடுதிடுப்பென்று ஸ்வாமியைப் பார்த்த அதிர்ச்சி மட்டுமல்ல, அடுத்தடுத்து நடராஜனுக்குப் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. ‘இவருக்கு எப்படி என் பெயர் தெரியும்?’ என்பது இரண்டாவது அதிர்ச்சி. ‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய்? நீ தானே நினைத்தாய். அதனால் தான் வந்திருக்கிறேன்’’ என்று ஸ்வாமி சொன்னது மூன்றாவது அதிர்ச்சி. ஒரு காகிதத் துண்டில் பொள்ளாச்சி விலாசம் ஒன்றை எழுதி நடராஜன் கையில் கொடுத்த ஸ்வாமி, மறுநாள் காலை ஒன்பது மணிக்கு அங்கு வருமாறு மிகவும் வற்புறுத்திச் சொன்னது அடுத்த அதிர்ச்சி. நடராஜன் திக்குமுக்காடிப் போய் விட்டார்.

  உணர்ச்சி மிகுதியால் இரவு சாப்பிடவோ உறங்கவோ முடியாமல் தவித்த அவர், விடியற்காலையில் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஸ்வாமி தந்திருந்த பொள்ளாச்சி விலாசத்துக்குச் சென்றார். சற்று நேரத்தில் வேகமாக வெளியே வந்த ஸ்வாமி, நடராஜனின் கைகளைப் பற்றி வேகமாக உள்ளே அழைத்துச் சென்றார். அங்கே நடராஜனுக்குத் தன் கையால் இலை போட்டு உணவு பரிமாறினார். நடப்பவை எதையும் நம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நடராஜனால் உணவருந்தவும் முடியவில்லை. ‘‘நீ ராத்திரியும் சாப்பிடலையே! நல்லாச் சாப்பிடு’’ என்று வற்புறுத்தி அவரைச் சாப்பிட வைத்தார், ஸ்வாமி. கை அலம்புவதற்கும் அவரே நீர் வார்த்தார். பின்னர் ஒரு வாழைப்பழத்தையும் தன் கையாலேயே உரித்துத் தந்தார்.

  அதன் பின்னர் நடந்தது தான் க்ளைமாக்ஸ். நடராஜன் வாழைப்பழம் சாப்பிட்டு முடித்ததும், ‘‘அப்பப்பா, எவ்ளோ வருஷம் ஆச்சு உங்கம்மா ப்ரார்த்தனை பண்ணி…’’ என்றாராம் ஸ்வாமி.

  மீனாட்சி சுந்தரம் இந்தச் சம்பவத்தைச் சொன்ன போது உணர்ச்சி மிகுதியில் எனக்குக் கண்ணீர் பெருகியது. மேலும், ஸ்வாமியைத் தரிசிக்க முடியுமா என்ற ஏக்கம் எனக்குள் பிறந்த வெகு சில நாட்களிலேயே அவரது தரிசனம் கிடைத்ததும் பளிச்சென நினைவு வந்தது. தாராபுரம் நடராஜனின் மனதில் தோன்றிய எண்ணத்தைப் போலவே தான் எனக்கும் தோன்றியது என்ற ஒற்றுமை புரிந்தது. ஸ்வாமியை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் தானாகவே எனக்குள் ஏற்பட்டதா அல்லது எனக்குள் எழுந்த எண்ணமே அவருடைய சங்கல்பம் தானா என்ற கேள்வி பிறந்தது.

  கொடைக்கானல் தரிசனத்துக்குக் காரணமான அதே மீனாட்சி சுந்தரம் வாயிலாக நடராஜன் வாழ்க்கைச் சம்பவத்தை எனக்குச் சொல்ல வைத்தது ஸ்வாமியின் லீலையோ என்ற கேள்வியும் எழுந்தது. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்ற திருவாசக வரி நினைவில் ஓடியது.

  கொடைக்கானல் தரிசனம் யதேச்சையானதா அல்லது அதில் எனக்கென்று பிரத்தியேகமான செய்தி உள்ளதா என்ற கேள்வி பல நாட்கள் என் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.

  சில வருடங்கள் கழிந்த பின்னர் அண்ணாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. பெரியவா மீதும், ஸ்வாமி மீதும் அவர் எழுதிய நூல்களை விரும்பிப் படித்தேன் கொஞ்சம் கொஞ்சமாக அண்ணாவுடன் நெருக்கம் வளர்ந்தது. ஸ்வாமி தரிசனங்களுக்கும் சென்றதுண்டு. ஒருமுறை வொயிட்ஃபீல்டில் சர்வீஸ் பண்ணச் சென்றதும் உண்டு. இந்தக் காலகட்டத்தில் ஒருநாள் அண்ணா, ‘‘ஸ்வாமி பற்றி ஏதாவது இதற்கு முன்னால் கேள்விப்பட்டதுண்டா?’’ என்று வினவினார். இந்தச் சம்பவத்தை அவரிடம் தெரிவித்தேன். கொடைக்கானல் தரிசனத்தைப் பற்றியும் தகவல் தெரிவித்தேன். (அதுவரை அண்ணா தாராபுரம் நடராஜனைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று குறிப்பிட்டார்.)

  இந்தக் காலகட்டத்தில் தான் எனக்கு ஸ்வாமியின் பங்சுவாலிடி தெரிய வந்தது. ஸ்வாமி என்றைக்கும் எந்த வேலையிலும் – குறிப்பாக, தரிசனம் தருவது போன்ற நிகழ்வுகளில் – நேரம் தவறியதே இல்லை. ஆனால், கொடைக்கானலில் நாங்கள் தரிசனத்துக்குச் சென்றிருந்த போது நாங்களும் லேட், ஸ்வாமியும் லேட்.

  அன்று நாங்கள் இருந்த சூழ்நிலையில் தாமதமாகவாவது தரிசனத்துக்குப் போக முடிந்ததே பெரிய விஷயம்தான். உண்மையில் ஸ்வாமி லேட்டாக வந்தார் என்பது தான் நம்பவே முடியாத அதிசயம். இது புரிந்த போது, அவர் எனக்காகவே தாமதமாக வந்தார் என்பது எனக்கு ஸ்பஷ்டமாகப் புரிந்தது.

  இதற்குச் சில வருடங்கள் பின்னால் – அண்ணாவிடம் வந்த பிறகு – ஒருமுறை தரிசனத்துக்காகக் கொடைக்கானல் சென்றிருந்தேன். அதுவும் வினோதமான அனுபவம் தான். அதுமட்டுமல்ல, ஸ்வாமி, யோகி ராம்சுரத் குமார், பெரியவா என்ற முக்கோணத்துக்குள் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றும் உண்டு. யோகியார் ஒருமுறை அண்ணாவுக்கு என் மூலம் பிரசாதம் கொடுத்தனுப்பியதும் மிகமிக விசேஷமான சம்பவம்.

  இந்த மூன்று நிகழ்வுகளுமே அண்ணாவை எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-