October 16, 2021, 7:20 am
More

  ARTICLE - SECTIONS

  அவர் பெயர் ‘ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி’!

  பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்கும் ஒரு ஆட்சியை, கலவரம் மூலமாக அகற்ற நினைக்கும் ஒரு சக்தியை, அமைதி நிலவும் சமூகத்தில்

  stanesamy - 1

  சமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி?!

  ஸ்டான் லூர்துசாமி, மக்களால் ஸ்டான் சாமி என அழைக்கப் படுவார். 1937 ஆம் ஆண்டு, ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சியில் பிறந்தார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். அங்கு ஜேசுட் (Jesuit) என அழைக்கப்படும் “இயேசு சபை” மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, அந்த அமைப்பின் மேல் ஈடுபாடு கொண்டு இருந்தார்.

  1965 ஆம் ஆண்டு ஜார்க்கண்டில் உள்ள செயின்ட் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். 1970 ஆம் ஆண்டில் பிலிப்பைன்சில் இறையியலாளர் (Theology) படிப்பும், சமூகவியல் துறையில் மேல்படிப்பும் (Master’s in Sociology)  பயின்றார். 1971 ஆம் ஆண்டு, ஜம்ஷெட்பூர்  கத்தோலிக்க சபையின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், 1975 முதல் 1986 ஆம் ஆண்டு வரை, பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படும் சமூக அமைப்பிற்கு இயக்குனராக பணி புரிந்தார்.

  பீமா – கோரேகான் சம்பவம்
  (Bhima – Koregaon)

  ஜனவரி 1 ஆம் தேதி, 1818 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, மராத்தியப் பேஷ்வா படைகளுக்கும்,  பிரிட்டிஷாரின் படையினருக்கும், பீமா நதிக்கரை கிராமமான கோரேகானில் மோதல் ஏற்பட்டது. அதில், உள்ளூர் படைகளைச் சேர்ந்த “பேஷ்வா” (Peshwa) படையினர், தோல்வி அடைந்தனர்.

  இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் 200 வது நூற்றாண்டு விழாவை, ஜனவரி 1 ஆம் தேதி, 2018 ஆம் ஆண்டு சிலர் கொண்டாடினர். அதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரிட்டிஷாருக்கு எதிரான போரில், தமது சொந்த மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வை மகிழ்வுடன் கொண்டாடும் இயக்கத்திற்கு, உள்ளூர் மக்கள் கடும் ஆட்சேபனையை தெரிவித்ததுடன், அவர்களை எதிர்த்து போராட்டமும் செய்தனர்.

  அது மிகப் பெரும் கலவரமாக மாறியது. இதன் எதிரொலியாக, அந்த நிகழ்வில் பங்கேற்ற சமூக செயல்பாட்டாளர்கள் மீது புனே போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அரசுக்கு எதிராக சதியில் ஈடுபட்டு இருப்பதாகவும், கலவரம் தொடர்பாகவும், இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் என தொடர்புடைய  பலரை, மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.

  stanesamy1 - 2

  ஸ்டான் லூர்து சாமிக்கும்
  நடந்த கலவரத்திற்கும் உள்ள தொடர்பு!

  நடந்த கலவரத்திற்கும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது என ஆதாரங்கள் கிடைத்தன. அந்த அடிப்படையில், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப் பட்டனர்.

  “மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்” (Commuist Party of India – Maoist) என்ற அமைப்பு, நமது நாட்டில் தீவிரவாத அமைப்பு என கருதப்பட்டு,  2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு.

  அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால், தங்களது உருவத்தை மாற்றி, இந்தியன் அசோசியேஷன் ஆப் பீப்பிள்ஸ் லாயர்ஸ் (Indian Association of People’s Lawyers) என்ற அமைப்பின் பெயரில் இயங்கி நமது நாட்டை சீர்குலைக்கும் எண்ணத்தோடு செயல்பட்டார்கள் என்று குற்றச்சாட்டும் உள்ளது.

  வில்சன் மற்றும் காட்லிங்கிடம் (Wilson and Gadling’s) இருந்து கைப் பற்றப்பட்ட கடிதத்தில், பாரதப் பிரதமரை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது, குறிப்பிடப் பட்டு இருந்தது. அதற்கு தேவையான  துப்பாக்கிகளும், தோட்டாக்களும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

  ஸ்டான் லூர்து சாமிக்கும், அந்த இயக்கத்தை சேர்ந்த மற்றவருக்கும், சுமார் 140 இ-மெயில்கள் மூலம், தங்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொண்டனர் எனவும், அதில் “தோழர்கள்” எனக் குறிக்கும் சொல்லான “காம்ரேட்ஸ்” (Comrades) என்னும் வார்த்தை பயன் படுத்தப்பட்டு இருப்பதாகவும், சிறப்பு நீதிபதி கோத்தாலிகர் (D.E. Kothalikar), தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

  மோகன் என்ற ஒரு தோழரிடம், எட்டு லட்ச ரூபாய் பணம், ஸ்டான் லூர்து சாமி, மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுக்காக பெற்றார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

  2018 முதல் 2020 வரை யில், ஸ்டான் லூர்து சாமி சம்மந்தப்பட்ட இடத்தில், போலீசார் பரிசோதனை செய்த போது, 40 பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், நக்சல் பாரி சம்பந்தப்பட்ட 50 வருடத்திற்கும் மேலான பழைய புத்தகங்கள் கைப்பற்றப் பட்டதாகவும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல தரப்பட்ட பத்திரிக்கை செய்திகள், சுற்று அறிக்கைகள் கைப்பற்றப் பட்டதாகவும், அர்பன் கொரில்லா (Urban Guerrilla) என்ற சிறிய கையடக்க புத்தகம் கைப்பற்றப் பட்டதாகவும், பலதரப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சம்பந்தமான தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாகவும், குற்றச்சாட்டுகள் உள்ளன.

  2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, புனேவில் அமைந்து உள்ள “எல்கார் பரிஷத்” (Elgar Parishad) என்ற இடத்தில்,  கலவரத்தை தூண்டும் வகையில், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் பேசினார்கள் எனவும், அதன் மூலமே, “களம் கலவரமாக மாறியது” எனவும், அங்கு வாழும் மக்களைக் கொண்டே பெரும் கலவரம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும்,  அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக கலவரம் செய்ய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் முனைகிறார்கள் எனவும் இவற்றுக்கு எல்லாம், மூலக் காரணமாக ஸ்டான் லூர்து சாமி செயல்பட்டார் எனவும், நமது நாட்டின் ஜனநாயகத்தை அப்புறப்படுத்த முழு வீச்சில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்டுகள் செயல்படுகிறது எனவும், கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

  மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்டுடன் தொடர்புடைய  “துன்புறுத்தப் பட்ட கைதிகள் ஒற்றுமை குழு”வின்  (Persecuted Prisoners Solidarity Committee) தலைவராகவும், ஸ்டான் லூர்து சாமி உள்ளார்.

  கம்யூனிஸ்ட்டுகள் வேண்டுகோள்: 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, ஸ்டான் லூர்து சாமி, கைது செய்யப் பட்டார். அவரது உடல் நலத்தை காரணம் காட்டி, மருத்துவ மனையில் அனுமதிக்கக் கோரி,  காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆளும் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு, கம்யூனிஸ்ட்டுகள் வேண்டுகோள் வைத்தனர்.

  உடல் நலப் பரிசோதனைக்குப் பின்னரே சிறையில் அடைப்பு:

  தொடக்கத்தில் மாநில போலீசார், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர். பின்னர், அது என்.ஐ.ஏ. (N.I.A.)விற்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை செய்யப் பட்டது.

  ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்கப் படும் போது, அவருடைய உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்படும். அவருக்கு எந்தவித உடல் உபாதைகளும் இல்லை என அறியப்பட்ட பின்னரே, கைது செய்யப் பட்டவர், சிறையில் அடைக்கப் படுவார். என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் விசாரணையின் போது அவர் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் ஸ்டான் லூர்து சாமிக்கு, எந்தவித உடல் பாதிப்பும் இல்லை என தெளிவாக பரிசோதனை செய்த பின்னரே, மும்பையில் உள்ள தலோஜா மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

  ராஞ்சியில் இருந்து மும்பைக்கு அவரை அழைத்து வந்த போது, அவருக்கு தேவையான, எல்லா வகையான வசதிகளும் செய்து தரப்பட்டன. மேலும், விமான பயணத்தின் போது அவருக்கு அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டன.

  நடுக்குவாதம் என்று அழைக்கப் படும் பார்க்கின்சன் நோயால் (Parkinson’s Disease) பாதிக்கப்பட்டு உள்ளார் என ஸ்டான் லூர்து சாமி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மருத்துவ குறிப்பில் அதற்கான ஆதாரம் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. மேலும், தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ஒரு வருடத்திற்கு முந்தைய, பழைய தேதியிட்ட மருத்துவ சான்றிதழ்களே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

  staneswamy - 3

  வயது மூப்பின் காரணமாக, அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும், கோரிக்கை வைத்தனர். ஒருவர் எந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டாலும், அந்த குற்றத்திற்கான தண்டனை தான் வழங்கப் படுமே தவிர, அவரது வயதின் அடிப்படையில், தண்டனை வழங்கப் படாது, என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

  நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒருவரை, எவ்வாறு மன்னிக்க இயலும்? அவர் எந்த மதமாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், அவரின் குற்றத்தை தான் காண வேண்டுமே தவிர, அவரின் மதத்தையோ மொழியையோ அல்ல!

  நமது நாட்டில் நடப்பது சட்டப் படியான ஆட்சி. ஜனநாயகத்தின் மீது அனைவரும் நம்பிக்கை கொண்டு, தங்களுக்கு விருப்பப்பட்ட சின்னத்திற்கு வாக்கு அளித்து, பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்கும் ஒரு ஆட்சியை, கலவரம் மூலமாக அகற்ற நினைக்கும் ஒரு சக்தியை, அமைதி நிலவும் சமூகத்தில், பதட்டத்தை உருவாக்க முயல்பவர்களை, எவ்வாறு மன்னிக்க இயலும்?

  • அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,142FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,560FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-